கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி... சாலையோரம் தூங்கிய 12 பக்தர்கள் பலி - 22 பேர் காயம்
அவுரங்காபாத்: பீகாரில் தேசிய நெடுஞ்சாலையோரம் படுத்திருந்த பக்தர்கள் மீது கண்டெய்னர் லாரி ஏறிய விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாகப் பலியானார்கள். படுகாயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பிரதீப் ஜோஷி என்பவர் ஆண்டுதோறும் இம்மாதம் பக்தர்களை ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டும் ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் என்ற இடத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு தனி பேருந்தில் சுற்றுலா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
ஆன்மீக சுற்றுலா திருப்திகரமாக முடிந்த நிலையில், இன்று அதிகாலையில் அவுரங்காபாத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் முப்பா சில் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட டெல்லி - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பஸ்சை நிறுத்தி விட்டு பக்தர்கள் சாலையோரம் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தனர்.
அப்போது, வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி ஓடி தூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது ஏறி நசுக்கியது. இதில் 12 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார்கள். பலத்த காயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆன்மீக சுற்றுலா முடிந்து திரும்புகையில் நடந்த இந்த கோர விபத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.