• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிப்டோ கரன்சிக்கு இந்தியாவில் பெருகி வரும் திடீர் வரவேற்பு - ஏன் தெரியுமா?

By BBC News தமிழ்
|

பங்குச் சந்தைகள் ஸ்திரமற்ற நிலையில் உள்ள இந்த ஆண்டில், முதலீட்டு உலகில் பிட்காய்ன்கள் மற்றும் கிரிப்டோ கரன்சிகள் மீண்டும் பரந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. உதாரணமாக, பிட்காய்ன் மதிப்பு ஒரு யூனிட்டின் மதிப்பு ரூ.16 லட்சத்தை (22 ஆயிரம் டாலர்கள்) எட்டியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இது அதிகபட்ச அளவாகும். மார்ச் மாதம் 5900 டாலர்கள் என்ற நிலையில் இருந்தது. இப்போது 22 ஆயிரம் டாலர்களாக அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு யூனிட் மதிப்பு ஒரு லட்சம் டாலர்களைத் தொடும் அல்லது 3.18 லட்சம் டாலர்களை தொடும் என அறிக்கைகள் கூறுகின்றன.

Cryptocurrencys sudden rise in India - Do you know why?

கிரிப்டோ கரன்சி என்பது அரசால் ஒழுங்குபடுத்தப்படாத டிஜிட்டல் பணமாகக் கருதப்படுகிறது. அது ரூபாய் அல்லது டாலர்களாகக் கிடையாது. ஆனால் சரக்குகள் மற்றும் சேவைகள் விற்க இவை பயன்படுத்தப்படுகின்றன.

கிரிப்டோ கரன்சியின் இந்த அபாரமான வளர்ச்சி காரணமாக, புதுடெல்லியில் மக்கள் தொடர்பு பணியில் ஈடுபட்டிருக்கும் 34 வயதாந ரித்திகா கர் இதில் முதலீடு செய்யும் எண்ணம் பெற்றார். நான்கு மாதங்களுக்கு முன்பு அவர் கிரிப்டோகரன்சியில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து பிட்காயின்கள் வாங்கினார்.

சில கட்டுரைகளைப் படித்தபோது கிரிப்டோ கரன்சிகள் பற்றி நான் அறிந்தேன். உண்மையில் அது ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அந்த எண்ணம் எனக்கும் ஏற்பட்டது. புதிதாக எதையாவது ஏன் முயற்சித்துப் பார்க்கக் கூடாது என தோன்றியது. நான்கு மாதங்களில் என் முதலீடு ஒரு லட்சம் ரூபாயை எட்டியுள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.

கிரிப்டோ கரன்சியில் முதன்முறையாக முதலீடு செய்திருக்கும் ரித்திகா, நீண்டகால நோக்கில் முதலீடு செய்து வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்துக்கு முதலீட்டை வைத்திருக்க விரும்புகிறார். விரைவாக லாபம் ஈட்டுவதற்காக நான் இதைச் செய்யவில்லை. என் எதிர்காலத்துக்கான முதலீடு போன்றதாக இருக்கும். நான் தனியாக வாழும் பெண. முடிந்த வரையில் பல வகைகளில் முதலீடுகள் செய்ய விரும்புபவராக இருக்கிறேன்'' என்று அவர் குறிப்பிட்டார்.

கிரிப்டோகரன்சி பற்றிய கட்டுரையை படித்தபோது, ரித்திகா தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து, முதலீட்டு வாய்ப்பாக இது இருக்குமா என தேடியிருக்கிறார். ட்விட்டர், முகநூல்களில் இதுகுறித்து நிறைய குழுக்கள் இருக்கின்றன. வலைப்பூக்களும் (blog) இருக்கின்றன. இதே சிந்தனையில் உள்ளவர்களுடன் நீங்கள் சாட் செய்யலாம். அவர்களிடம் இருந்து செய்யக் கூடிய மற்றும் செய்யக் கூடாத விஷயங்களைக் கற்கலாம்'' என்றார் அவர்.

பல தொழில் நிறுவனங்கள் சர்வதேச பரிவர்த்தனைகள் செய்வதற்கு கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்துகின்றன. மும்பையில் வசிக்கும் 25 வயதான ருச்சி பால் என்பவர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 2015-ல் இருந்து அவர் கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்தி வருகிறார்.

கிரிப்டோ கரன்சி மூலம் பணம் அளிப்பதற்கான கட்டணம் குறைவு, எளிதானது என்பதால் சர்வதேச வாடிக்கையாளர்கள் விரும்பிய காரணத்தால் கிரிப்டோ கரன்சிகளை அவர் பயன்படுத்தத் தொடங்கினார்.

உலகம் முழுக்க பிட்காயின்கள் ஏற்கப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள எனது வாடிக்கையாளர்கள் கிரிப்டோ கரன்சி மூலம் பணம் அளிப்பதை விரும்புகின்றனர். வெஸ்டர்ன் யூனியன் சேவையை அவர்கள் பயன்படுத்துகின்றனர். அது மிகவும் அதிக செலவு பிடிக்கக் கூடியதாகவும், நிறைய நடைமுறைகளை பின்பற்ற வேண்டியும் உள்ளது என்பதால் கிரிப்டோ கரன்சி முறையை அவர்கள் விரும்புகின்றனர். பே பால், பர்பெக்ட் மணி போன்ற சர்வதேச பணப்பட்டுவாடா வழிமுறைகளை பயன்படுத்திப் பார்த்த பிறகு, பிட் காயின்களைப் பயன்படுத்த அவர்கள் முடிவு செய்தனர்'' என்று ருச்சி பால் தெரிவித்தார்.

மூன்றாம் தரப்பாரின் சான்றளிப்பு எதுவும் தேவையில்லை என்பதால் கிரிப்டோ கரன்சி மூலம் பரிவர்த்தனை செய்வது எளிதாக உள்ளது. குறைந்த கட்டணமாகவும் இருக்கிறது. தொழில் வாய்ப்புகளை பரவலாக்க உதவிகரமாகவும் இருக்கிறது.

கிரிப்டோகரன்சி நடைமுறை தொடர்ந்து நீடிக்குமா?

கடந்த ஆறு மாதங்களில், பயனாளராகப் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 130 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கிரிப்டோ கரன்சி தளத்தின் இந்தியாவின் WazirX நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி நிஸ்ச்சல் ஷெட்டி தெரிவித்தார். மெய்நிகர் கரன்சி அல்லது கிரிப்டோ கரன்சி டிரேடிங் செய்ய நிதிச் சேவை நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) விதித்த தடையை கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. பிறகு முடக்கநிலை அமலுக்கு வந்தது. வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் நடைமுறை உருவானது. இதனால் இதுகுறித்த விவரங்களைப் படித்துப் பார்க்க, விசாரித்து அறிய மக்களுக்கு நிறைய நேரமும் வாய்ப்பும் கிடைத்தது. வேலைகளை இழந்த மக்கள், பணம் சம்பாதிக்க புதிய வழிகளைத் தேடினார்கள்'' என்று பிபிசியிடம் ஷெட்டி தெரிவித்தார்.

நிறைய பேர் கிரிப்டோ பரிவர்த்தனைக்குள் வருவதற்கு பெருந்தொற்று பரவல் உதவியது. மைக்ரோ ஸ்ட்ரேட்டஜி, பே ஸ்கேல், பே பால் போன்ற உலகளாவிய நிறுவன முதலீட்டாளர்கள் கிரிப்டோ கரன்சிகளில் ஏராளமாக முதலீடு செய்தன. அதனால் இத் துறையில் வலுவான முதலீடு கிடைத்தது'' என்றும் ஷெட்டி குறிப்பிட்டார்.

2017-க்குப் பிறகு என்ன மாற்றம் நிகழ்ந்தது என்று கேட்டபோது, முதலீட்டாளர்கள் முன்பைவிட இப்போது அதிகம் விவரங்களை அறிந்துள்ளனர். 2017ல் இருந்து முழுமையான சுழற்சியை அவர்கள் பார்த்துள்ளனர். ஒரு உச்சம் வந்தால், ஒரு தாழ்வு வரும் என அறிந்திருக்கிறார்கள். என்ன நடக்கும் என அறிந்திருக்கிறார்கள்'' என்று ஷெட்டி பதில் அளித்தார்.

WazirX தவிர, Zebpay, CoinDCX மற்றும் CoinSwitch போன்ற நிறுவனங்களும் இந்த வர்த்தகத்தில் சேவை அளிக்கின்றன. தங்கள் தளத்தில் பயனாளர்களாக இருப்பவர்களின் சராசரி வயது 24 முதல் 40-க்கு உள்பட்டதாக இருக்கிறது என்று WazirX தெரிவித்துள்ளது. அவர்கள் பொதுவாக தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பின்னணியைக் கொண்டவர்களாக இருப்பதாகவும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்ரோபாலிட்டன் மற்றும் முதல்நிலை நகரங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இதில் இருக்கிறார்கள்.

கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டை கண்காணிக்கும் காயின்ஜெக்கோ (CoinGecko) அமைப்பு, இந்தியாவில் முதல் 4 நிலைகளில் உள்ள கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை மையங்கள் 2020 டிசம்பர் 16 வரையில் 22.4 மில்லியன்டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளன; 2020 மார்ச் 1 ஆம் தேதி இது 4.5 மில்லியன் டாலர்களாக இருந்தது என தெரிவித்துள்ளது.

ஆசியாவில் பிட்காயின் பயன்படுத்தும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது என்று உலக அளவில் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை செய்யும் பாக்ஸ்புல் (Paxful) அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் சீனா முதலாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் அமெரிக்கா, நைஜீரியா, சீனா, கனடா, பிரிட்டனுக்கு அடுத்த ஆறாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

கிரிப்டோ கரன்சியின் பின்னால் உள்ள தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்பவர்கள் பொதுவாக அதில் முதலீடு செய்கிறார்கள்'' என்று CoinDCX நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.வாக உள்ள சுமித் குப்தா பிபிசியிடம் தெரிவித்தார்.

2017ல் பணத்தாசையால் வரவேற்பு கிடைத்தது. ஆனால் இப்போது நம்பிக்கை அடிப்படையில் வளர்ச்சி உள்ளது'' என்று அவர் கூறுகிறார். கிரிப்டோ கரன்சிகள் பற்றிய தகவல்கள் கிடைப்பது அல்லது தவறான தகவல்களுக்கான வாய்ப்பு பற்றி கேட்டதற்கு, தங்கமும் கூட சட்டபூர்வ பரிவர்த்தனை பொருள் கிடையாது. ஆனால் மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள். அதை சட்டவிரோதமாக ஆக்கவில்லை. கிரிப்டோ கரன்சிகள் வாங்க, விற்க மக்களை உச்சநீதிமன்றம் அனுமதிக்கிறது. எல்லாமே விழிப்புணர்வைப் பொருத்தது தான்'' என்று அவர் பதில் அளித்தார்.

மக்கள் முதலீடு செய்வதற்கு முன்னதாக பிளாக்செயின் அல்லது பிட்காயின் பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று குப்தா கூறுகிறார். அது வேகமாக மாற்றம் ஏற்படும் சொத்து வகையாக இருப்பதால், மிகவும் கவனமான அணுகுமுறை தேவை'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

கிரிப்டோகரன்சிஇந்தியாவில்சட்டபூர்வமானதா, ஒழுங்குபடுத்தப்படுகிறதா?

எதிர்காலத்தில் இன்டர்நெட் பணமாக பிட்காயின் மாறும்'' என்று சன்னி பிட்காயின் நிறுவனத்தின் நிறுவனரும் பிட்காயின் நிபுணருமான சந்தீப் கோயங்கா கூறுகிறார்.

இதன் சொத்து வகையை இந்திய அரசு அடையாளம் கண்டுகொண்டு, இது சட்ட விரோதமானதல்ல என்று தெளிவாகக் கூறும், வரி விதிப்புக் கொள்கையை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. மேலோட்டமான வரிவிதிப்புக் கொள்கை போதுமானது'' என்றார் கோயங்கா.

மற்ற நாடுகளிலும் ஒழுங்குபடுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. அவற்றை இந்தியா ஏற்றுக் கொண்டு, உரிய மாற்றங்களைச் செய்தால் போதும். இத் துறையில் ஈடுபட்டிருப்பவர்களை கலந்து ஆலோசித்தால், அதற்கான வரையறைகளைத் தெரிவிப்பார்கள். நுட்பமான நிதி கையாளுதல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாம் முன்னணியில் இருக்கிறோம். இந்த பலத்தைப் பயன்படுத்தி, இந்தப் புரட்சியை நாம் முன்னெடுக்கலாம்'' என்றார் அவர்.

முழுக்க முழுக்க ஆன்லைன் கரன்சியாக இருப்பதால், மற்ற டிஜிட்டல் நிதித் தளங்களைப் போல, கணினிசார் கிரிமினல்கள் இதைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்யும் வாய்ப்பு அதிகம். அதனால் தான் இந்தியாவின் மத்திய வங்கி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2018க்கு முன்பு வரையில் தடை விதித்திருந்தது. இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் மீண்டும் இதற்கு அனுமதி அளித்தது.

ஆனால், சமூகத்திற்கு இது ஆக்கபூர்வமான பங்களிப்பு செய்யவில்லை என்று அர்த்தம் கிடையாது என்று கோயங்கா கூறுகிறார். வேறு எந்த தொழில் துறையையும் போல, கிரிப்டோ கரன்சியிலும் நல்ல மற்றும் மோசமான செயல்பாட்டாளர்கள் இருக்கிறார்கள். அதனால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படக் கூடாது'' என்கிறார் அவர்.

தங்கத்தைப் போல, பிட்காயின்களும் தனித்துவமானவை, மதிப்பு மிக்கவை, அரிதாகக் கிடைக்கக் கூடியவை. பணத்துக்கு துணையாக பயன்படுத்தக் கூடிய முக்கியமான தன்மைகள் இதற்கு இருக்கின்றன. எனவே, பிட்காயின்களுக்கு உட்பொதிந்த மதிப்பு கிடையாது என்று சொல்வது தவறானது'' என்று அவர் கூறினார்.

கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்யும்போது உணர்ச்சிவயப்படாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்பதற்கு ஆரம்பத்தில் 10 ரூபாய் அளவில் முதலீடு செய்து, அனுபவத்தைப் பார்க்க வேண்டும். முதலீட்டு வாய்ப்புகளை பரவலாக்கும் வகையில் கிரிப்டோ கரன்சியைப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் செய்ய தடை விதித்து 2018 ஏப்ரல் 16-ல் ஆர்.பி.ஐ. சுற்றறிக்கை வெளியிட்டது. மெய்நிகர் கரன்சிகள் பரிமாற்றத்தில் ஈடுபட வேண்டாம் என்று வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களுக்கு அப்போது அறிவுறுத்தப்பட்டது. அந்த பரிவர்த்தனையில் ஈடுபடும் யாரையும் ஊக்குவிக்க வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. டிஜிட்டல் கரன்சிகள் தொடர்பான வணிகத்தில் ஈடுபடுவதில் உள்ள பல்வேறு ஆபத்துகள் குறித்து முன்னர் ஆர்.பி.ஐ. எச்சரிக்கைகள் விடுத்திருந்தது. அதை எதிர்த்து இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் சங்கம் (IAMAI) நீதிமன்றத்தை நாடியது. பல்வேறு கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை மையங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் அந்த சுற்றறிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

மோசடிகள் செய்வதற்கு கிரிப்டோ கரன்சிகள் பயன்படுத்தப் படுகின்றன என்றும், அது நிதி நடைமுறையைப் பாதிக்கும் என்றும் கருதியதால் அதற்கு ஆர்.பி.ஐ. தடை விதித்தது. கிரிப்டோ கரன்சிகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும் என்று ஆர்.பி.ஐ. காத்திருந்த சூழ்நிலையில், எந்த வகையான பிரச்சினையும் ஏற்படாமல் தவிர்க்க, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் இருந்து விலகி இருக்கும்படி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டது.

ஆர்.பி.ஐ.யின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது'' என்று இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் சங்கம் கூறியது. நாட்டின் வங்கி நடைமுறையைப் பயன்படுத்துவது ஒவ்வொரு தொழில்நிறுவனத்துக்கும் உள்ள உரிமை என்று கூறியது. நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அனைத்து தளங்களும் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவை சட்டவிரோதமானவை அல்ல என்று குறிப்பிட்டது.

வரி ஏதும் உண்டா?

கிரிப்டோ கரன்சி மூலம் கிடைக்கும் வருவாய் எப்படி கருதப்படும் என்பதில் இன்னும் நிறைய குழப்பம் உள்ளது. இதுகுறித்து அரசு தெளிவான வழிகாட்டுதல் எதுவும் வெளியிடவில்லை. எனவே, கிரிப்டோ கரன்சியை நாணயமாக ஆர்.பி.ஐ. அங்கீகரிக்கவில்லை என்பதால், வரி விஷயங்களைப் பொருத்த வரையில் இது ஒரு சொத்து என்ற அளவில் கருதப்படும்.

இதை பிற இனங்களில் இருந்து கிடைத்த வருவாய்' என்று காட்ட வேண்டும். குறுகிய காலத்திற்கு வைத்திருந்தீர்களா அல்லது நீண்ட காலம் வைத்திருந்தீர்களா என்பதைப் பொருத்து அது மாறுபடும். அதற்கேற்ப நீங்கள் மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்'' என்று Moneyeduschool நிறுவனர் அர்னவ் பாண்டியா பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த வருமானத்தை எந்த வகைப்பாட்டில் காட்ட ஆடிட்டர் விரும்புகிறார் என்பதைப் பொருத்து அது அமையும். கிரிப்டோ கரன்சி மூலம் கிடைக்கும் வருமானத்தை வருமான வரித் துறையினர் அறிந்து கொள்ள முடியாது என்று நீங்கள் அனுமானிக்கக் கூடாது. இந்தியாவில் அனைத்து தளங்களும் கே.ஒய்.சி. என்ற வாடிக்கையாளரை அறியும் படிவத்தின் இசைவு பெற்றதாக இருப்பதால், அனைத்து விவரங்களும் வருமான வரித் துறைக்குத் தெரியும்'' என்றும் பாண்டியா தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Cryptocurrency is considered digital currency that is not regulated by the government. It is not in rupees or dollars. But these are used to sell goods and services.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X