For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏர்செல்- மேக்சிஸ் விவகாரம்: மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிகையா?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் தொலைக்காட்சி நிறுவனருமான கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வாய்ப்புகள் தொடர்பாக அட்டார்னி ஜெனரலின் கருத்தை சிபிஐ கேட்டுள்ளது.

2004-ஆம் ஆண்டு மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான அரசில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். 2007-ஆம் ஆண்டு வரை அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், ஏர்செல் நிறுவன பங்குகளை அதன் நிறுவனர் சிவசங்கரன், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க நெருக்குதல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

Dayanidhi Maran and Kalinidhi Maran

இந்தப் பங்குகள் விற்பனை மூலம் கலாநிதி மாறனின் சன் டைரக்ட் நிறுவனம், தொழிலைத் தொடங்காத நிலையிலேயே அதன் பங்குகள் பன் மடங்கு உயர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆறு ஆண்டுகள் கழித்து இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐயிடம் சிவசங்கரன் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ தாமதமாக செயல்படுவதாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கருத்துத் தெரிவித்திருந்தது.

மேலும், ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் மேக்சிஸ் நிறுவனர் அனந்த கிருஷ்ணன், அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோரிடமும், அவர்கள் தொடர்புடைய நிறுவனங்களின் முதலீடுகள் குறித்தும் விசாரிக்க மலேசிய அரசு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது.

அதைத் தொடர்ந்து, மலேசியாவில் உள்ள இந்திய தூதரக உதவியுடன் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு அறிவுறுத்தியது. அதன் பிறகும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் வழக்கை முடித்துக் கொள்ளும் வாய்ப்புகள் குறித்து சிபிஐ ஆராய்ந்தது.

ஆனால், ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக இந்தியாவில் நடத்திய விசாரணை, பதிவு செய்த சாட்சியங்கள் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வாய்ப்புகளை ஆராயும்படி மீண்டும் சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதையடுத்து, இந்த வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மலேசிய குடியுரிமை பெற்ற அனந்த கிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷல் மற்றும் அஸ்ட்ரோ, மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதா? என கருத்து தெரிவிக்கும்படி அட்டார்னி ஜெனரல் வாகனவதியிடம் சிபிஐ கேட்டுள்ளது.

இது குறித்து சிபிஐ உயரதிகாரி ஒருவர் கூறுகையில் அட்டார்னி ஜெனரல் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையை சிபிஐ மேற்கொள்ளும் என்றார்.

English summary
CBI is awaiting the opinion of Attorney General G E Vahanvati on filing the charge sheet against former Telecom Minister Dayanidhi Maran for his alleged involvement in Aircel-Maxis deal, as part of its probe into spectrum allocation scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X