உத்தரகாண்ட் , மணிப்பூர், கோவாவின் அடுத்த முதல்வர்கள் யார்? - முட்டி மோதும் தலைகள்
உத்தரகாண்ட்,மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் பதவியை பிடிக்க மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
டேராடூன்: நான்கு மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள போதிலும், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் முதல்வர் பதவியை பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களிலும் முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக தலைமைக்கு சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து 2வது முறையாக பாஜ ஆட்சியை பிடித்துள்ளதால், இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வர் பதவியை ஏற்க உள்ளார்.
உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜ முதல்வர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இம்மாநில பாஜ.வில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்களால் கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை முதல்வரை பாஜக தலைமை மாற்றியது.

உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்த புஷ்கர் சிங் தாமி சட்டசபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும் அவரே முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கதிமா தொகுதியில் தோல்வியை தழுவினார். காங்கிரஸ் வேட்பாளர் புவன் கப்ரி, 6,500 வாக்குகள் வித்தியாசத்தில் தாமியை தோற்கடித்தார். இந்த தொகுதி, தாமியின் கோட்டையாக கருதப்பட்டது.

புஷ்கர் சிங் தாமி
கடந்த 2012, 2017ம் ஆண்டுகளில் நடத்த தேர்தல்களில், அவர் இங்கு வெற்றி பெற்றார். பிரதமர் மோடி உட்பட கட்சியின் உயர்மட்டத் தலைமையின் செல்வாக்கு பெற்ற புஷ்கர் சிங் தாமி தற்போதைய தேர்தலில் தோற்றதால், மீண்டும் அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படுமா? என்ற கேள்விஎழுந்தது. அதனால், முன்னாள் மாநிலத் தலைவர் பன்சிதர் பகத், மாநில அமைச்சர்கள் தன் சிங் ராவத், சத்பால் மகராஜ் ஆகியோர் முதல்வர் பதவியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனினும் தாமிக்குதான் அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

உட்கட்சி ஜனநாயகம்
இது குறித்து உத்தரகாண்ட் தேர்தல் பொறுப்பாளரும், பொதுச் செயலாளருமான கைலாஷ் விஜயவர்கியா கூறுகையில், 'உத்தரகாண்டின் அடுத்த முதல்வர் யார்? என்று கேட்கின்றனர். எங்களது கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் உள்ளது. சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்போம்; அவரது பெயர் கட்சியின் தலைமைக்கு அனுப்பப்பட்டு, அதன்பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

சிங்கத்தை இழந்து விட்டோம்
அடுத்த முதல்வர் யார் என்று இப்போதைக்கு யாராலும் சொல்ல முடியாது. தோல்வியடைந்த புஷ்கர் சிங் தாமிக்கு மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் மிக முக்கியமான தலைவர். நாங்கள் கோட்டையை வென்றோம்; ஆனால் சிங்கத்தை இழந்துவிட்டோம்,' என்றார்.

மணிப்பூரில் முணுமுணுப்பு
மணிப்பூரை பொருத்தமட்டில் 60 உறுப்பினர்களை கொண்ட மாநில சட்டசபையில் 32 இடங்களை கைப்பற்றி பாஜ பெரும்பான்மை பலத்தை தாண்டியுள்ளது. தற்போதைய முதல்வர் பிரேன் சிங் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்படுவாரா? அல்லது புதிய முகமாக வேறு யாரேனும் அறிவிக்கப்படுவாரா? என்பது குறித்து பாஜக மாநில தலைவர் சாரதா தேவியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், முதல்வர் யார் என்பதை தேசிய தலைமைதான் தீர்மானிக்கும் என்றார்.

பிரேன் சிங்
மாநில தலைமையுடன் கலந்தாலோசித்து தேசிய தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார். மணிப்பூரில் பாஜ மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருந்தாலும் கூட, பிரேன் சிங்கை மீண்டும் முதல்வராக்க கூடாது என்று மாநில தலைவர்கள் சிலர் கூறிவருவதால் அங்கும் குழப்பம் நீடிக்கிறது. ஆனால் பாஜக தலைமை பிரைன் சிங்கை தேர்வு செய்யும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கோவாவில் அடுத்த முதல்வர்
கோவாவிலும் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கு மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜ 20 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மை பலத்துக்கான 21 இடங்களை கைப்பற்றவில்லை என்றாலும் கூட, மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளது. மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், மூன்று சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநரை சந்திக்க உள்ளனர். முதல்வர் பிரமோத் சாவந்த் மீண்டும் முதல்வராக பதவியேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரமோத் சாவந்த்
முதல்வர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் அடிபடுகின்றன. அந்த பட்டியலில் துணை முதல்வர் சந்திரகாந்த் காவ்லேகர், சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே, போக்குவரத்து அமைச்சர் மவுவின் கோடின்ஹோ ஆகியோரின் பெயர்கள் உள்ளன. மாநில பாஜக பிரமோத் சாவந்தை ஆதரிக்கும் அதே வேளையில், தேசிய பாஜக உயர்நிலைக் குழு விஸ்வஜித் ரானேவுக்கு ஆதரவளிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் உட்கட்சி பூசல்களில் சிக்கி தவிக்கிறது கோவா மாநில பாஜக.












Click it and Unblock the Notifications