எங்க அண்ணன் ஆட்சியில எங்களுக்கு பாதுகாப்பே இல்ல.. விஜய்யை பார்க்க வந்த பெண் வேதனை
ஈரோடு: தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டிவரக்கூடிய நிலையில், ஈரோடு பெருந்துறையில் முதல்வர் விஜய்யை பார்க்க வந்த அவரது ரசிகர்கள், ரசிகைகளே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளனர்.
விஜய்யை பார்க்க காத்திருந்த பெண் ஒருவர், "பெண்கள் பாதுகாப்பை மட்டும் மேம்படுத்திக்கொடுங்கள்.. இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்ற பெயர் எப்போதுமே வரக்கூடாது. கண்டிப்பாக உங்கோளட தங்கச்சிகளுக்கு எல்லா இடத்திலும் பாதுகாப்பு இருக்கனும்" என்று தனது கோரிக்கையை முன்வைத்தார்.

விஜய்யின் ரசிகை பேச்சு
தமிழக முதல்வர் விஜய் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை சென்றார். மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தொழில் தொடங்குவதற்காக வங்கிக் கடன் வழங்கும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக பெருந்துறைக்கு விஜய் சென்றார். முதல்வர் விஜய் ரோடு ஷோவாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்றார்.
இதனால் விஜய்யை காண சாலையின் இருபக்கத்திலும் மக்கள் திரண்டு இருந்தனர். விஜய் வருகைக்காக காத்திருந்தபோது அங்குள்ள மக்கள் விஜய் பாடல்களை ஒலிக்கவிட்டு நடனம் ஆடி மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். அப்போது முதல்வர் விஜய்யை காண வந்த இளம்பெண் ஒருவர், தவெக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று பரபரப்பாக கூறினார். விஜய்யின் ரசிகையான அந்த பெண் கூறியதாவது:-
யார் என்ன சொன்னாலும் உங்களோட போக்கில் நீங்க செஞ்சிகிட்டே இருங்கண்ணா.. அது போதும் எங்களுக்கு.. நாங்க எல்லாருமே உங்க ரசிகைகள்.. நாங்க உங்களுக்கு சப்போர்ட்டுக்கு இருக்கோம். ஆனால் ஒரு முக்கியமான வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் நிறைய பேர் நிறைய கருத்து சொல்றாங்க..
ரொம்ப வருத்தமாக இருக்கு
குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு சொல்றாங்க.. உங்களோட ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பை எதிர்பார்த்தோம். இப்ப கூட நிறைய விஷயங்கள் நடக்குது.. 10, 15 நாள் முன்னாடி விஜயமங்கலத்தில் கூட ஒரு விஷயம் நடந்துச்சு.. அதெல்லாம் பார்க்கும் போது எங்க அண்ணனோட ஆட்சியில் இப்படி எங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கே என்று ரொம்ப வருத்தமாக இருக்கு..
குறை சொல்லவில்லை. நீங்க இன்னும் கொஞ்சம் பாதுகப்பு கொடுக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் நாங்கள் இங்கே தனியாக போறதுக்கு ஒரு துணிச்சலை நீங்கள் கொடுக்க வேண்டும். அதைத்தான் நாங்க எதிர்பார்க்கிறோம். இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்ற பெயர் எப்போதுமே வரக்கூடாது. கண்டிப்பாக உங்கோளட தங்கச்சிகளுக்கு எல்லா இடத்திலும் பாதுகாப்பு இருக்கனும்.
கொஞ்சம் கடுமையாக நடவடிக்கை எடுங்க..
நான் சொல்லக்கூடிய விஷயம் ஒன்னே ஒன்னுதான். எந்த இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற விஷயம் வரக்கூடாது. எனவே அதுக்கு உண்டான நடவடிக்கையை மட்டும் கொஞ்சம் கடுமையாக எடுங்க.. அதுதான் எங்களின் மிகப்பெரிய கோரிக்கை. ஏனென்றால் எல்லா விஷயத்தையும் நீங்க மாற்றிகிட்டு வார்றீங்க.. நாங்க பார்த்துட்டுதான் இருக்கோம்.
எங்க கிட்ட குறை சொல்றவங்க கிட்ட கூட நாங்க சப்போர்ட் பண்ணிதான் பேசுறோம். ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் எல்லோருடைய கோரிக்கையாக தயவு செய்து நீங்க எடுத்துக்கோங்க.. பாதுகாப்பு நடவடிக்கையை மட்டும் கடுமையாக கொடுங்க" என்றார்.
சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நாள்தோறும் கொலை, குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் எதிர்கக்ட்சிகள் கடுமையான குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழலில், தவெக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு சரிவர இல்லை. அதை மேம்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று விஜய்யின் தீவிர ரசிகர், ரசிகைகளே சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.




Click it and Unblock the Notifications
