மு.க.ஸ்டாலின் பாணியில் மத்திய அரசுக்கு மமதா பதிலடி- மாநில விழாவில் டெல்லி நிராகரித்த அலங்கார ஊர்தி!
கொல்கத்தா: டெல்லியில் ஜனவரி 26-ல் நடைபெறும் குடியரசு தின விழாவில் மத்திய அரசு அனுமதி மறுத்த அலங்கார ஊர்தி, மாநில அரசின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இடம்பெறும் என்று முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் மமதா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியரசு தின விழாவில் இம்முறை 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அணிவகுப்பில் இடம் கொடுத்துள்ளது மத்திய அரசு. தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில அலங்கார ஊர்தியையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

ஸ்டாலின் அதிரடி
மத்திய அரசின் இந்தப் போக்கு அரசியல் கட்சிகள், மாநிலங்களின் முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் மத்திய அரசு நிராகரித்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் வேலுநாச்சியார், மருதிருவர், வ.உ.சி, பாரதியோர் உருவங்கள் அடங்கிய ஊர்தி, சென்னையில் நடைபெறும் மாநில அரசின் குடியரசு தின விழாவில் இடம்பெறும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதேபோல் தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் இந்த அலங்கார ஊர்தி காட்சிபடுத்தப்படும் என்றார் ஸ்டாலின்.

மமதாவும் அறிவிப்பு
தற்போது இதே பாணியில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் அறிவித்துள்ளார். மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட மேற்கு வங்க அலங்கார ஊர்தி, கொல்கத்தாவில் வலம் வரும் என அறிவித்திருக்கிறார் மமதா. கொல்கத்தாவில் இன்று இதனை அறிவித்தார் மமதா.

மாநில அரசுதான் காரணம்
கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடம் மமதா பானர்ஜி கூறியதாவது: டெல்லி இந்தியா கேட்டில் நேதாஜி உருவ சிலை நிறுவப்பட உள்ளது. மத்திய அரசுக்கு மேற்கு வங்க அரசு கொடுத்த் கடும் நெருக்கடிதான் இதற்கு காரணமாகும். நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அனைத்து ஆவணங்களையும் பகிரங்கப்படுத்திவிட்டதாக மத்திய அரசு சொல்கிறது. அவற்றை நாங்கள் ஆவணப்படுத்தி வருகிறோம்.

நிராகரிப்பு ஏனோ?
மேற்கு வங்க மாநில அரசு ரவீந்திரநாத் தாகூர் உருவத்தை அலங்கார ஊர்தியில் இடம்பெறச் செய்த போதும் நிராகரித்தனர்; இப்போது நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் உருவம் இடம்பெறச் செய்தோம். அதையும் நிராகரிக்கிறது மத்திய அரசு. ஆனால் கொல்கத்தாவில் ஜனவரி 26-ல் இந்த அலங்கார ஊர்தி வலம் வரும். இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.

தேசிய விடுமுறையாக அறிவிக்கனும்
இதனிடையே தமது ட்விட்டர் பக்கத்தில், நேதாஜி பிறந்த நாளான ஜனவரி 23-ந் தேதியை மத்திய அரசு தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு ஒட்டுமொத்த தேசமும் மரியாதை செலுத்தும் வகையில் தேசிய விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் மமதா பானர்ஜி.












Click it and Unblock the Notifications