“மிஸ்ஸான” ஆம் ஆத்மி வேட்பாளர்.. கடத்தியதா பாஜக? புகாரளித்த மறுநொடி ரிலீசான “பரபர” வீடியோ
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளரை பாஜக கடத்திவிட்டதாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டிய சில மணி நேரத்தில் அவரது வீடியோ வெளியாகி உள்ளது.
பாஜக ஆட்சியில் இருந்து வரும் குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகள் கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே மட்டும் போட்டி இருந்த நிலையில் இம்முறை ஆம் ஆத்மி கட்சியும் வலுவான போட்டியாளராக களமிறங்கியுள்ளது.

டஃப் கொடுக்கும் ஆம் ஆத்மி
குஜராத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. மூன்று கட்சிகளின் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் பாஜகவே வலுவாக இருக்கிறது. இதில் புதிதாக தேர்தலை எதிர்கொள்ள ஆம் ஆத்மி 2 வது இடம்பிடிக்கும் என சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

முக்கியத்துவம்
அதேபோல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் எனவும் வேறு சில நிறுவனங்கள் எடுத்த கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆனால், பஞ்சாபில் யாருமே எதிர்பாராத வகையில் பாஜக, காங்கிரஸை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியதால் குஜராத் தேர்தலில் அக்கட்சி தொடர்ந்து விவாதப் பொருளாக உள்ளன.

பாஜகவின் பி டீமா?
தொடக்கத்தில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் மதசார்பற்ற வாக்குகளை பிரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் ஆதரவாளர்களோ ஆம் ஆத்மியை பாஜகவின் பி டீம் என விமர்சித்து வருகின்றனர். ஆனால், பாஜகவின் இந்துத்துவ ஆதரவு வாக்குகளை பிரிக்கும் வகையில் ஆம் ஆத்மியின் நகர்வுகள் உள்ளன.

வேட்பாளர்கள்
குறிப்பாக குஜராத்தில் வேட்பாளர் தேர்விலும் ஆம் ஆத்மி கட்சி கூடுதல் கவனம் செலுத்தியதை அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலின் மூலம் அறிய முடிகிறது. இதுவரை குஜராத் மாநிலத்தில் 15 கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டு இருக்கிறது. ஒவ்வொரு தொகுதிகளிலும் பெரும்பான்மையாக வசிக்கும் சமுதாயத்தை சேர்ந்தவர்களில் செல்வாக்கு மிக்கவர்களை தேர்வு செய்து வாய்ப்பு வழங்கி இருக்கிறது அக்கட்சி.

வரவேற்பு
மற்ற கட்சிகள் முதலமைச்சர் வேட்பாளரை வெளிப்படையாக அறிவிக்காத நிலையில் ஆம் ஆத்மி கட்சி மட்டும் தேசிய இணை பொதுச்செயலாளர் இசுதீன் காத்வியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறது. தொடர்ந்து ஆம் ஆத்மியின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரத் வேட்பாளர் கடத்தல்
இந்த நிலையில் ஆம் ஆத்மி வேட்பாளர்களில் செல்வாக்கு மிக்கவராக கருதப்பட்ட கஞ்சன் ஜாரிவாலாவை பாஜக கடத்திவிட்டதாக ஆம் ஆத்மி தலைவர்கள் இன்று காலை குற்றம் சாட்டினார்கள். "சூரத் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் எங்கள் வேட்பாளர் கஞ்சன் ஜாரிவாலா மற்றும் அவரது குடும்பத்தினரை நேற்றில் இருந்து காணவில்லை." என ட்விட்டரில் அக்கட்சித் தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா புகார்
"முதலில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வைக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால், அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. பின்னர் வேட்புமனுவை திரும்பபெறுமாறு பாஜக மிரட்டல் விடுத்தது. தற்போது அவர் கடத்தப்பட்டாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதேநேரம் அக்கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியாவோ பாஜக குண்டர்கள் அவரை கடத்தி சென்றதாக குற்றம்சாட்டி உள்ளார்.

கிடைத்த கஞ்சன்
இந்த நிலையில் கடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் கஞ்சன் ஜாரிவாலா சூரத்தில் தேர்தல் அதிகாரியை சந்தித்து தனது வேட்புமனுவை வாபஸ் பெற்ற வீடியோ வெளியாகி உள்ளது. இந்த நிலையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் கஞ்சனி வேட்புமனுவை வாபஸ் பெற வற்புறுத்தியதாக மனிஷ் சிசோடியா குற்றம்சாட்டி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications