
மம்தா பானர்ஜியை யாரும் தாக்கவில்லை.. கார் கதவு பட்டதால் காயம்.. தேர்தல் பார்வையாளர்கள் அறிக்கை
கொல்கத்தா: நந்திகிராமில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் காலில் ஏற்பட்ட காயம் தற்செயலானது என்று தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட விரிவான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சிறப்பு பார்வையாளர்களான விவேக் துபே மற்றும் அஜய் நாயக் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் இந்த அறிக்கையை அளித்துள்ளது.
இந்த அறிக்கையில், சிறப்பு பார்வையாளர்கள், மமதா பானர்ஜிக்கு தாக்குதலின் விளைவாக காயம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளதாக தெரிகிறது.

மம்தா பானர்ஜியின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறும் அதே வேளையில், சம்பவம் நடந்த நேரத்தில் அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இருப்பதாக சிறப்பு பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாயின் முந்தைய அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த தேர்தல் ஆணையம் சிறப்பு பார்வையாளர்களிடமிருந்து விரிவான அறிக்கையை கோரியது. இப்போது அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 10 ம் தேதி நந்திகிராமில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது மம்தா பானர்ஜியின் காலில் கார் கதவு மோதியதாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், அந்த அறிக்கையில் மமதா காலில் கார் கதவு எவ்வாறு மோதியது என்று குறிப்பிடப்படவில்லை. தலைமைச் செயலாளரின் அறிக்கை தெளிவற்றது மற்றும் முக்கியமான விவரங்கள் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால் பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி போராட்டங்கள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.