மேகாலயாவில் காங்கிரஸுக்கு செக் வைக்கும் பாஜக- 4 கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் மும்முரம்
மேகாலயாவில் மாநில கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் பாஜக மும்முரமாக உள்ளது.
ஷில்லாங்: மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் பாஜகவோ தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது.
மேகலாயாவில் ஆளும் காங்கிரஸ் 21 இடங்களில் வென்றுள்ளது. பிஏ சங்மா குடும்பத்தின் தேசிய மக்கள் கட்சி 19 இடங்கள்; ஐக்கிய ஜனநாயக கட்சி 6; மக்கள் ஜனநாயக முன்னணி 4; ஹெச்எஸ்பிடிபி 2; கேஹெச்சென்ஏஎம் கட்சி 1 இடத்திலும் வென்றுள்ளது. பாஜக 2 இடங்களில் வென்றுள்ளது.
சங்மா குடும்பத்தின் தேசிய மக்கள் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இருந்தபோதும் தேர்தலில் தனித்து போட்டியிட்டது.

பாஜக கூட்டணி
அதேபோல பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிறது ஐக்கிய ஜனநாயக கட்சி. இதன் கூட்டணி கட்சியான ஹெச்எஸ்பிடிபி 2 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் முயற்சி
மேகாலயாவில் ஆட்சி அமைக்க 31 எம்.எல்.ஏ.க்கள் தேவை. தனிப்பெரும்பான்மை கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்க பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

காங். அல்லாத அரசு
ஆனால் பாஜகவோ அத்தனை கட்சிகளையும் இணைத்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா, காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகள் ஆட்சி அமைய வேண்டும்.

ஷில்லாங்கில் காங். தலைவர்கள்
மேகாலயாவில் பாஜக பெரிய பங்களிப்பை செய்யாது. எனினும் என்பிபி, யுடிபி, பிடிஎப், ஹெச்எஸ்பிடிபி ஆகியவை விரும்பினால் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு உதவி செய்வோம் என்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூத்த தலைவர்கள் அகமது படேல், கமல்நாத் உள்ளிட்டோரை ஏற்கனவே மேகாலயாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications