For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ம.பியில், கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் வழக்கை மூட முயலும் போலீஸ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் எரித்துக் கொல்லப்பட்ட பத்திரிகையாளரை, பிளாக்மெயில் செய்து சம்பாதித்தவர் என்று கூறி வழக்கின் முக்கியத்துவத்தை சாகடிக்க காவல்துறை முயலுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் பாலகாட் மாவட்டம் கடாங்கி என்ற ஊரை சேர்ந்த சந்தீப் கோத்தாரி என்ற 40 வயது பத்திரிகையாளர் கடந்த வாரம் எரித்து கொலை செய்யப்பட்டார். அரசியல்வாதிகள்-மாஃபியாக்கள்-காவல்துறை ஆகியோரின் கூட்டுக்கு மற்றொரு சரியான உதாரணமாக இந்த சம்பவத்தை பற்றி விவரிக்கின்றனர், அங்கு கள ஆய்வு நடத்திய பத்திரிகையாளர்கள்.

Journalist murder, a hidden story

சம்பவம் இதுதான்: கடந்த 19ம் தேதி, தனது நண்பர் லலித் குமாருடன் இரவு 99 மணியளவில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் கோத்தாரி. கடாங்கி ஊரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அவர்கள் சென்ற பைக்கை கார் ஒன்று இடித்து தள்ளியது. கீழே விழுந்த இருவரையும் ஒரு கும்பல் துரத்தியது. லலித் குமார் தப்பியோடிவிட்ட நிலையில், கோத்தாரியை அக்கும்பல் காரில் போட்டு சென்றது. பக்கத்து ஊர் வரை ஓடிய லலித்குமார், மற்றொரு நண்பர் உதவியுடன் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மறுநாள், கோத்தாரி உடல், மகாராஷ்டிரா மாநிலம் வர்தா மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக கடாங்கி நகரை சேர்ந்த பிரிஜேந்திர கேக்வார், விஷால் தண்டி, ஷாகித் கான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தனைக்கும், தனக்கு கொலை மிரட்டல் இருப்பது குறித்து கோத்தாரி காவல் துறையிடம் புகார் அளித்திருந்தார். போலீசாரின் மெத்தனம் குறித்து மாவட்ட கலெக்டரை பார்த்து முறையிட சென்ற பிற பத்திரிகை நிருபர்களிடம் கலெக்டர் சொன்னது, கோத்தாரி ஒரு கிரிமினலாமே, பத்திரிகையாளர் இல்லையாமே என்பதுதான். ஏன் இப்படி கலெக்டர் சொன்னார் தெரியுமா.. ஏனெனில் காவல்துறை, அப்படித்தான் கோத்தாரியை சித்தரித்துள்ளது.

கோத்தாரி தேசபந்து பத்திரிகைக்காக செய்திகள் அனுப்பியதுடன், ஆர்டிஐ சட்டத்தை சிறப்பாக பயன்படுத்தி பல மோசடிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். பத்திரிகையில் எழுதுவதுடன் மட்டுமின்றி, சமீபகாலமாக, அவரே அல்லது நண்பர்களை வைத்தோ, போலீஸ், கோர்ட் என மனுக்களையும் தாக்கல் செய்து, சட்டவிரோதமான நடவடிக்கையாளர்களுக்கு குடைச்சல் கொடுத்துள்ளார்.

இதனால் கடுப்பான அதிகாரிகள், கோத்தாரி மீது சகட்டுமேனிக்கு வழக்குகளை எழுதியுள்ளனர். மானபங்கம், பலாத்காரம், பிளாக்மெயில் என ஏகப்பட்ட வழக்குகளை கோத்தாரி மீது போட்டுதான், அவரை கிரிமினலாக ஜோடித்துள்ளனர் காவல்துறையினர்.

கோத்தாரியின் சகோதரர் நவீன் இதுபற்றி கூறுகையில், எனது சகோதரர் மீது போடப்பட்ட பாலியல் பலாத்கார வழக்குகள் எதற்குமே ஆதாரமில்லை. சில வழக்குகளில் மனுதாரர்களே, நாங்கள் கட்டாயத்தின் பேரில்தான் வழக்கு தொடர்ந்தோம் என்று கூறி வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர். எஸ்.சி., எஸ்.டி பிரிவு பெண்களை வைத்தே கோத்தாரி மீது பெரும்பாலான வழக்குகள் புனையப்பட்டன. ஏனெனில் அப்போதுதான் தண்டனை அதிகமாக கிடைக்கும் என்பது மாஃபியாக்கள் எண்ணமாக இருந்தது என்றார்.

இந்த கொலை வழக்கில் ம.பி. விவசாயத்துறை அமைச்சருக்கு நெருக்கமானவருக்கு தொடர்புள்ளதாகவும், எனவேதான் வழக்கு மூடி மறைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோத்தாரியின் தாயார் காஞ்சன் கூறுகையில், "பத்திரிகை தொழிலைவிட்டுவிட்டு, சகோதரர்களுடன் சேர்ந்து வியாபாரம் பார் என்று கோத்தாரியிடம் கூறிவந்தேன். நான் சம்பாதிக்க பத்திரிகை தொழிலுக்கு வரவில்லை. அரசுக்கு செல்ல வேண்டிய வருவாய் வேறு யாருக்கோ போவதை நான் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன் என்று கோத்தாரி கூறிவிடுவான். எனது பேச்சை கேட்கவேயில்லை" என்றார்.

English summary
Was Sandeep Kothari a journalist, a blackmailer as the police and the accused claim, or an RTI activist?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X