திருட்டு பைக்கிற்கு திருட்டு பெட்ரோல்.. கையும் களவுமாக பிடித்த மக்கள்.. தர்ம அடி வாங்கிய மகேந்திரன்
ஈரோடு : திருட்டு பைக்கிற்கு திருட்டு பெட்ரோல் போட்ட நபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Recommended Video
ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புதுரோடு கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவர் இன்று அதிகாலை தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு வெளியே சப்தம் கேட்டுள்ளது.
கோபால் எழுந்து வந்து கதவைத் திறந்து பார்த்தபோது வெளியே அவரது இருசக்கர வாகனத்தில் இருந்து ஒரு வாலிபர் பெட்ரோல் திருட முயற்சி செய்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம்பக்கம் உதவி
இதையடுத்து கோபால் சப்தம் போட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள சுஜில்கரை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பது தெரியவந்தது.

திருப்பூரில் தங்கி வேலை
திருப்பூரில் தங்கி வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவ்வப்போது செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார். நேற்று இரவு கோவை வந்த இவர் கோவை துடியலூர் பகுதியில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தில் சத்தியமங்கலம் செல்வதற்காக ஓட்டி சென்றதாகவும் தெரிவித்தார்.

பெட்ரோல் தீர்ந்து விட்டது
அப்போது புதுரோடு அருகே இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து நின்றுவிட்டதால் வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டு அருகே இருந்த கோபால் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருட முயன்றதும் தெரியவந்தது.

கோவை
மேலும் இவர் மீது திருப்பூர் மற்றும் கோவையில் வாகன திருட்டு வழக்கு, மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பொதுமக்களிடம் இருந்து மீட்ட போலீஸ்
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். திருடனை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு போலீசார் விசாரணையில் திருடன் மற்றும் திருட்டு கும்பல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

புஞ்சைபுளியம்பட்டி போலீஸ்
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் விசாரணை முடிந்தபின் உண்மைகள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். பெட்ரோல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால் இது போல் பெட்ரோலை திருடும் போக்கு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பல இடங்களில் பெட்ரோல் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆதாயம் தேடும் செயல்
இன்னும் சில இடங்களில் பெட்ரோல் டீசல் விலையை வைத்து ஆதாயம் தேடி வரும் செயல்களும் நடக்கின்றன. தங்களிடம் இந்த பொருளை வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் வெளியிட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை தருவதோடு கடைக்காரர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலை
கடந்த மே மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. மேலும் சமையல் எரிவாயுக்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ 100-ஐ தாண்டியது. அது போல் சிலிண்டர் விலையும் 1000த்தை நெருங்கியுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை முறையே ரூ 5, ரூ 4 குறைக்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்தது. மேலும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ 100 மானியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அந்த திட்டங்களை கொண்டு வரவில்லை. மாறாக தற்போதைய நிதி நிலை இருக்கும் சூழலில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வாய்ப்பில்லை என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. திமுக சொன்ன முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமுக அரசு கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தது.












Click it and Unblock the Notifications