அடக் கொடுமையே! தினமும் கழிவறையை சுத்தம் செய்த அரசுப் பள்ளி மாணவர்கள்.. தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
ஈரோடு: ஈரோட்டில் அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் சின்னஞ்சிறு சிறார்களை தினமும் கழிவறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்தி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவர்களை எந்த எடுபிடி வேலைகளுக்கும் பயன்படுத்தக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ள போதிலும், ஏதோ வீட்டு வேலைக்காரர்களை போல கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியையை பணிநீக்கம் செய்ய வேண்டும் என பெற்றோர்களும், ஊர் மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் பள்ளி தலைமை ஆசிரியையை விசாரணைக்கு வருமாறு மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரணகளமாகிப் போன சென்னை காங். தலைமை அலுவலகம்.. நிர்வாகிகள் கோஷ்டி மோதலால் போலீஸ் குவிப்பு

காட்டிக் கொடுத்த டெங்கு காய்ச்சல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பாலக்கரை அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை இருக்கும் இப்பள்ளியில் சுமார் 35 மாணவ - மாணவகள் பயின்று வருகின்றனர். இதனிடையே, இப்பள்ளியில் படித்து வந்த மாணவன் ஒருவனுக்கு கடந்த 21-ம் தேதி திடீரென பயங்கர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்போது ரத்தப் பரிசோதனை மேற்கொண்டதில் அவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர்
இதையடுத்து, அவனிடம் எப்போதாவது கொசு கடித்ததா என மருத்துவர்களும், பெற்றோரும் கேட்டுள்ளனர். அதற்கு அந்த மாணவன், கடந்த வாரம் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த போது கொசுக்கள் கடித்ததாக கூறியுள்ளான். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர், இததொடர்பாக ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்
ஆட்சியரின் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்ற பெருந்துறை கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த மாணவர்கள், "நாங்கள் தினமும் காலையில் பள்ளி கழிவறையை சுத்தம் செய்துவிட்டு தான் வகுப்புக்கு செல்ல வேண்டும் என தலைமை ஆசிரியரை கீதாராணி கூறியுள்ளார்கள்" என வெகுளியாக கூறினர். மேலும், கழிவறையை பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவதால் கைகளில் கொப்பளம் வந்ததாகவும் அவர்கள் சிரித்துக் கொண்டே காட்டினர். மாணவர்களின் கையை பார்த்த கல்வி அலுவலர்களே கண் கலங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

சஸ்பெண்ட் - தலைமறைவு
இந்நிலையில், மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது உறுதி செய்யப்பட்டதால் தலைமை ஆசிரியை கீதா ராணியை மாவட்ட கல்வி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். இதனிடையே, தன்னை விசாரிக்க கல்வி அதிகாரிகள் வருவதை அறிந்த கீதாராணி தலைமறைவாகி இருக்கிறார். அவரை விசாரணைக்கு வருமாறு கல்வித்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.