ஜம்மு காஷ்மீரில் டிஜிபி ‘மர்மமான’ முறையில் படுகொலை.. மிஸ் ஆன வேலையாள்.. போலீசார் சந்தேகம்!
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா, ஜம்முவின் புறநகரில் உள்ள உதய்வாலா பகுதியில், தான் தங்கியிருந்த வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி, இந்தக் கொலை தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
டிஜிபி இருந்த வீட்டில் வேலை செய்தவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிஜிபி படுகொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோஹியா (57). இவர் அம்மாநிலத்தில் சிறைத்துறை டிஜிபியாக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், இவர் நேற்று வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார். தகவலறிந்த உள்ளூர் போலீசார் விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த கொலைச் சம்பவம் குறித்து விசாரித்தனர்.

ஹேமந்த் குமார் லோஹியா ஐபிஎஸ்
கொலை செய்யப்பட்ட சிறைத்துறை டி.ஜி.பி ஹேமந்த் குமார் லோஹியா, 1992ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் கேடர் ஆவார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைத்துறை டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றார். ஹேமந்த் குமார் லோஹியா தனது சொந்த வீடு புதுப்பிக்கப்பட்டு வருவதால், தனது நண்பர் ராஜீவ் கஜூரியாவின் வீட்டில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.

மர்ம மரணம்
இந்நிலையில் நேற்று மர்மமான முறையில், அவர் தங்கியிருந்த வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், கொலை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து ஜம்மு கூடுல் டி.ஜி.பி முகேஷ் சிங் கூறுகையில், குற்றம் நடந்த இடத்தை முதலில் பரிசோதித்ததில் இது சந்தேகத்திற்குரிய கொலை வழக்கு என தெரியவந்துள்ளது. அவரது உடலில் தீக்காயங்களும் காணப்பட்டன என்றார்.

வீட்டு வேலையாள்
மேலும், முதற்கட்ட விசாரணை நடத்தி வருகிறோம். வீட்டு வேலை செய்பவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வீட்டு வேலை செய்பவர் யாசிர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார்.

பதற்றம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஐ.பி.எஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications