
குஜராத் தேர்தல்.. சிங்கங்களுக்கு நடுவே அடர் வனத்தில்.. 25 கிமீ பயணம்.. ஒரே ஒருவருக்காக 'ரிஸ்க்'!
காந்திநகர்: குஜராத்தில் 89 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
சோம்நாத் மாவட்டத்தின் கிர் வனப்பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான அலுவலகத்தில் இந்த வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்த வனப்பகுதியில் வசிக்கும் 'சித்திக்' பழங்குடியின மக்கள் இந்த ஆண்டுதான் முதல் முறையாக வாக்கு செலுத்த இருப்பதால் அவர்களுக்கும் பிரத்தியேக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
நான் ராவணனா? கார்கேவுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி.. ஒரேபோடு.. அனல் பறந்த குஜராத் பிரசாரம்

தனி வாக்குச்சாவடி
குஜராத்தின் கிர் பகுதி அதிக அளவில் வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். இங்கு சிங்கங்கள் நடமாட்டமும் அதிகம். இந்நிலையில், இம்மாவட்டத்தின் பனேஜில் அமைந்துள்ள பனேஷ்வர் மகாதேவ் கோயிலில் மஹந்த் ஹரிதாஸ் உதாசீன் என்பவர் நீண்ட நாட்களாக தனியாக வசித்து வருகிறார். ஏற்கெனவே இவருடன் பாரத் தாஸ் என்பவர் வசித்து வந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து மஹந்த் ஹரிதாஸ் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் வாக்கு செலுத்தும் விதமாக அவருக்காக தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆண்டுதோறும்
இந்த பகுதியில் காட்டு விலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாலும் பாதுகாப்பான வேறு கட்டிடங்கள் இல்லாததாலும் வனத்துறை அலுவலகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. இவர் ஒருவருக்காக தேர்தல் அதிகாரிகள் உட்பட 10 பேர் கொண்ட குழு நகரத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் காட்டுக்குள் வாக்கு இயந்திரங்களை கொண்டு சென்றிருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டிலிருந்து இதேபோல ஒரு நபருக்காக தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி அமைத்து வருகிறது. அதேபோல இங்கு வசிக்கும் 'சித்தி' பழங்குடியின மக்களுக்காகவும் தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறம் எனில் மறு புறத்தில் வாக்களிக்க ஒரே குடும்பத்தை சேர்ந்த 81 பேர் ஒன்றாக கூடியுள்ள சம்பவமும் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. சூரத் மாவட்டத்தில் உள்ள காம்ரேஜில் 'சோலங்கி' குடும்பம் வசித்து வருகிறது. சோலங்கி என்பது இந்த குடும்பத்தின் பெயராகும்.

தவறாமல்
இந்த குடும்பத்தின் தலைவராக 82 வயதான ஷாம்ஜிபாய் எனும் முதியவர் இருக்கிறார். குடும்ப உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 81. இவர்களில் பெரும்பாலானோர், வேலைக்காகவும், கல்விக்காகவும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தங்கியுள்ளனர். ஆனால் தேர்தலின்போது மட்டும் அனைவரும் ஒன்று கூடிவிடுவார்கள். இந்த 81 பேர்களில் 60 பேர் வாக்குரிமையை பெற்றிருக்கின்றனர். இது குறித்து ஷாம்ஜிபாயின் மகன் நந்தலால் கூறுகையில், "எனது அப்பா 82 வயதிலும் வாக்களிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அவர் தவறாமல் வாக்களிக்கிறார். இதை பார்த்துதான் நாங்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டோம். எனவேதான் எந்த வேலை இருந்தாலும் ஆண்டு தோறும் நாங்கள் தவறாமல் ஒன்று சேர்கிறோம்" என்று கூறியுள்ளார்.

விழிப்புணர்வு பிரசாரம்
மேலும், "1985ம் ஆண்டு ஆறு சகோதரர்களில் ஒருவரான லால்ஜி சோலங்கி இந்நகருக்கு வந்து குடியேறினார். அவர் காலம் தொட்டு எங்கள் குடும்பம் வேளாண் துறை சார்ந்த உபகரணங்களை தயாரித்து வருகிறது. தற்போது எங்கள் குடும்பத்தில் மொத்த உறுப்பினர் 96 பேர் இருக்கிறார்கள். இதில் 81 பேர் தற்போது ஒன்று சேர்ந்திருக்கிறோம். இந்த கூட்டுக்குடும்பம் எங்களுக்கு பல விஷயங்களை கற்றுத் தந்திருக்கிறது. அதில் முக்கியமானதுதான் இந்த வாக்குப்பதிவு. நாங்கள் இவ்வாறு ஒன்றாக சேர்ந்து வாக்களிப்பது ஒரு பிரசாரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்" என கூறியுள்ளார். குஜராத்தில் ஒரேயொரு நபருக்காக வாக்குச்சாவடி அமைத்தது எப்படி அரிதானதாக இருக்கிறதோ, அதேபோல வாக்கு செலுத்த குடும்பத்தினர் முழுவதும் ஒன்று சேர்ந்திருப்பதும் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.