5 மருத்துவர்கள் பலி, 60 பேர் காயம்.. விமானம் போய் விழுந்த மருத்துவ கல்லூரி விடுதியில் நடந்த கொடூரம்!
அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விமானம் போய் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 5 மருத்துவர்கள் உயிரிழந்த கொடுமை அரங்கேறி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் விடுதியில் இருந்த சுமார் 60 பேர் காயம் காரணமாக சிகிச்சையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் 242 பேர் பயணித்துள்ளனர். மொத்தமாக 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் பயணிகள், 7 போர்ச்சுகல் பயணிகள் மற்றும் ஒரு கனடா பயணி, 2 பைலட் மற்றும் 10 விமான ஊழியர்கள் என்று 242 பேர் பயணித்தனர். இந்த விமானம் புறப்பட்ட சில நொடிகளில் விபத்தில் சிக்கியது.

அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் விமானம் டேக் ஆஃப் ஆன சில நொடிகளில் கண் சிமிட்டும் நேரத்தில் விழுந்து நொறுங்கி வெடித்த காட்சிகள் பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகளில் ஒருவர் மட்டுமே தப்பி பிழைத்துள்ளார்.
இந்த விமானம் மேகானி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியில் சென்று விழுந்தது. மாணவர்கள், மருத்துவர்கள் சாப்பிடுவதற்காக விடுதிக்கு வந்த நேரத்தில் இந்த விமானம் சென்று விடுதியில் விழுந்திருக்கிறது. இதனால் பயணிகள் மட்டுமல்லாமல் விடுதியில் இருந்தவர்களும் பாதிப்பை சந்தித்துள்ளனர். மாணவர்கள் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.
இந்த நிலையில் அகில இந்திய மருத்துவ கூட்டமைப்பின் துணை தலைவர் திவ்யன்ஷ் சிங் பேசுகையில், தற்போது வரை 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதேபோல் விடுதியில் தங்கியிருந்த மருத்துவர் ஒருவரும், சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரின் மனைவி ஒருவரும் உயிரிழந்திருக்கிறார். அதேபோல் 60க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
விமானம் கட்டுப்பாட்டை இழந்து நேரடியாக மருத்துவக் கல்லூரியின் ஆண்கள் விடுதிக்குள் விழுந்தது. உணவு சாப்பிடும் நேரம் என்பதால், பலரும் சாப்பிடுவதற்காக வந்திருக்கின்றனர் என்று கூறி இருக்கிறார். ஆனால் மருத்துவக் கல்லூரி விடுதியில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications