ட்விஸ்ட்.. தற்கொலை இல்லையா? பாக்கணும் போல இருக்கு.. வீட்டுக்கு அழைத்த முன்னாள் காதலியை கொன்ற இளைஞன்!
ஈரோடு : ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக கருதப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில், அவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இளம்பெண்ணின் கணவர் வெளியூருக்குச் சென்ற நிலையில், முன்னாள் காதலனை பார்ப்பதற்காக வீட்டுக்கு அழைத்திருந்துள்ளார். அங்கு வந்த இளைஞர், அப்பெண்ணை நாம் சேர்ந்து வாழ்வோம் எனக் கூப்பிட்டுள்ளார்.
தான் கர்ப்பமாக இருப்பதால் வர முடியாது என அப்பெண் மறுத்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், அப்பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு அந்த இளைஞர் தப்பியது தெரியவந்துள்ளது.
ஈரோட்டில் முன்னாள் காதலியை கொலை செய்துவிட்டு, சென்னைக்கு தப்பிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்.. நடிகையின் நண்பர் போலீஸில் சாட்சியம்

ஈரோடு பெண்
ஈரோடு அடுத்துள்ள சித்தோடு ராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் பிருந்தா தனது வீட்டில் இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்று பார்த்த பெற்றோர், பிருந்தா தற்கொலை செய்து கொண்டதாக எண்ணி சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிருந்தாவின் சடலத்தை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ட்விஸ்ட்
பிரேத பரிசோதனையில் பிருந்தா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி சசி மோகன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் பிருந்தாவின் செல்போனை ஆய்வு செய்ததில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சென்னையில் இருந்த அரவிந்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

முக்கோண காதல்
போலீசாரின் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பிருந்தா கல்லூரியில் படிக்கும்போது கார்த்திக்கை காதலித்து வந்துள்ளார். அதே சமயத்தில் பிருந்தாவிற்கு அரவிந்துடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிருந்தாவும், அரவிந்தும் நெருக்கமாகவும் பழகி வந்துள்ளனர். கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு பிருந்தா, அரவிந்தை விட்டுவிட்டு கார்த்திக்கை காதல் திருமணம் செய்து கொண்டு ஈரோட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

வீட்டுக்கு வா
எனினும், அரவிந்த் உடனும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார் பிருந்தா. இந்நிலையில் கணவர் கார்த்திக் வெளியூர் சென்ற நேரத்தில் அரவிந்திற்கு போன் செய்து உன்னை பார்க்க வேண்டும், வீட்டில் யாரும் இல்லை வேகமாக வா என்று பிருந்தா அழைத்துள்ளார். இதையடுத்து அரவிந்த், உடனடியாக பிருந்தாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது உன்னை என்னால் மறக்க முடியவில்லை, வீட்டை விட்டு வா நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார் அரவிந்த்.

முன்னாள் காதலி கொலை
அதற்கு பிருந்தா, தான் இப்போது நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னால் வர முடியாது என்றும் மறுத்துள்ளார். நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது இரண்டு பேரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என அரவிந்த் கூறியுள்ளார். அதற்கு பிருந்தா எனக்கு பயமாக இருக்கிறது, என்னை கொலை செய்து விட்டு நீயும் தற்கொலை செய்து கொள் என்று கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அரவிந்த், பிருந்தாவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்னைக்கு தப்பிச் சென்றுள்ளார்.

அதிர்ச்சி
இதனையடுத்து பிருந்தாவின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்த சித்தோடு போலீசார், கொலையுண்ட இளம்பெண்ணின் முன்னாள் காதலன் அரவிந்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னாள் காதலனால் கர்ப்பிணி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.