For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. வீட்டில் ரூ.88 லட்சம் பட்டுச் சேலைகள்... மிரட்டி வாங்கப்பட்ட சிறுதாவூர் நிலம்: அரசு வக்கீல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்காக நில உரிமையாளரை மிரட்டி சிறுதாவூரில் ஒன்றரை ஏக்கர் நிலம் எழுதி வாங்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் பவானிசிங் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்த 914 பட்டுசேலை மற்றும் 6,200 இதர சேலைகள், ஆடைகளின் மொத்த மதிப்பு 88 லட்சம் என்றும் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்கக் கோரி வழக்கறிஞர்கள் பன்னீர்செல்வம், தனஞ்செயன், செல்வகுமார், அன்பரசு ஆகியோர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது வாதத்தை தொடங்கினார்.

அரசு வழக்கறிஞர் பவானி சிங், ''ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக, சாட்சிகள் கூறியதை எடுத்து வைக்கிறேன்'' என கூறிய போது, குறுக்கிட்ட நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, ''சாட்சிகள் முதலில் கூறிய சாட்சியத்தை எடுத்து கொள்வதா... இரண்டாவது முறையாக சாட்சியத்தை மாற்றி கூறியதை எடுத்து கொள்வதா?'' என கேட்டார். அரசு வழக்கறிஞர் பவானி சிங், ''சாட்சிகள் முதலில் கூறிய சாட்சியத்தை தான் எடுத்து கொள்ள வேண்டும்'' என்றார்.

தொடர்ந்து வாதிட்ட பவானிசிங் கூறியதாவது:

ராஜேந்திரன் சாட்சியம்

ராஜேந்திரன் சாட்சியம்

தமிழக காவல் துறையில் வீடியோகிராபராக பணியாற்றி வரும் ராஜேந்திரன் கொடுத்துள்ள சாட்சியத்தில் வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட வழக்கில் குற்றவாளிகளாக இருப்போருக்கு சொந்தமான எண் 31ஏ, போயஸ் கார்டன், எண் 36 போயஸ் கார்டன் வீடு, சிறுதாவூர் பங்களா, பையனூர் பங்களா, ஐதராபாத் திராட்சை தோட்டம், கொடைக்கானல் பங்களா, கொடநாடு தேயிலை தோட்டம், சென்னையில் உள்ள கிண்டி, தியாகராய நகர், அண்ணாநகர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, அரும்பாக்கம், பரமேஸ்வர்நகர், மந்தைவெளி. நுங்கம்பாக்கம், சாந்தோம், செய்யூர் உள்பட பல பகுதியில் உள்ள வீடு, பங்களா, அலுவலகங்கள், நமது எம்.ஜி.ஆர். ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ் உள்பட பல இடங்களில் தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதை படம் பிடித்துள்ளார்.

குவியல் குவியலாய் தங்கம் வெள்ளி

குவியல் குவியலாய் தங்கம் வெள்ளி

குற்றவாளிகளுக்கு சொந்தமான வீடுகளில் தங்க, வைர ஆபரணங்கள், தங்கம், வெள்ளி குத்துவிளக்குகள், தங்கத்தால் தயாரிக்கப்பட்ட பூஜை பொருட்கள், விநாயகர் உள்பட சாமி சிலைகள், குங்குமச்சிமிழ், காமாட்சியம்மன் விளக்கு, பல சூட்கேஸ்கள், பல பீரோக்கள், விலை உயர்ந்த கட்டில், மெத்தை, தலையணை, நாற்காலிகள், டைனிங் டேபிள், ஆடம்பர அலங்காரப் பொருட்கள், விலை மதிப்பில்லாத டி.வி., வி.சி.ஆர்., வி.சி.டி., டி.வி.டி. பிளேயர்கள் உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன.

விலை உயர்ந்த கற்கள்

விலை உயர்ந்த கற்கள்

மேலும், வீடு மற்றும் பங்களாக்களில் ஹால், சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை, பூறை அறை உள்ளிட்டவற்றில் விலை உயர்ந்த மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. குற்றவாளிகளுக்கு சொந்தமான கம்பெனிகள், அவர்கள் பங்குதாரர்களாக இருக்கும் கம்பெனிகளில் உள்ள கட்டிடங்களிலும் பல கோடி செலவில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. கம்பெனிகளில் வாங்கியுள்ள சொகுசு பஸ் உள்பட வாகனங்களும் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது என்று சாட்சியம் அளித்திருந்ததை புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார்.

சசி எண்டர்பிரைசஸ்

சசி எண்டர்பிரைசஸ்

தாஜுதீன் என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தில், சென்னை ஜெம்ஸ்கோர்ட் சாலையில் தங்களுக்கு சொந்தமான கட்டிடம் விற்பனை செய்ய முடிவு செய்திருந்ததாகவும், இதை தெரிந்துகொண்ட ஒருவர் கட்டிடத்தை தங்களுக்கு விற்பனை செய்யும்படி வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார். சுமார் 60 ஆயிரம் சதுர அடிகள் கொண்ட கட்டிடத்தை ஜெயலலிதா, சசிகலா, வி.என்.சுதாகரன் பெயரில் தாஜுதீன் கிரயம் செய்து கொடுத்துள்ளார். இதற்காக ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 500 காசோலையாகவும், ரூ.500 ரொக்க பணமாகவும் கொடுத்தாக தாஜுதீன் சாட்சியம் அளித்துள்ளார். அந்த கட்டிடம் சசி எண்டர் பிரைசஸ் நிறுவனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

மிரட்டி வாங்கப்பட்ட நிலம்

மிரட்டி வாங்கப்பட்ட நிலம்

வெங்கடராமன் என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தில், மகாபலிபுரம் சாலையில் உள்ள சிறுதாவூரில் தனக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலம் இருந்தது என்று கூறியுள்ளார். தான் திருவல்லிகேணியில் வசித்து வந்தாலும், அடிக்கடி சிறுதாவூரில் உள்ள நிலத்தை பார்த்து வந்துள்ளார். ஒருமுறை நிலத்தை பார்க்க சென்றபோது, நிலத்தின் ஒரு பகுதியில் முள்வேலி போடப்பட்டிருந்ததை பார்த்து, நிலத்தின் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், ‘‘மூன்று பேர் வந்து வேலி போட்டனர். மேலும், இந்த முகவரில் வந்து பார்க்கும்படி ஒரு முகவரியை கொடுத்து சென்றனர்'' என்று கூறினர்.

அந்த முகவரியில் சென்று விசாரித்தபோது, நிலத்தை முழுமையாக தங்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தான் நிலத்தை விற்பனை செய்யும் யோசனையில் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், இந்த நிலத்தை வாங்குபவர் தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதா, முரண்டு பிடிக்காமல் நிலத்தை எழுதி கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர். வேறு வழியில்லாமல், பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை ரூ.39 ஆயிரத்திற்கு எழுதி கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

திருவாரூர் நிலங்கள்

திருவாரூர் நிலங்கள்

இதேபோல், சிவசங்கர் என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தில், நான் சேலம் மாவட்டம், ராசிபுரத்தில் வசிக்கிறேன். எனது தயார் லட்சுமியம்மாள் பெயரில் திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 3.84 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தை சசிகலா பெயரை சொல்லி ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்திற்கு ராம்ராஜ் அக்ரோ மில் நிறுவனத்தின் பேரில் கிரயம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளதை படித்து காட்டினார். சாமிநாதன் என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பையனூரில் தனக்கு சொந்தமான 3.30 ஏக்கர் நிலத்தை னீ1 லட்சத்து 65 ஆயிரம் கொடுத்து வி.என்.சுதாகரன் பெயரில் பத்திரம் பதிவு செய்து கொண்டதை படித்து காட்டினார்.

மீறப்பட்ட விதிமுறைகள்

மீறப்பட்ட விதிமுறைகள்

சிட்கோ நிறுவன மேலாளர் கோவிந்தராஜன் கொடுத்துள்ள சாட்சியத்தில், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கு 1.12 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யும்படி விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. அதை பரிசீலனை செய்த அப்போதைய சிட்கோ தலைவர் சுலோச்சனா சம்பத் நிலம் ஒதுக்கீடு செய்யும்படி பரிந்துரை செய்தார்.

அதையேற்று அப்போது சிட்கோ நிர்வாக இயக்குனராக இருந்த பாண்டே ரூ.8 லட்சத்து 59 ஆயிரத்து 590 பெற்று கொண்டு நிலம் வழங்கினார். மேலும் சிட்கோவுக்கு சொந்தமான 3 கிரவுண்டு நிலத்தை சூப்பர்டூப்பர் டி.வி. நிறுவனத்திற்கு வழங்கும்படி விண்ணப்பம் கொடுக்கப்பட்டது.

ஜெக்கு எதிரான சாட்சியங்கள்

ஜெக்கு எதிரான சாட்சியங்கள்

விதிமுறைபடி நிலம் கேட்டு யார் விண்ணப்பித்தாலும், 3 நபர் கமிட்டி ஆய்வு செய்து, நிலம் வழங்க பரிந்துரை செய்தால் மட்டுமே வழங்க வேண்டும். ஆனால் விதிமுறை மீறி விண்ணப்பம் கொடுத்த ஒரே நாளில் டி.வி. நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்ததாக சிட்கோ நிறுவன மேலாளர் சந்திரன் கொடுத்துள்ள சாட்சியத்தை ஆதாரத்துடன் படித்து காட்டினார். மேலும் சென்னை அடுத்த திருமழிசையில் 1.25 ஏக்கர் நிலம் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளதாக கண்ணாமணி என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தை பாவனிசிங் படித்து காட்டினார்.

ஜெ. சிபாரில் இளவரசிக்கு வீடு

ஜெ. சிபாரில் இளவரசிக்கு வீடு

தமிழக அரசின் தலைமை செயலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகரபுற வளர்ச்சிதுறை செயலாளராக இருந்த கீதாலட்சுமி கொடுத்துள்ள சாட்சியத்தில் வழக்கில் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இளவரசிக்கு, அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் சிபாரிசின் பேரில் சென்னையில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பின்புறத்தில் உள்ள தமிழக வீட்டு வசதி கழகத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து கொடுத்ததாக கூறியுள்ளதை ஆதாரத்துடன் பவானி சிங் படித்து காட்டினார்.

பணம் கொடுக்காமல் ஏமாற்றினர்

பணம் கொடுக்காமல் ஏமாற்றினர்

மோகன் என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தில், நான் கார்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து கொடுத்து வருகிறேன். சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு டெம்போ டிராவல் வாகனத்திற்கு இரண்டு இருக்கைகள் நவீன முறையில் அமைத்து கொடுத்தேன். அதற்காக ரூ.1.20 லட்சம் பணம் கொடுத்தனர்.

எனது வேலையில் திருப்தியடைந்த சசி நிறுவனம் 3 சுவராஜ்மஸ்தா வாகனங்கள் தயார் செய்து கொடுக்கும்படி கேட்டனர். அதற்கு 12 லட்சம் செலவாகும் என்று கூறினேன். அப்போது தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் 10 லட்சம் கொடுப்பதாக கூறினார். அதை நம்பி வாகனம் தயார் செய்து கொடுத்தேன். ஆனால், ரூ.8.50 லட்சம் மட்டுமே கொடுத்துவிட்டு மீதி தொகையை கொடுக்காமல் ஏமாற்றியதாக சாட்சியம் அளித்துள்ளதை படித்து காட்டினார்.

ரூ. 88 லட்சம் ஆடைகள்

ரூ. 88 லட்சம் ஆடைகள்

சென்னை எழும்பூரில் உள்ள கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாளர் செங்கல்வராயன் கொடுத்துள்ள சாட்சியத்தில், வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா வீட்டில் தமிழக லஞ்சஒழிப்பு போலீ சார் பறிமுதல் செய்த பட்டு சேலைகளை மதிப்பீடு செய்யும்படி என்னிடம் கூறினர். அதையேற்று எனது கீழ் பணியாற்றிய ஊழியர்களுடன் இணைந்து ஆய்வு செய்தேன்.
அதில், போலீசார் பறிமுதல் செய்திருந்த 914 பட்டு சேலைகளின் மதிப்பு ரூ.61 லட்சத்து 13 ஆயிரத்து 700 என்றும், மேலும் பறிமுதல் செய்திருந்த 6 ஆயிரத்து 195 பிற உடுப்புகளின் மதிப்பு ரூ.27 லட்சத்து 08 ஆயிரத்து 720 என்று மதிப்பீடு செய்தோம். சேலை உள்பட ஆடைகளின் மொத்த மதிப்பு ரூ.88 லட்சத்து 22 ஆயிரத்து 420 என்பதை புள்ளி விவரத்துடன் சாட்சியம் அளித்துள்ளதை பவானிசிங் தெளிவாக எடுத்துரைத்தார். அதை தொடர்ந்து விசாரணையை இன்று நீதிபதி ஒத்திவைத்தார்.

மெடோ நிறுவன மனு தள்ளுபடி

மெடோ நிறுவன மனு தள்ளுபடி

‘சொத்து குவிப்பு வழக்கில் இருந்து மெடோ அக்ரோபாம் நிறுவனத்தை விடுக்க வேண்டும். இது தொடர்பாக விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும். அதுவரை பிரதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் தடை விதிக்க வேண்டும்' என்று வழக்கறிஞர் ஆர்.தியாகராஜன் கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தார்.இம்மனு மீதான தீர்ப்பை நேற்று வழங்கிய நீதிபதி, ‘‘மெடோ அக்ரோபாம் கொடுத்துள்ள மனுவை விசாரணைக்கு ஏற்றுகொள்கிறேன். அதே சமயத்தில் முக்கிய வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து மெடோ அக்ரோபாம் நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குனர் சண்முகத்திடம் அவரது வழக்கறிஞர் தியாகராஜன் குறுக்கு விசாரணை நடத்தினார். சண்முகம் தமிழ்மொழியில் கொடுத்த வாக்குமூலத்தை வழக்கறிஞர் ஹரிஷ் ஆங்கிலத்தில் நீதிபதியிடம் மொழி பெயர்த்தார். சண்முகம் கொடுத்து வாக்குமூலத்தில், ‘‘பலரை பங்குதாரர்களாக கொண்டு மெடோ அக்ரோபாம் நிறுவனம் தொடங்கினோம். அதற்காக சீத்தராம் நாயுடு, சத்தியமூர்த்தி, பூங்காவனம் நாயக்கர், பாலகிருஷ்ணன், ரங்கநாதன், சேதுராமன் உள்பட பலரிடம் நிலம் வாங்கினோம். அதில் எண்ணை வித்துக்கள் உற்பத்தி செய்யும் மரங்கள் நட்டு வளர்த்து வருகிறோம்'' என்றார்.

மேலும், ‘‘இந்நிறுவனம் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு சொந்தமானதல்ல. அதில் பலர் பங்குதாரர்களாக உள்ளனர். எங்கள் நிறுவனத்தின் பல இயக்குனர்கள் ஒன்றிணைந்து என்னை சாட்சியம் அளிக்கும்படி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்'' என்றும் கூறினார்.

98 சாட்சிகளை மறுவிசாரணை

98 சாட்சிகளை மறுவிசாரணை

வழக்கறிஞர் ஆர்.தியாகராஜன், நீதிபதியிடம் கொடுத்த புதிய மனுவில், மெடோ அக்ரோபாம் நிறுவனத்தை வழக்கில் இருந்து விடுவிப்பது தொடர்பாக சென்னையில் நடந்த விசாரணையின்போது 98 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றம் செய்துள்ளதால், ஏற்கனவே சாட்சி கொடுத்துள்ள 98 பேரிடமும் மறு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதை பெற்று கொண்ட நீதிபதி சாட்சிகளின் விவரங்களை தாக்கல் செய்யும்படி கூறினார். அப்போது லெக்ஸ் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குலசேகரன், தனது கம்பெனி சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று கூறியதை நீதிபதி ஏற்கவில்லை.

English summary
Special PP Bhavanisingh in Bangalore court said that Chief Minister Jayalalitha amassed lands in Siruthavur illegally during her rule.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X