For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவஜோத் சித்து முதலமைச்சராக விட மாட்டேன்: அமரிந்தர் சிங் பிபிசிக்கு பேட்டி

By BBC News தமிழ்
|
அமரீந்தர்
BBC
அமரீந்தர்

"என்னை கட்சியிலிருந்து வெளியேற்றுங்கள், நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் அவரை (நவஜோத் சித்து) (முதல்வர்) ஆக விடமாட்டேன்" என்று கூறியிருக்கிறார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்.

பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் அண்மையில் ராஜிநாமா செய்தது தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அவர் பிபிசி பஞ்சாபிக்கு பேட்டியளித்திருக்கிறார். அதன் விவரம்

கேள்வி: அவர் கட்சித் தலைவராக இருந்தாலும் அவரை (நவ்ஜோத் சித்து) எதிர்ப்பீர்களா?

பதில்: என்னை கட்சியிலிருந்து வெளியேற்றுங்கள், நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் அவரை (நவஜோத் சித்து) (முதல்வர்) ஆக விடமாட்டேன். எது எப்படி இருந்தாலும், அவர் நாட்டிற்கே அச்சுறுத்தலாக இருக்கிறார், தவிர, அவரால் அரசாங்கத்தை நடத்த இயலாது. ஒரு அமைச்சகத்திலிருந்தே நான் அவரை நீக்கினேன் என்றால், அவர் எப்படி அரசாங்கத்தை நடத்த முடியும்? நாம் பஞ்சாபை அழிக்க விரும்புகிறோமா? நாம் தேசத்தை அழிக்க விரும்புகிறோமா? அவருக்கு எதுவும் தெரியாது. அவர் வெறும் நாடகமாடுகிறார். நாடகம் நடக்கும்போது மக்கள் கூடிவருவார்கள் ஆனால் அவர்களில் எத்தனை பேர் இவருக்கு வாக்களிப்பார்கள் என்று நீங்கள் அவரிடம் கேளுங்கள். இரண்டாவது விஷயம், பாகிஸ்தானுடனான அவரது உறவு.

கேள்வி: என்ன உறவு?

பதில்: என்ன உறவு, இம்ரான் கான் என் சிறந்த நண்பர் என்று அவர் சொல்வதிலிருந்தே உங்களுக்குத் தெரியவில்லையா? கர்தார்பூரில் இம்ரான் கான் முன்னிலையில், அவர் ஆற்றிய உரையை நீங்கள் கேட்க வேண்டும். அவர் ஜெனரல் பாஜ்வாவையும் கட்டிப்பிடித்தார். ஜெனரல் பாஜ்வாவின் உத்தரவின் பேரில், நமது வீரர்கள் ஒவ்வொரு நாளும் நம் எல்லையில் தங்கள் உயிரைக் கொடுக்கிறார்கள், அவர் தன்னைப்பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்? நான் அவரிடம் தொலைபேசியில் சொன்னேன்.

அந்த நேரத்தில் ஆந்திர தேர்தல் நடந்து கொண்டிருந்தது, நான் அவரை அங்கே பிடித்தேன். நான் சொன்னேன், நீங்கள் நாளை பாகிஸ்தானுக்குப் போகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன், நீங்கள் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவுக்குப் போகிறீர்களா? என்றேன். அவர் ஆம், ஆம் நான் போகிறேன் என்று கூறினார்.

நீங்கள் என்னிடம் கேட்கவில்லை என்றேன். முதலமைச்சரிடம் கேட்காமல் எந்த அமைச்சரும் இப்படி வெளியே போக முடியாது. பிரதமரின் அனுமதியின்றி முதல்வரும் இதை அனுமதிக்க முடியாது. நீங்கள் சொல்லக்கூட இல்லை, நீங்கள் எப்படிப் போக முடியும் என்று நான் கேட்டேன். அவர் நான் ஏற்கனவே வருவதாகக் கூறிவிட்டேன் என்றார். இல்லை போகக்கூடாது என்றேன். ஆனால் அவர் போய்விட்டார், பிறகு இதெல்லாம் நடந்தது.

கேள்வி: இந்தப் பிரச்சனையை மத்திய தலைமையிடம் கூறினீர்களா?

பதில்: அவர் செய்ததை உலகம் முழுவதும் பார்க்கிறது. இது மிகவும் தவறு. நான் அவரை நம்பவில்லை. சித்து மிகவும் தவறான காரியத்தைச் செய்துள்ளார், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நான் தொலைக்காட்சியில் சொன்னேன்.

கே: கிரிக்கெட் காரணமாக அவருக்கு இம்ரானுடன் நல்ல உறவு இருக்கலாம், இருவரும் ஒன்றாக விளையாடி இருக்கின்றனர்.

பதில்: ஆமாம், அவர் கிரிக்கெட் காரணமாகத்தான் செய்திருக்க வேண்டும். எனக்கும் அங்கு (பாகிஸ்தானில்) பலருடன் தொடர்பு உள்ளது. 1965 போரின் போது பாகிஸ்தானின் முக்கிய தளபதியாக இருந்த ஜெனரல் பக்தியார் ராணாவின் படம் என்னிடம் உள்ளது. அவரது தந்தை பாட்டியாலா ஐ.ஜி. இது பாட்டியாலா குடும்பம். அதற்காக நான் போய் அவர்களைக் கட்டிப்பிடிப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அந்தக் காலமே வேறு. ஆனால், கடந்த முறை நான் பாகிஸ்தானுக்குச் சென்றபோது, பிரிவினைக்கு முன், பாட்டியாலாவில் வசித்த 40% முஸ்லிம்கள் , இப்போது பாகிஸ்தானில் இருப்பவர்கள், அவர்கள் எனக்கு லாகூரில் பெரும் வரவேற்பு அளித்தனர். அவர்கள் அனைவரும் ஷேகுபுரா, குஜ்ராவாலாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் அழுதனர். அங்கு எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது. நான் அவர்களை சந்தித்து மகிழ்ந்தேன். ஆனால் தேசியப் பாதுகாப்பு என்று வரும்போது, ஒரு அரசாங்கத்தின் தலைவராக அல்லது ராணுவத்தின் தலைவராக இருக்கும்போது, இதையெல்லாம் நான் ஏற்கமுடியாது.

இப்போது சீனாவுடனான அவர்களின் (பாகிஸ்தானின்) உறவு மற்றும் சீனாவுக்கு அப்பால் தாலிபன்களுடனான அவர்களின் உறவு ஆகியவற்றால் நாம் ஒரு பெரிய நெருக்கடியை நோக்கிச் செல்கிறோம். இந்த மூன்று விஷயங்களும் நடக்கப் போகின்றன என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன், சித்துவோ அல்லது வேறு யாரோ அதைக் கையாள முடியாது. பெரிய நெருக்கடி ஏற்படப்போகிறது.

கே: நீங்கள் ராஜினாமா செய்த பிறகு அவமானம் என்ற சொல்லைப் பயன்படுத்தினீர்கள். என்ன பொருளில் அப்படிச் சொன்னீர்கள்?

பதில்: அது ஏன் அவமானமானது என்பதை நான் விளக்குகிறேன். நான் 52 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். 1954 ஆம் ஆண்டு முதல் காந்தி குடும்பத்தை நான் அறிவேன். ராஜீவ் காந்தி பள்ளியில் எனக்கு ஒரு வகுப்பு பின்னால் இருந்தார். நாங்கள் அங்கே ஒன்றாகத் தங்கினோம். எத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டன?

சோனியாவை அவரது திருமணத்திலிருந்து எனக்குத் தெரியும், அதன் பிறகு எனக்கு அவர்களின் குழந்தைகளையும் தெரியும். அந்தக் குடும்பத்தில் அனைவரையும் எனக்குத் தெரியும். நான் மூன்று நான்கு வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவரைச் சந்தித்தேன். எதற்கெடுத்தாலும் டெல்லிக்கு ஓடுவது எனக்குப் பழக்கமில்லை. ஒன்றே முக்கால் வருடத்தில், நான் டெல்லிக்கு நான்கு முறை மட்டுமே சென்றிருக்கிறேன். இரண்டு முறை காங்கிரஸ் தலைவரைச் சந்திக்கவும் இரண்டு முறை உள்துறை அமைச்சரையும் பிரதமரையும் சந்திக்கவும். நாங்கள் ஆன்லைனிலோ தொலைபேசியிலோ பேசிக்கொண்டிருக்கிறோம். அது வேறு விஷயம்.

எங்களுக்கு மிக நெருக்கமான குடும்ப உறவுகள் இருந்தன. ஒருவருக்கொருவர் அன்பு இருந்தது. கடைசியாக நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, என்னை விடுவிக்கச் சொன்னேன், அவர் ஏன் என்று கேட்டார். நான் சித்துவுடன் வேலை செய்ய முடியாது என்றேன். அவர் (நவ்ஜோத் சித்து) தினமும் எனக்கு எதிராக ட்வீட் செய்கிறார், என் அரசாங்கத்திற்கு எதிராக ட்வீட் செய்கிறார், எங்களை அவமானப்படுத்துகிறார் என்றேன்.

அவரிடம் கருத்துக் கணிப்பையும் காட்டினேன். நாங்கள் மே மாத இறுதியில் முதல் கருத்துக் கணிப்பு நடத்தினோம். பின்னர் சித்து வந்தார், இரண்டு மாதங்கள் கழித்து நாங்கள் மீண்டும் ட்வீட் செய்தோம், காங்கிரஸ் 20 புள்ளிகள் குறைந்தது. என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை, அதனால் என்னை விடுவித்து விடுங்கள் என்றேன். அவர் மறுத்தார். இது நடந்து 3-4 வாரங்கள் ஆகிவிட்டன. நான் சரி, முதலில் அவரைக் கட்டுப்படுத்துங்கள் என்றேன். பின்னர் அவர் சித்துவைக் கடிந்து கொண்டிருக்கலாம். அவர் ட்வீட் செய்வதை நிறுத்தினார்.

கேள்வி: நீங்கள் ராஜிநாமா செய்ய முன்வந்ததாக கூறுகிறீர்களா?

பதில்: ஆம், ஹரீஷ் ராவத், சோனியா ஜி மற்றும் நான் அந்த நேரத்தில் இருந்தோம். நாங்கள் மூவரும் அங்கே இருந்தோம். நீங்கள் முதலில் நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, இந்தப் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும். என்னால் சித்துவுடன் வேலை செய்ய முடியாது என்றேன். அந்த நேரத்தில், நான் வேலை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.

நான் ராஜிநாமா செய்ய முன்வந்தபோது, அவர் (சோனியா காந்தி) தனது மனதை மாற்றிக்கொண்டிருக்கலாம், அல்லது எந்தக் காரணத்திற்காகவோ, எனக்கு தெரியாது, நான் கேட்க மாட்டேன். "அமரீந்தர், நான் என் மனதை மாற்றிக்கொண்டேன், நீங்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்" என்று அவர் என்னை அழைத்துச் சொல்லியிருக்கலாம். ராஜினாமா செய்ய எனக்கு இரண்டு நிமிடங்கள் ஆனது, செய்துவிட்டேன். போன் அடித்தபோது மணி 10 ஆகிவிட்டது. அந்த நேரத்தில் என்னால் போனை எடுக்க முடியவில்லை.

ஆனால், நான் தவறவிட்ட அழைப்புகளைப் பார்த்தபோது, நான் உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன் என்ற அவருடைய செய்தி இருந்தது. நான் அவரை அழைத்து என்னை அழைத்தீர்களா என்று கேட்டேன், அவர் ஆம் என்றார். "நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." என்றார். நான் சரி என்றேன். நான் அவரிடம் காரணம் கேட்கவில்லை. நான் இன்று ராஜிநாமா கடிதம் அனுப்புகிறேன் என்று சொன்னேன்."

அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் பரவாயில்லை, மன்னிப்பெல்லாம் வேண்டாம் என்று சொன்னேன். பின்னர் நான் எனது ராஜிநாமாவை சமர்ப்பித்தேன். நான் அவருடன் நல்ல உறவைக் கொண்டிருக்கும்போது, நான் நேரடியாகப் பேசியிருக்கும்போது, அவர் என் முதுகுக்குப் பின்னால் சட்டமன்றக் குழுவை அழைக்க வேண்டிய காரணம் என்ன? என் மீது நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம்? அது என்னைப் பாதித்தது.

கே: பாஜக தலைவர்களை அல்லது பாஜக ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: பாருங்கள், அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் தேசிய பாதுகாப்பு என்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். நான் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும், எனக்கு ஏதேனும் நிதி தேவைப்பட்டால் அங்கு செல்வேன். அவர்களுடன் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

கே: உங்கள் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்? நான் எனது ஆதரவாளர்கள், நண்பர்களைச் சந்தித்து அவர்களின் ஆலோசனையைப் பெறுவேன் என்று சொன்னீர்கள். பல நாட்கள் கடந்துவிட்டன, எதிர்காலத்திற்கான உங்கள் திட்டங்கள் என்ன?

பதில்: நான் நிச்சயமாக அவர்களைச் சந்தித்து அவர்களின் ஆலோசனையைப் பெறுவேன். மூன்று நாட்கள்தான் ஆகின்றன. இதுபோன்ற விஷயங்கள் ஒரே இரவில் நடக்காது. முதலில் எல்லாம் சரியாகட்டும். பிறகு நாம் விவாதிப்போம். எனவே, நேரம் இருக்கிறது, மறுபுறம் இதற்கு நேரமில்லை. நேரம் இல்லை என்றால் டிசம்பர் வரை மூன்று மாதங்கள் உள்ளன, அதன் பிறகு மாதிரி நடத்தை விதி அமலுக்கு வரும், ஆனால் அரசியலில் ஒரு மாதம் கூட போதும்.

கே: இப்போது என்ன மாதிரியான சாத்தியங்களை நீங்கள் பார்க்கிறீர்கள்? நீங்கள் ஒரு புதிய கட்சி அல்லது ஏதாவது யோசிக்கிறீர்களா?

பதில்: என்னால் இப்போது எதுவும் சொல்ல முடியாது. எனது எல்லா ஆதரவாளர்களுடனும் பேசிய பிறகுதான் நான் ஏதாவது சொல்ல முடியும். நான் 52 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், 52 ஆண்டுகளில் பல நண்பர்களையும் சக ஊழியர்களையும் பெற்றிருக்கிறேன். நான் அனைவரையும் கலந்தாலோசிப்பேன். இது மிக சீக்கிரம். நிலைமை இயல்பாகட்டும். பிறகு நாங்கள் ஏதாவது செய்வோம்

அவரை (முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி) யாரும் எதுவும் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். சித்து அவரை எந்த முடிவையும் எடுக்க அனுமதிக்க மாட்டார். அவர் எப்படி ஒரு தாதா போல அமர்ந்திருக்கிறார் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சன்னி ஒரு நல்ல மனிதர், ஒரு நல்ல அமைச்சர்.

கே: சரண்ஜித் சிங் சன்னியை எப்படி பார்க்கிறீர்கள்? அவர் உங்கள் அமைச்சரவையில் இருந்தார்.

பதில்: அவர் ஒரு நல்ல அமைச்சர், எனக்கு அவருடன் எந்த பிரச்சனையும் இல்லை. சன்னி தொழில்நுட்பக் கல்வி அமைச்சராகவும், கலாசார அமைச்சராகவும் இருந்துள்ளார். அவர் ஒரு நல்ல அமைச்சர். ஆனால் முதல்வர் என்பது வேறு. முதல்வர் யாருக்கும் கீழே வேலை செய்வதில்லை. அவர் தனது சொந்த எண்ணத்தின் படி செயல்பட வேண்டும். சித்துவால் இயக்கப்பட வேண்டும் என்று நினைத்தால், அது நடக்காது.

சரண்ஜித் சிங் சன்னி
Getty Images
சரண்ஜித் சிங் சன்னி

கேள்வி: சரண்ஜித் சிங் சன்னிக்கு இந்த பதவி கொடுக்கப்பட்ட விதத்தைப் பார்த்தால், கட்சி சாதி அரசியலில் தப்புக் கணக்குப் போட்டு விட்டதாக நினைக்கிறீர்களா?

பதில்: இது எங்கள் பஞ்சாபில் நடந்ததில்லை. இனவாதம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டதில்லை. முற்றிலும் தாராளவாத அமைப்பு தான் பஞ்சாபில் நிலவுகிறது. இதை எங்கள் குருக்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இதை நாம் செய்யாவிட்டால் அது நமது முட்டாள்தனம். இந்து, சீக்கியர், முஸ்லீம், கிறிஸ்தவர் எந்த சாதி மதத்தவர் ஆனாலும், பிற்படுத்தப்பட்டவர், தலித் ,பட்டியலினத்தவர் என்றாலும், அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Former Punjab Chief Minister Amarinder Singh has opposed to Navjot Singh Sidhu as CM Post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X