For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹரிஷ் ராவத் அரசின் பெரும்பான்மையை அங்கீகரித்த உச்சநீதிமன்றம்! உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சி ரத்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நேற்று நிரூபித்தது. சட்டசபையில் நடைபெற்ற வாக்கெடுப்பை, இன்று, பரிசீலித்த உச்சநீதிமன்றம், அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதை உறுதி செய்தது. இதையடுத்து, உத்தரகாண்ட் மாநிலத்தில், குடியரசு தலைவர் ஆட்சியை திரும்ப பெற மத்திய அரசு முன்வந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. 70 உறுப்பினர்களை கொண்ட மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பாஜகவுக்கு 28 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும் முற்போக்கு ஜனநாயக முன்னணிக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

Harish Rawat confident after trust vote

கடந்த மார்ச் மாதம் காங்கிரசை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் ஹரிஷ் ராவத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். அவர்கள் பட்ஜெட் மசோதாவின்போது அரசுக்கு எதிராகவும் வாக்களித்தனர். இதனால் அவர்களை சபாநாயகர் கோவிந்த் சிங் தகுதி நீக்கம் செய்தார்.

இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் கே.கே.பாலை சந்தித்து முறையிட்டனர். இதனால் மார்ச் 28ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட்டார்.

மாநிலத்தில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்ததாலும், ஹரிஷ் ராவத் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்ததாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில், நைனிடால் ஹைகோர்ட்டும், சுப்ரீம்கோர்ட்டும் அவர்களுடைய மனுவை தள்ளுபடி செய்தன. அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள தடை விதித்தன.

முன்னதாக ஹரிஷ் ராவத் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் 'உத்தரகாண்ட் சட்டசபையில் மே 10ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும். வாக்கெடுப்பின் முடிவுகளை வெளியிடக் கூடாது. அதை சுப்ரீம் கோர்ட்டே அதிகாரப்பூர்வமாக 11ம் தேதி அறிவிக்கும் என்றும் கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

வாக்கெடுப்பு நடத்துவதற்கு வசதியாக நேற்று காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் உத்தரகாண்ட் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று காலை 10.30 மணி அளவில் தொடங்கியது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்த காலக்கெடுவுக்குள் ஓட்டெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. சட்டசபையின் முதன்மை செயலாளர் வாக்கெடுப்பை நடத்தினார்.

தடை விதிக்கப்பட்ட 9 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவிர, மற்ற 61 உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு ஓட்டுப் போட்டனர். சீலிடப்பட்ட உரையில் வாக்குப்பதிவு விவரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இன்று சுப்ரீம்கோர்ட்டில் உரை திறக்கப்பட்டது.

ஹரிஷ் ராவத் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக 33 வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், எனவே 61 பேர் கொண்ட சட்டசபையில் ஹரிஷ் ராவத் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாகவும் சுப்ரீம்கோர்ட் அறிவித்தது. அதிருப்தி எம்.எல்.ஏக்களும் வாக்களித்திருந்தால் அரசு கவிழ்ந்திருக்கும் என்பது இதில் குறிப்பிடத்தக்க அம்சம்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹரிஷ் ராவத் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை விலக்கி கொள்வதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். உத்தரகாண்ட் நிகழ்வுகள் பாஜகவுக்கு பின்னடைவு இல்லை என்று, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

English summary
Harish Rawat will return as the Chief Minister of Uttarakhand. The Supreme Court today gave the go ahead to Rawat to take over as the Chief Minister of Uttarakhand after it had found that he had won the floor test that was held yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X