குஜராத்தில் மட்டும்.. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.163 கோடி நன்கொடை.. அலறிய கட்சிகள்
காந்திநகர்: குஜராத்தில் மட்டும் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.163 கோடி கிடைத்துள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
குஜராத்தில் மொத்த கட்சிகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ள நன்கொடையில், 94 சதவீதம் பாஜகவுக்கு கிடைத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் குஜராத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் மீண்டும் பாஜக தான் மாநிலத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என விரும்புவது உறுதியாகியுள்ளது.

நெருக்கத்தில் ஆம் ஆத்மி; கலக்கத்தில் பாஜக
ஒட்டுமொத்த நாடே பெரிதும் எதிர்பார்த்துள்ள குஜராத் சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. நேற்று வெளியான ஒரு கருத்துக்கணிப்பில் கூட, பாஜக முன்னிலையில் இருந்தாலும் ஆம் ஆத்மி மிக நெருக்கமாக வந்துள்ளதை பார்க்க முடிந்தது. எனவே, குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை ஆம் ஆத்மி தட்டிப் பறிக்கவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாஜக மீது கார்ப்பரேட்டுகள் பண மழை
குஜராத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் பாஜக மீது மக்களுக்கு ஒருவித அதிருப்தியும், சலிப்பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தியை தங்களுக்கு சாதமாக்கும் வேலையில் ஆம் ஆத்மி ஈடுபட்டுள்ளது. அதில், அக்கட்சி ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், பாஜகவுக்கு அடுத்தப்படியாக ஆம் ஆத்மிக்கு குஜராத் மக்களின் ஆதரவு பெருகிறது. மக்களின் இந்த மனநிலை ஒருபுறம் இருக்க, பெரு நிறுவனங்கள் எனக் கூறப்படும் கார்ப்பரேட்டுகளின் மனநிலை வேறு மாதிரியாக உள்ளது. அதாவது, அடுத்த முறையும் பாஜகதான் ஆட்சியமைக்க வேண்டும் என கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்புகின்றன. இதனை உறுதி செய்யும் வகையில் பாஜக மீது கார்ப்பரேட் நிறுவனங்கள் பண மழையை பொழிந்திருக்கின்றன.

தேர்தல் பத்திரங்கள் - குஷியில் பாஜக
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடி அளிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு அதிக நிதி கிடைத்திருக்கிறது. இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், ஆர்டிஐ மூலமாக பெற்ற தகவலில் இந்த விஷயம் தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கு ரூ.173 கோடி கிடைத்துள்ளது. இதில் 94 சதவீதம் அதாவது ரூ.163 கோடி பாஜகவுக்கு தான் கிடைத்திருக்கிறது.

ஆம் ஆத்மிக்கு குறைவு
இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் அதிக அளவில் நன்கொடி செலுத்தி இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக பாஜகவுக்கு ரூ.163 கோடியும், அடுத்த அடுத்தப்படியாக காங்கிரஸுக்கு ரூ.10.5 கோடியும் கிடைத்துள்ளது. ஆனால், ஆம் ஆத்மிக்கோ வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே கிடைத்திருக்கிறது. இதன் மூலம் பாஜக, காங்கிரஸுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் மத்தியில் அதிக ஆதரவும், ஆம் ஆத்மிக்கு மிகக் குறைவான ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications