For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காரைக்கால் பாமக மாவட்டச் செயலாளர் வெட்டிக் கொலை

By BBC News தமிழ்
|
தேவமணி
BBC
தேவமணி

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் காரைக்காலில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராக இருந்தவர் தேவமணி. வயது 53. இவரது வீடு காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் அருகே உள்ளது.

வீட்டுக்கு அருகிலேயே திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் பிரதான சாலையில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகம் உள்ளது. நேற்றிரவு சுமார் 10 மணியளவில் கட்சி அலுவலகத்திலிருந்து, தேவமணி அவரது ஆதரவாளருடன் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தேவமணியின் இரு சக்கர வாகனத்தை மறித்து தாக்கியுள்ளனர். தப்பி செல்ல முயன்ற தேவமணியை மர்ம நபர்கள் ஓட ஓட துரத்தி வெட்டியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து தேவமணியை மீட்டு அவரது நண்பர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து திருநள்ளாறு காவல் நிலைய ஆய்வாளர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து திருநள்ளாறு சாலை மற்றும் தேவமணி வீடு, கட்சி அலுவலகம் அருகே பதற்றமான சூழல் நிலவியதால் பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி திருநள்ளாறு காவல் நிலைய ஆய்வாளர் லெனின் பாரதியை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டபோது "நேற்று இரவு குமார் என்ற ஆதரவாளருடன் தேவமணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்தை மறித்த 6 நபர்கள் தேவமணியை வெட்ட முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்து தப்பியோடிய தேவமணியை அவர்கள் துரத்திச் சென்று வெட்டியுள்ளனர். பிறகு அவர் இறந்துவிட்டார்.

இதையடுத்து ஆதரவாளர் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். காவல் துறை முதற்கட்ட விசாரணையில், தேவமணி மற்றும் மணிமாறன் இருவருக்கும் இடைய ஏற்கனவே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. அவர் ஆட்களை வைத்து தேவமணியை வெட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மணிமாறன் மற்றும் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் கிடைத்த சிசிடிவி கேமரா ஆதாரங்களை கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்," என்று தெரிவித்தார்.

மேலும் இதுவரை காரைக்கால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என காவல் துறை தரப்பில் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "தேவமணி காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் நேற்றிரவு கூலிப்படையினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தேவமணியை படுகொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீது கூலிப்படையை ஏவி கொலை செய்யும் கலாச்சாரம் ஒடுக்கப்பட வேண்டும். தேவமணியின் படுகொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவரது குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தர புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Assassination of Karaikal PMK District secretary Devamani murder by mysterious person
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X