For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தலில் போட்டியிடும் வயது 25ல் இருந்து 21 ஆக குறைக்கப்படும்: ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் ஜன லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படுவர் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது,

Arvind Kejriwal releases election manifesto

தேர்தல் நேரத்தில் புழக்கத்துக்கு வரும் கருப்புப் பணத்தைத் தடுக்க ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாக கட்சி நிதி அளிப்பவரின் விவரங்களை அளிக்கத் தேவையில்லை என்ற வருமான வரித் துறையின் விதியை நீக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்கள் செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும் அரசியல் கட்சிகள் முறையாக அதற்குரிய வரவு - செலவு விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேசிய அளவில் ஊழலை ஒழிக்க வலுவான ஜன லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படும். பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் அச்சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படுவர். உள்ளாட்சி அளவில் ஊழலை ஒழிக்க கிராம சபைகள், "மொஹல்லா' சபைகள் ஆகியவற்றுக்கு அதிகாரம் அளிக்க ஸ்வராஜ் சட்டம் நிறைவேற்றப்படும். கிராமங்களை மேம்படுத்த கிராம சபைகளுக்கு போதுமான நிதி அளிக்கப்படும்.

சாதாரண மக்களுக்கும் சமமான நீதி கிடைக்க தற்போதுள்ள நீதித்துறை வழிமுறைகளில் சீர்திருத்தம் செய்யப்படும். கிராம நீதிமன்றங்கள் (கிராம நியாயலயா) அதிக அதிகாரத்துடன் உருவாக்கப்படும்.

நாட்டில் நியாயமாகவும் வெளிப்படையாகவும் தேர்தல்களை நடத்த தேர்தல் சீர்திருத்தம் செய்யப்படும். இதற்காக, தேர்தல் ஆணையர்களை அரசு நியமிக்காமல், பல நபர் அடங்கிய அரசியல் சட்ட நிபுணர்கள் குழுவை அமைக்க வகை செய்யப்படும். தேர்தலில் வெற்றி பெறும் பிரதிநிதிகளைத் திரும்பப் பெறும் சட்டம் (ரைட் டு ரீகால்), பிரதிநிதிகளை நிராகரிக்கும் (ரைட் டு ரிஜெக்ட்) ஆகிய வாய்ப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

நாட்டின் பொது சுகாதாரம் வலுப்படுத்தப்படும். சாதாரண மக்களுக்கும் தரமான மருத்துவம் உள்ளிட்ட சுகாதார வசதிகள் கிடைக்க வகை செய்யப்படும். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கும் வகையில் அரசு கல்வி நிறுவனங்களில் சர்வதேச தரத்துக்கு இணையாக கல்வித் தரம் மேம்படுத்தப்படும். ஐஐடி, எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்கள் அனைத்து மாநிலங்களிலும் உருவாக்கப்படும்.

எல்லா குடிமக்களுக்கும் உணவு, குடியிருப்பு, கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். புதிய தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளித்து புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும். நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் உருவாக்கப்படும். அன்னிய நேரடி முதலீட்டை முற்றிலுமாக எதிர்க்க வேண்டியதில்லை. ஆனால், அவை அனுமதிக்கும் துறைகளைப் (சில்லறை வர்த்தகம்) பொருத்தே எங்களுடைய எதிர்ப்பு அமைகிறது. இயற்கை வளங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கனிமங்கள், தாதுக்கள், தண்ணீர், வனம் உள்ளிட்டவை அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும்.

நாட்டில் பல்வேறு அரசு, தனியார் திட்டங்களுக்கு விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இதில் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டம் திருத்தப்படும்.

நாடு முழுவதும் அரசு, தனியார் துறைகளில் உள்ள ஒப்பந்த பணியாளர்கள் முறை முடிவுக்குக் கொண்டு வரப்படும். குறைந்தபட்ச ஊதிய முறை கடுமையாக அமல்படுத்தப்படும். அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும். தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது உச்சவரம்பு 25ல் இருந்து 21 ஆக குறைக்கப்படும்

உள்நாட்டு பாதுகாப்பு மேம்படுத்தப்படும். அனைத்து நாடுகள், அண்டை நாடுகள் ஆகியவற்றுடன் நட்புறவைப் பேணும் வகையில் வலுவான வெளியுறவுக் கொள்கை உருவாக்கப்படும். உரிய நேரத்தில் பணியை முடிக்காத அரசு ஊழியர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Aam Admi party chief Arvind Kejriwal has released the election manifesto in Delhi ahead of the lok sabha polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X