For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவிற்கு புதுசு புதுசா ரயில்.. ஏமாற்றப்படும் குமரி மாவட்டம்.. மக்கள் குமுறல்!

கேரளாவிற்கு தொடர்ந்து புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டாலும் அதே கோட்டத்தில் இருக்கும் கன்னியாகுமரிக்கு புதிய ரயில்கள் விடப்படாமல் உள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவிற்கு தொடர்ந்து புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டாலும் அதே கோட்டத்தில் இருக்கும் கன்னியாகுமரிக்கு புதிய ரயில்கள் விடப்படாமல் உள்ளது.

கடந்த இருபது வருடங்களாக நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் கூட்டணி ஆட்சியில் ஒவ்வொரு ரயில் பட்ஜெட்டில் கேரளம் ஜொலித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை பெற்று வந்தது. தற்போது உள்ள பாரதியஜனதா ஆட்சியிலும் இது தொடர்ந்து கொண்டே வருகிறது.

Kerala getting fresh train routes every year amidst no stage for Kanyakumari

ஆனால் தமிழ்நாடு ரயில்வே வளர்ச்சியில் கேரளத்தை விட இருபது வருடம் பின்தங்கி காணப்படுகிறது. இதற்கும் கேரளாவிலிருந்து ஒருவர் கூட பாரதிய ஜனதா கட்சியின் தேர்ந்து எடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகவோ, மத்திய அமைச்சராகவோ இல்லை. அங்கு உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பாகுபாடின்றி ஆளும் கட்சியாகவோ எதிர்கட்சியாகவோ இருந்தாலும் ரயில்வே துறையில் செய்ய வேண்டியதை செய்து அங்கு தேவையானதை பெற்றுவிடுகின்றனர்.

கேரள மாநிலம் 3.34 கோடி மக்கள் தொகையும் 38,863 சதுர கி.மீ மொத்த பரப்பளவும் 1050 கி.மீ ரயில் இருப்புபாதை ரயில் வழி தடமும் இரண்டு ரயில்வே கோட்டங்கள் கொண்ட கேரளாவுக்கு ஓவ்வொரு ரயில் பட்ஜெட்டிலும் கணிசமான அளவுக்கு ரயில்கள் மற்றும் ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை கடந்த இருபது ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கேரளாவுக்கு மிக குறைந்த ரயில்களே அறிவிக்கப்பட்டன என்று அங்கு உள்ள எம்.பிக்கள் போராடி கேரளாவுக்கு என தனி ரயில்கள் அறிவிப்பை பட்ஜெட் தாக்கல் செய்த அடுத்தநாள் தனியாக பெற்றனர். இதைப்போல் பல்வேறு சம்பவங்களை கூற முடியும். இது அவர்கள் அவர்கள் மாநில ரயில்வேதுறை வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது புலனாகும்.

கேரளாவுக்கு புதிய திட்டகள், புதிய ரயில்கள், ரயில்வே அமைச்சரின் சுற்றுபயணங்கள் என கேரளம் ரயில்வேத்துறையில் கோலோச்சி வருகிறது. கேரளாவைவிட மக்கள்தொகையிலும் பரப்பளவிலும் மூன்று மடங்கு பெரிய மாநிலமான தமிழகத்தில் கேரளாவில் உள்ள ரயில்களின் அறிவிப்பை ஒப்பிடும் போது தமிழகம் எந்த அளவு ரயில்வே துறையால் பின்தங்கி உள்ளது என்ற புரியும். தமிழகம் தற்போது ரயில்வே துறையில் கேரளாவைவிட இருபது வருடம் பின்தங்கியுள்ளது என்பது வருத்தத்திற்குரிய செய்தி ஆகும்.

பட்ஜெட் அறிவிப்பு இல்லாமல் இயக்கப்பட்ட ரயில்கள்:

பட்ஜெட்டில் புதிய ரயில்கள் கேரளாவுக்கு என தனியாக அறிவிக்கப்ட்டது போதாது என்று பட்ஜெட் அறிவிக்கப்படாமல் கேரளாவில் பல்வேறு புதிய ரயில்கள் பல்வேறு காலகட்டங்களில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்பட்ட ரயில்களில் நிலாம்பூர் - எர்ணாகுளம் தினசரி ரயில், புனலூர் - குருவாயூர் தினசரி ரயில் ஆகிய ரயில்கள் ஆகும். இதில் நிலாம்பூர் - எர்ணாகுளம் ரயில் 2013-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதைப்போல் புனலூர் - குருவாயூர் ரயில் 2013-ம் ஆண்டு செக்டம்பர் 14-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நான்கு ஆண்டுகளில் குமரி மக்கள் பயன்படும் வகையில் புதிய ரயில்கள் அறிவிக்கப்படவில்லை. இத்தனைக்கும் குமரி மாவட்ட எம்பியாக பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன்தான் இருக்கிறார். ஆனாலும் கூட குமரி தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. ஒரு ரயில் நீட்டிப்பும், ஒரு வாராந்திர ரயிலும் மட்டுமே குமரி மாவட்டம் வழியாக இயக்கப்படுகிறது. கேரளாவில் கூட பாரதிய ஜனதா ஆட்சியில் புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

2014-15
1. கன்னியாகுமரி - புனலூர் பயணிகள் ரயில் (இந்த ரயில் 13-05-2014-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.)
2. காசரகோடு - மூகாம்பிகா ரோடு பயணிகள் ரயில்
3. திருவனந்தபுரம் - நிசாமுதீன் வாராந்திர ரயில் வழி கோட்டையம்
4. திருவனந்தபுரம் - நிசாமுதீன் வாராந்திர ரயில் வழி ஆலப்புழா
2016-17
1. கொச்சுவெலி - இந்தூர் வாராந்திர ரயில்
2. ஹத்தியா - எர்ணாகுளம் வாராந்திர ரயில்
3. ஹவுரா - எர்ணாகுளம் அந்தோதையா வாராந்திர ரயில்
2017-18
1. புனலூர் -பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ்
2. மங்களுர்- கொச்சுவேலி அந்தோதையா வாரத்துக்கு இரண்டு நாள் ரயில்
3. சென்னை - பழநி எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காடு வரை நீட்டிப்பு
4. திருவனந்தபுரம் - பாலக்காடு ரயில் மதுரை வரை நீட்டிப்பு
5. திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி ரயில் கொல்லம் வரை நீட்டிப்பு
6. கண்னூர் - ஆலப்புழா ரயில் தினசரி
7. திருச்செந்தூர் - பழநி ரயில் பாலக்காடு வரை நீட்டிப்பு

2018-19
1. பாலருவி எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வரை நீட்டிப்பு
2. கொல்லம் - எடமண் பயணிகள் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு

இவ்வளவு ரயில்கள் இயக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருட ரயில்கால அட்டவணை ஆகஸ்டு 13-ம் தேதி வெளியிடப்பட்டு 15-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ரயில்கால அட்டவணையில் கேரளாவில் இயக்கப்படும் இரண்டு ரயில்களை இணைத்து ஒரே ரயில் எண் கொண்ட ரயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோட்டையம் - எர்ணாகுளம் 56386/56389 மற்றும் எர்ணாகுளம் - நிலாம்பூர் பயணிகள் ரயில் 56363/56362 ஆகிய இரண்டு ரயில்களையும் இணைத்து 173 கி.மீ தூரத்துக்கு ஒரே ரயிலாக கோட்டையம் - நிலாம்பூர் பயணிகள் ரயில் என விடப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியை சார்ந்த பயணிகளுக்கு நெடுந்தூரத்தில் நேரடியாக குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய ஒரு பயணிகள் ரயில் வசதி கிடைத்துள்ளது. இந்த ரயில் எர்ணாகுளம் - ஷொர்னூர் மற்றும் ஷொர்ணூர் - நிலாம்பூர் ரயில் ஆகிய இரண்டு ரயில்களையும் இணைத்து எர்ணாகுளத்திலிருந்து ஷொர்ணூர்க்கு நேரடி பயணிகள் ரயிலாக 2013-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

குருவாயூர் - புனலூர் பயணிகள் ரயில்:-

இதைப்போல் 2013-ம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில் குருவாயூர் - திருச்சூர் பயணிகள் ரயில், கொல்லம் - புனலூர் பயணிகள் ரயில் என இரண்டு ரயில்கள் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்கள் பின்னர் இணைத்து ஒரே ரயிலாக குருவாயூர் - புனலூர் பயணிகள் ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் 294 கி.மீ தூரத்துக்கு ஒரே ரயிலாக இயக்கப்படுவதால் இந்த பகுதி பயணிகள் நேரடியாக குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய முடிகிறது. இந்த ரயிலை செங்கோட்டை வழியாக ராமேஸ்வரம் வரை நீட்டிக்கும் திட்டமும் உள்ளது.

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளில் மொத்தம் மூன்று ரயில்கள் இவ்வாறு இணைத்து ஒரே பயணிகள் ரயிலாக இயக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே கோட்டத்துக்கு உட்ப்பட்ட கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட ரயில் வழித்தடங்களில் ஒரு ரயில் கூட இவ்வாறு இரண்டு பயணிகள் ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக இயக்கப்படவில்லை

நாகர்கோவில் - கோட்டையம் ரயில்:-

நாகர்கோவில் - கோட்டையம் பயணிகள் ரயில் 56304 எண் கொண்ட பயணிகள் ரயில் மொத்தம் 231 கி.மீ தூரம் பயணித்து 42 நிறுத்தங்களில் நின்று மணிக்கு 31கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. இந்த ரயில் கோட்டையம் சென்று விட்டால் மறுமார்க்கம் கோட்டையம் - நாகர்கோவில் மார்க்கத்தில் இயக்கப்படுவது கிடையாது. ஆகையால் இந்த ரயிலை மறுமார்க்கமும் இயக்க வேண்டும். அதற்கு தற்போது இயக்கப்பட்டு வரும் ஒரு சில பயணிகள் ரயில்களை இணைத்து ஒரே எண் கொண்ட ரயிலாக கோட்டையம் - நாகர்கோவில் மார்க்கத்தில் இயக்க வேண்டும்.

திருநெல்வேலி - திருவனந்தபுரம் பயணிகள் ரயில்:-

56718 திருநெல்வேலி - நாகர்கோவில் பயணிகள் ரயில் திருநெல்வேலியிருந்து காலை 6:55 மணிக்கு புறப்பட்டு 8:50 மணிக்கு நாகர்கோவில் வந்தடைகிறது. இவ்வாறு வரும் இந்த ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி விரைவாக நாகர்கோவில் வருமாறு காலஅட்டவணையை மாற்றம் செய்து நாகர்கோவில் - கொச்சுவேலி ரயிலுடன் இணைத்து ஒரே ரயிலாக திருநெல்வேலி - திருவனந்தபுரம் பயணிகள் ரயிலாக இயக்க வேண்டும்.

மறுமார்க்கம்:-

மறுமார்க்கம் கொச்சுவேலியிருந்து 56317 ரயில் மதியம் 1:20க்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு 3:55க்கு வருகிறது. இந்த ரயிலின் காலஅட்டவணையை மாற்றம் செய்து மதியம் 3:30 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு சுமார் 6:15 மனிக்கு நாகர்கோவில் வந்து இங்கிருந்து கன்னியாகுமரி - திருநெல்வேலி ரயிலையும் இணைத்து திருவனந்தபுரம் - திருநெல்வேலி ஒரே ரயிலாக இயக்க வேண்டும்.

கொல்லம் - நாகர்கோவில் பயணிகள் ரயில்:-

கொல்லத்திலருந்து திருவனந்தபுரத்துக்கு மதியம் 3:35 மணிக்கு 56309 ரயில் புறப்பட்டு மாலை 5:45 மணிக்கு திருவனந்தபுரம் வந்துவிட்டு திருவனந்தபுரத்திலிருந்து மாலை 6:00 மணிக்கு 56313 ரயிலாக புறப்பட்டு நாகர்கோவிலுக்கு இரவு 7:55 மணிக்கு வந்தடைகிறது. இந்த இரண்டு ரயிலையும் இணைத்து ஒரே எண் கொண்ட ரயிலாக கொல்லம் - நாகர்கோவில் ரயில் என இயக்க வேண்டும்.

கன்னியாகுமரி - கோவா நேரடி ரயில்:-

நாகர்கோவிலிருந்து மங்களுர்க்கு நடு இரவு 2:00 மணிக்கு புறப்படுமாறும் மறுமார்க்கம் நாகர்கோவிலுக்கு 11:45 மணிக்கு வந்து சேருமாறு ஏரநாடு ரயில் இயக்கப்படுகிறது. இதைப்போல் மங்களுர் - மட்கான் தடத்தில் ஒரு இண்டர்சிட்டி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் குறைந்த வருவாய் கிடைப்பதால் இந்த ரயிலின் சேவையை நிறுத்தலாம் என்று ஆலோசிக்கப்படுகிறது. ஆகையால் நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு, மங்களுர் - மட்கான் ஆகிய இரண்டு ரயில்களையும் இணைத்து கன்னியாகுமரி - கோவா ரயிலாக இயக்க வேண்டும்.

கேரளாவில் இவ்வாறு இரண்டு ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக இயக்கியது போன்று அதே கோட்டத்துக்கு உட்பட்ட தமிழக பகுதிகளான குமரி மற்றும் நெல்லை மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் புதிய ரயில்கள் இயக்குவது எல்லாம் ரயில்வே வாரியம் முடிவு செய்து பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்றும், புதிய ரயில்கள் இயக்க தேவையாக ரயில் பெட்டிகள் இல்லை, தற்போமைய உள்ள ஒருவழிபாதை மிகவும் நெருக்கடி நிறைந்ததாக உள்ளது, முனைய வசதிகள் போதுமானதாக இல்லை என பல்வேறு சாக்குபோக்கு பதில்களை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றார்கள்.

ஆனால் அதே ரயில்வே அதிகாரிகள் கேரளாவுக்கு புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் உடனடியாக அறிவித்து ரயில்களை இயக்குகின்றார்கள். திருவனந்தபுர கோட்டத்துக்கு உட்பட்ட குமரிக்கு ரயில்கள் இயக்க அவர்களுக்கு மனது இல்லை. ஒரே கோட்டத்துக்குள் இரண்டு விதமான போக்கை திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் பின்பற்றி வருகிறார்கள். ஆகவே திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் விதமாக அங்கு இயக்கப்படுவதை போன்று இங்கும் இரண்டு ரயில்களையும் இணைத்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் ரயில்வேதுறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Kerala getting fresh train routes every year amidst no stage for Kanyakumari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X