For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுடப்பட்ட இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்ற '80 பாட்டில் ரத்தம்': நடந்தது என்ன?

By BBC News தமிழ்
|
இந்திரா காந்தி
AFP/GETTY
இந்திரா காந்தி

இந்திரா காந்தியின் வாழ்க்கையில் புவனேஷ்வருடன் தொடர்புடைய பல நினைவுகள் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை இனிமையானவை அல்ல.

இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு முதன்முறையாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டது புவனேஷ்வரில்தான். நோயிலிருந்து குணமடையாத அவர் 1964ஆம் ஆண்டு மே மாதம் இறந்தார். புவனேஷ்வரில் 1967ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த இந்திரா காந்தியின்மீது கல் வீசி எறியப்பட்டு, அவரது மூக்கு எலும்பு உடைந்தது.

1984ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று மதியம் புவனேஷ்வரில் இந்திரா காந்தி ஆற்றிய தேர்தல் உரையை வழக்கம்போல் தயாரித்தவர் அவரது தகவல் ஆலோசகரான எச்.ஒய்.சாரதா பிரசாத்.

ஆனால், தயாரிக்கப்பட்ட உரையை தவிர்த்து ஆச்சரியப்படும்விதமாக தன் விருப்பப்படி பேச ஆரம்பித்துவிட்டார் இந்திரா காந்தி.

மாற்றப்பட்ட உரை

இந்திரா காந்தியின் உரை இது: "நான் இன்று இங்கு இருக்கிறேன், நாளை இல்லாமலும் போகலாம். நான் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். நாட்டு மக்களின் சேவையில் எனது வாழ்க்கையை செலவிட்டதற்கு பெருமை கொள்கிறேன். எனது இறுதிமூச்சு வரை மக்களுக்கு சேவை செய்வேன். நான் இறந்தாலும், எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இந்தியாவை வலுவாக்கும் பணியைச் செய்யும்".

சில சமயங்களில் தற்செயலாக திடீரென்று வெளிவரும் வார்த்தைகள் எதிர்வரும் தினங்களை சூசகமாக குறிப்பதாக அமைந்துவிடும். அதுபோலவே இருந்தது இந்திராவின் சுய உரை.

"வன்முறை, மரணம் என்று குறிப்பிட்டு என்னை உலுக்கிவிட்டீர்கள்" என்று கூட்ட்த்திற்குக் பிறகு ராஜ்பவனுக்கு திரும்பிய இந்திராகாந்தியிடம் மாநில ஆளுனர் பிஷம்பர்நாத் பாண்டே வருத்தப்பட்டார்.

நேர்மையான மற்றும் உண்மையான விடயங்களைப் பற்றியே தான்பேசியதாக இந்திரா காந்தி பதிலளித்தார்.

இந்திரா காந்தி
Getty Images
இந்திரா காந்தி

தூங்கா இரவு

அன்று இரவு டெல்லி திரும்பிய இந்திரா காந்தி மிகவும் களைப்படைந்திருந்தார். அன்று இரவு இந்திராவால் ஆழ்ந்து உறங்க முடியவில்லை.

தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்த மருமகள் சோனியா காந்தி, அதிகாலை நான்கு மணிக்கு ஆஸ்துமாவுக்காக மருந்து எடுத்துக் கொள்வதற்காக குளியலறைக்கு சென்றார், அப்போதே இந்திரா காந்தி விழித்துக்கொண்டார்.

குளியலறைக்கு சென்ற தனது பின்னரே வந்த இந்திரா காந்தி, மருந்து எடுத்துக்கொடுக்க தனக்கு உதவியதாக சோனியா காந்தி 'ராஜீவ்' என்ற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உடல்நிலை மீண்டும் மோசமாகிவிட்டால், எனக்கு ஒரு குரல் கொடுங்கள் நான் விழித்திருக்கிறேன் என்று இந்திரா, மருமகளிடம் கூறினாராம்.

இந்திரா காந்தி
Getty Images
இந்திரா காந்தி

குறைவான காலை உணவு

காலை ஏழரை மணிக்கு இந்திரா காந்தி தயாராகிவிட்டார். அன்று குங்குமப்பூ நிற சேலையில் கருப்பு பார்டர் போட்ட சேலையை அணிந்திருந்தார் இந்திரா.

அன்று காலை இந்திராவை சந்திப்பதற்கு இந்திரா காந்தி பற்றிய ஆவணப்படம் தயாரித்துக் கொண்டிருந்த பீட்டர் உஸ்தீனோவுக்கு முன் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒருநாள் முன்னர் ஒடிசாவுக்கு சென்றிருந்தபோதும் இந்திரா காந்தி தொடர்பான சில காட்சிகளை அவர் படம் பிடித்திருந்தார்.

பிரிட்டனின் முன்னாள் பிரதம மந்திரி ஜேம்ஸ் கைலேகன் மற்றும் மிசோரத்தை சேர்ந்த ஒரு தலைவரையும் பிற்பகலில் இந்திரா காந்தி சந்திப்பதாக ஏற்பாடாகியிருந்த்து. அன்று மாலை, இந்திரா காந்தி, பிரிட்டன் இளவரசி ஆன்னுக்கு விருந்தளிக்கும் ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அன்று காலை சிற்றுண்டியாக, இரண்டு ரொட்டித் துண்டுகள், தானியங்கள், ஆரஞ்சு சாறு மற்றும் முட்டைகளை சாப்பிட்டார் இந்திரா. அதுவே இந்திராவின் இறுதி உணவாகவும் இருந்தது.

காலை உணவுக்கு பிறகு, இந்திராவின் ஒப்பனையாளர் அவருக்கு ஒப்பனை செய்தார். இந்திராவை தினசரி காலைவேளையில் சந்திக்கும் மருத்துவர் கே.பி மாதூரும் அங்கு வந்தார்.

மருத்துவர் மாதூரை உள்ளே அழைத்த இந்திரா அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் 80 வயதிலும் தேவைக்கு அதிகமாக ஒப்பனை செய்துக் கொள்வது, தற்போதும் அவரது முடி கருப்பாகவே இருப்பது என இருவரும் வேடிக்கையாக பேசிக்கொண்டிருந்தார்கள்

இந்திரா காந்தி
Getty Images
இந்திரா காந்தி

திடீர் துப்பாக்கி சூடு

9 மணி 10 நிமிடங்களில் இந்திரா காந்தி வெளியே வந்தபோது மிதமான வெப்பத்துடன் காலை சூரியன் தகதகத்தது.

இந்திரா காந்திக்கு வெயில் படாமல் இருப்பதற்காக, கறுப்பு குடையை இந்திராவின் தலைக்கு மேலே உயர்த்தி பிடித்தவாறு நடந்து சென்றார் நாராயண் சிங். இந்திராவின் சில அடிகள் பின்னதாக ஆர்.கே. தவண் மற்றும் இந்திரா காந்தியின் தனிப்பட்ட ஊழியர் நாது ராம் நடந்து கொண்டிருந்தனர்.

அனைவருக்கும் பின்னர் நடந்துக் கொண்டிருந்தார் இந்திராவின் பாதுகாப்பு அதிகாரி துணை ஆய்வாளர் ராமேஷ்வர் தயால். இதனிடையில், பணியாளர் ஒருவர் 'கப் அண்ட் சாஸருடன்' சென்று கொண்டிருந்தார்.

முன்புறமாக கடந்து சென்ற அவரிடம் அது எங்கே எடுத்துச் செல்லப்படுகிறது என்று விசாரித்தார் இந்திரா. அந்த தேநீர் உஸ்தீனோவுக்காக எடுத்துச் செல்லப்பட்டதை தெரிந்துக் கொண்ட இந்திரா, வேறு 'கப் அண்ட் சாஸரை பயன்படுத்துமாறு கூறினார்.

சப்தர்ஜங் சாலையில் உள்ள வீட்டை, அக்பர் சாலையுடன் இணைக்கும் சிறிய வாயிலை நோக்கி செல்லும்போது தவணிடம் பேசிக்கொண்டே சென்றார் இந்திரா காந்தி.

ஏமனுக்கு அதிகாரபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங், அன்று டெல்லிக்கு திரும்பவிருந்தார். இரவு ஏழு மணிக்கு அவரது விமானம் பாலம் விமானநிலையத்தில் இறங்கியதும், பிரிட்டன் இளவரசிக்கு தான் அளிக்கும் விருந்தில் கலந்துக் கொள்ளவேண்டும் என்ற செய்தியை ஜெயில் சிங்குக்கு இந்திரா அனுப்பச் சொன்னார் என்கிறார் தவண்.

திடீரென பிரதமரின் பாதுகாவலரான பியந்த் சிங் தனது துப்பாக்கியை எடுத்து இந்திரா காந்தியை நோக்கி சுட்டார். தோட்டா இந்திரா காந்தியின் வயிற்றில் பாய்ந்தது.

தனது முகத்தை மறைப்பதற்காக இந்திரா வலது கையை தூக்கினார், அதற்குள் பியந்த் சிங், இந்திராவின் பக்கவாட்டு மற்றும் மார்பில் இரண்டு முறை சுட்டார். துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த தோட்டாக்கள் இந்திரா காந்தியின் மார்பு, பக்கவாட்டுப்பகுதி மற்றும் இடுப்புக்குள் ஊடுருவின.

சுட்டுத் தள்ளுங்கள்

அங்கிருந்து ஐந்தடி தூரத்தில் சத்வந்த் சிங் ஒரு ஸ்டென் சப்மெஷின் துப்பாக்கியுடன் நின்றிருந்தார்.

இந்திரா காந்தி கீழே வீழ்ந்ததைப் பார்த்த சத்வந்த் சிங், தனது இடத்தில் இருந்து அசையாமல் ஒரு கணம் சிலைபோல் நின்றான். அதைப்பார்த்த பியந்த் சிங் 'சுடு' என்று கூச்சலிட்டான்.

சத்வந்த் சிங், உடனே தனது தானியங்கி துப்பாக்கியில் இருந்த 25 தோட்டாக்கள் தீரும்வரை இந்திராவை நோக்கி சுட்டான்.

பியந்த் சிங் பிரதமரை நோக்கி சுட்டு 25 வினாடிகள்வரை, அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

சத்வந்த் துப்பாக்கியால் சுட்டபோது அனைவருக்கும் பின்னால் நடந்து நடந்துக்கொண்டிருந்த ராமேஷ்வர் தயால் முன்னோக்கி ஓடிவந்தார்.

ஆனால், இந்திரா காந்தியிடம் அவர் சென்று சேர்வதற்கு முன்னரே சத்வந்தின் தோட்டாக்கள் அவரது தொடைகளையும் கால்களையும் தாக்கியதில் அவர் கீழே விழுந்தார்.

தோட்டாவால் துளைக்கப்பட்டு கீழே வீழ்ந்துகிடந்த இந்திரா காந்தியை பார்த்த உதவியாளர்கள், ஒருவருக்கொருவர் உத்தரவுகளை பிறப்பித்தார்கள். துப்பாக்கி சத்தத்தைக் கேட்ட அக்பர் சாலையில் நின்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரி தினேஷ் குமார் பட் உள்ளே ஓடிவந்தார்.

இந்திரா காந்தி.
BBC
இந்திரா காந்தி.

ஆம்புலன்ஸ்

அப்போது பியந்த் சிங்கும், சத்வந்த் சிங்கும் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டார்கள். "நாங்கள் செய்ய வேண்டியதை செய்துவிட்டோம், இனி நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்" என்று எக்காளமிட்டான் பியந்த் சிங்.

அப்போது அங்கு குதித்து முன்னேறிய நாராயண் சிங், பியந்த் சிங்கை கீழே தள்ளினார். அருகில் இருந்த பாதுகாப்பு அறையில் இருந்து ஐ.டி.பி.பி வீரர்கள் ஓடிவந்து, சத்வந்த் சிங்கை பிடித்தனர்.

எப்போதும் அங்கு ஒரு ஆம்புலன்ஸ் நிற்பது வழக்கம். ஆனால் அன்று அந்த அவசர ஊர்தியின் ஓட்டுநர் அவசர உதவிக்கு வரவில்லை, அவர் எங்கே என்றே தெரியவில்லை. இந்திரா காந்தியின் அரசியல் ஆலோசகர் மாக்கன்லால் ஃபோதேதார், 'காரை கொண்டு வாருங்கள்' என்று கூச்சலிட்டார்.

நிலத்தில் வீழ்ந்துகிடந்த இந்திரா காந்தியை, ஆர்.கே.தவணும் பாதுகாவலர் தினேஷ் பட்டும் தூக்கி வெள்ளை அம்பாஸிடர் காரின் பின்புற இருக்கையில் கிட்த்தினார்கள்.

முன்புற இருக்கையில் தவண், ஃபோதேதாரும் அமர்ந்தார்கள். காரை கிளப்புன்போது ஓடிவந்த சோனியா காந்தியில் காலில் செருப்புகூட இல்லை. இரவு உடையில் சோனியா காந்தி 'மம்மி, மம்மி' என்று கத்திக் கொண்டு ஓடிவந்தார்.

இந்திரா காந்தி காரில் கிடத்தப்பட்டிருந்ததை பார்த்த சோனியா காந்தி, பின் இருக்கையில் இந்திரா காந்தியின் அருகில் அமர்ந்து, அவரது தலையை தனது மடியில் தூக்கி வைத்துக்கொண்டார்.

கார் வேகமாக எய்ம்ஸ் மருத்துவமனையை நோக்கிச் சென்றது. நான்கு கிலோமீட்டர் செல்லும் வரை யாரும் ஒன்றுமே பேசவில்லை. சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது.

இந்திரா காந்தி
BBC
இந்திரா காந்தி

ஸ்ட்ரெட்சர் இல்லை

ஒன்பது மணி 32 நிமிடத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கார் சென்றடைந்தது. அங்கு இந்திரா காந்தியின் ஓ ஆர்.ஹெச் நெகடிவ் வகை ரத்தம் போதுமான அளவு இருந்தது.

ஆனால், இந்திரா காந்தி காயமடைந்திருப்பது, அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவது போன்ற எந்த ஒரு தகவலும் தொலைபேசி மூலமாக மருத்துவமனைக்கு சொல்லப்படவில்லை.

அவசர பிரிவு கதவு திறப்பதற்கும், இந்திரா காந்தி காரில் இருந்து இறக்கப்படுவதற்கும் மூன்று நிமிடங்கள் ஆனது. அங்கு அவரை கொண்டு செல்வதற்கு ஸ்ட்ரெட்சர் இல்லை!

சக்கரம் கொண்ட ஒரு ஸ்ட்ரக்ட்சர் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு, இந்திரா காந்தி கொண்டு செல்லப்பட்டார். இந்திராவின் மோசமான நிலையைப் பார்த்த அங்கிருந்த மருத்துவர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள்.

அவர்கள் உடனே எய்ம்சின் மூத்த இதய சிகிச்சை நிபுணர்களுக்கு தகவல் அளித்தார்கள். சில நிமிடங்களிலேயே குலேரியா, எம்.எம். கபூர், எஸ்.பலராம் ஆகிய மருத்துவர்கள் விரைந்துவந்தனர்.

இந்திராவின் இதயம் சிறிதளவு செயல்படுவதாக எலெக்ட்ரோகார்டியோகிராம் இயந்திரம் காண்பித்தது. ஆனால் நாடித்துடிப்பு இல்லை.

இந்திரா காந்தியின் கண்கள் நிலைகுத்தி நின்றன. இது மூளை சேதமடைந்ததற்கான அறிகுறி.

இந்திராவின் நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் சென்றால் மூளை செயல்படலாம் என்ற எண்ணத்தில் அவரது வாயில் ஆக்சிஜன் குழாய் பொருத்தப்பட்டது.

இந்திரா காந்திக்கு 80 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டது. இது வழக்கமானதை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.

மருத்துவர் குலேரியா சொல்கிறார், "இந்திரா காந்தியை பார்த்ததுமே அவர் இறந்துவிட்டார் என்பதை அறிந்துக்கொண்டேன். ஈ.சி.ஜியும் அதை உறுதிப்படுத்தியது. இனி என்ன செய்வது என்று அங்கிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் ஷங்கரானந்திடம் கேட்டேன். பிரதமர் இறந்ததை அறிவித்துவிடலாமா என்று வினவினேன். வேண்டாம் என்று அவர் மறுத்துவிட்டார். பிறகு இந்திராவின் உடலை அறுவை சிகிச்சை அறைக்கு மாற்றினோம்".

இந்திரா காந்தி
Getty Images
இந்திரா காந்தி

இதயம் மட்டுமே பாதிக்கப்படவில்லை

இந்திரா காந்தியின் உடலை இதயம் மற்றும் நுரையீரல் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டது. இது அவருடைய ரத்தத்தை சுத்தமாக்க தொடங்கியது, இதனால் ரத்த வெப்பநிலை 37 டிகிரிலிருந்து 31 டிகிரியாக குறைந்தது.

இந்திரா இறந்துவிட்டார் என்பது தெளிவாகிவிட்டது. ஆனாலும் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் எட்டாவது மாடியில் உள்ள ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

தோட்டாக்கள், இந்திராவின் கல்லீரலின் வலது பகுதியை சேதப்படுத்திவிட்ட்தை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். அவரது பெருங்குடலில் குறைந்தது பன்னிரண்டு துளைகள் இருந்தன, சிறுகுடலும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.

பிரதமரின் நுரையீரலையும் தோட்டா துளைத்திருந்தது. முதுகுத்தண்டும் தோட்டாக்களின் இலக்கில் இருந்து தப்பவில்லை. இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட இந்திராவின் இதயம் மட்டுமே பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்தது.

இந்திரா காந்தி
Getty Images
இந்திரா காந்தி

திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது

பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா காந்தி கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு பிறகு, மதியம் இரண்டு மணி 23 நிமிடத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அரசு பிரசார ஊடகங்கள் மாலை ஆறு மணிவரை பிரதமர் இறந்துவிட்டதை அறிவிக்கவில்லை.

"இந்திரா காந்திமீது இதுபோன்ற தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை முகமைகள் எச்சரிக்கை விடுத்திருந்தன" என்று இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இந்தர் மல்ஹோத்ரா கூறுகிறார்.

இந்திரா காந்தியின் அனைத்து சீக்கிய பாதுகாப்பு அதிகாரிகளும் அகற்றப்பட வேண்டும் என்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தார்கள்

இந்திரா காந்தி
Getty Images
இந்திரா காந்தி

ஆனால் அந்த கோப்பு, இந்திரா காந்தியிடம் சென்றபோது, நாம் மதசார்பற்றவர்கள் தானே? (Aren't We Secular?)) என்று கோபத்துடன் அவர் மூன்றே வார்த்தைகளில் முடித்துவிட்டார்.

இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவருடைய சீக்கிய பாதுகாவலர்கள் இருவரும் அவருக்கு அருகில் பணியில் அமர்த்தப்படவேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்திரா காந்தி
Getty Images
இந்திரா காந்தி

31ஆம் தேதியன்று தனக்கு வயிறு சரியில்லை என்று சத்வந்த் சிங் சாக்குபோக்கு சொன்னார். அதனால் அவருக்கு கழிவறைக்கு அருகில் இருக்குமாறு பணி வழங்கப்பட்டிருந்தது.

இப்படித்தான், சீக்கியர்களின் பொற்கோவிலில் இந்திராகாந்தி பிரதமராக எடுத்த 'ப்ளூ ஸ்டார்' நடவடிக்கைக்கு பழிவாங்கினார்கள் சத்வந்த் சிங்கும் பியந்த் சிங்கும்.

'தனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இந்தியாவை வலுவாக்கும் பணியைச் செய்யும்' என்று இறப்பதற்கு முதல் நாள் இந்திரா காந்தி ஆற்றிய உரைக்கு நேர்மாறாக, இந்திரா காந்தியை கொன்ற அவரது பாதுகாவலர்களின் சீக்கிய சமூகம் பல மடங்கு ரத்தத்தை சிந்தியது, காலத்தின் கோலமல்ல, அலங்கோலம்!

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Thirty three years ago, India's Prime Minister Indira Gandhi was murdered in her garden by her own bodyguards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X