For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அல்லாஹு அக்பர்' முழக்கமிட்ட கர்நாடக மாணவிக்கு பாகிஸ்தானில் ஆதரவு - பெங்களூரு வழக்கு என்ன ஆனது?

By BBC News தமிழ்
|
ஹிஜாப் பெண்கள்
BBC
ஹிஜாப் பெண்கள்

கர்நாடகாவில் நேற்று ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவி ஒருவர் காவி நிறத்தில் கும்பலை எதிர்கொண்டபோது திடீரென கேமிரா முன்பு தோன்றி அல்லாஹு அக்பர் என்ற முழக்கமிட்ட செயல் மூலம் வன்முறை தூண்ட முற்பட்டாரா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ்.

"காவி துண்டு போட்டிருந்த மாணவர்கள், அந்த பள்ளி மாணவியை கேரோ செய்ய விரும்பவில்லை. ஆனால் அவர் திடீரென அல்லா-ஹு-அக்பர் என்று ஏன் குரல் எழுப்பினார். அந்த மாணவியைச் சுற்றி அப்போது ஒரு மாணவி கூட இல்லை. கல்லூரி வளாகத்தில் அப்படியொரு முழக்கத்தை ஏற்பட்ட அவருக்கு என்ன அவசியம்? கல்வி வளாகத்தில் "அல்லா-ஹு-அக்பர்' அல்லது 'ஜெய் ஸ்ரீராம்' போன்ற முழக்கங்களை ஊக்குவிக்க முடியாது," என்று அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்தார்."இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை யாரும் தங்களின் கைகளில் எடுக்க முடியாது. எந்தவொரு தவறான நபரையும் அரசாங்கம் விட்டுவிடாது" என்று அமைச்சர் நாகேஷ் எச்சரித்தார்.

கல்வி நிறுவனங்களில் ஹிஜாபை பயன்படுத்துவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில் நேற்று மாண்டியா முன் பல்கலைக்கழக கல்லூரியில் இந்த மாணவி குரல் எழுப்புவதும், பிறகு அவருக்கு எதிராக மற்றொரு தரப்பு எதிர் குரல் எழுப்பிய காட்சிகளும் வைரலாகின.

அந்த காணொளியில் அல்லா ஹு அக்பர் குரல் எழுப்பிய மாணவியின் பெயர் முஸ்கான் என அடையாளம் தெரிய வந்துள்ளது. பள்ளி வளாகத்தில் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வகுப்புகளுக்குச் செல்லும் வேளையில் சில ஆண்கள் குழு "ஜெய் ஸ்ரீ ராம்" என்று குரல் எழுப்புவதையும், அவர்கள் காவி நிற சால்வை அணிவதையும் காணொளியில் பார்க்க முடிகிறது. அவர்களைப் பார்த்துக் கொண்டே நடக்கும் மாணவி திடீரென பின்னோக்கி வந்து, "அல்லா-ஹு-அக்பர்!" என்று குரல் எழுப்பி தனது கையை உயர்த்திக் காட்டினார். அப்போது அந்த ஆண்கள் அவரை நோக்கி நகர, மீண்டும் அவர் "அல்லா-ஹு-அக்பர்" என்று குரல் எழுப்பியபடியே நடந்தார்.

இது பற்றி தகவலறிந்த சில நிமிடங்களில், கல்லூரி அலுவலர்கள் மாணவியை நோக்கி வந்து அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

பாகிஸ்தானில் மாணவிக்கு ஆதரவு

அல்லா ஹு அக்பர் என்று குரல் எழுப்பிய மாணவிக்கு பாகிஸ்தானில் பல முக்கிய பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பி.டி.ஐ, மாணவி ஆல்லா ஹு அக்பர் என முழங்கும் மாணவியின் காணொளியை தமது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இணைத்து, "துணிச்சலுக்கு உதாரணம்! அல்லாஹு அக்பர். மோதியின் ஆட்சியில் இந்தியாவில் அழிவு மட்டுமே உள்ளது. ஜின்னா சொல்வது சரிதான்," என்று கூறியுள்ளது.

https://twitter.com/PTIofficial/status/1491123720282599424

இதே விவகாரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியும் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "முஸ்லிம் பெண்களின் கல்வியை பறிப்பது அடிப்படை உரிமை மீறல். இந்த அடிப்படை உரிமையை பறித்து ஹிஜாப் அணிந்தால் அச்சுறுத்துவதும் கூட முற்றிலும் அடக்குமுறையாகும். ஒரு சமூகத்தை இறுக்கமான சூழலில் வாழ நிர்பந்திக்கும் இந்தியாவின் திட்டம் இது," என்று கூறியுள்ளார்.

https://twitter.com/SMQureshiPTI/status/1491283745529565184

அதே நேரத்தில், இம்ரான் கான் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த செளத்ரி ஃபவாத் ஹுசைன், "மோதியின் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை நினைத்துப் பார்ப்பது பயங்கரமானது. ஒரு நிலையற்ற தலைமையின் கீழ் இந்திய சமூகம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. ஹிஜாப் அணிவது மற்ற ஆடைகளைப் போலவே தனிப்பட்ட விருப்பமாகும்," என்று கூறியுள்ளார்.

https://twitter.com/fawadchaudhry/status/1491103738370863108

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அரசியல் ஆலோசகரும், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் செய்தித் தொடர்பாளருமான ஹுசைன் ஹக்கானியும் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றிய ஹக்கானி, "9/11 சம்பவத்திற்குப் பிறகு அமெரிக்காவில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் துன்புறுத்தப்பட்டபோது, ​​அதிபராக இருந்த புஷ், இது அமெரிக்காவின் உணர்வு அல்ல என்று கூறியிருக்கிறார். ஒருவேளை நரேந்திர மோதியும் வெளிப்படையாக இப்படிச் சொல்ல வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இந்தியா முழுவதும் நடைபெறுவதை நிறுத்த வேண்டும். இது எங்கு நடந்தாலும் அது சரியல்ல," என்று ஹுசைன் ஹக்கானி குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/husainhaqqani/status/1491098481209266176

இந்தியாவில் வசிக்கும் பிரபல வங்க தேச எழுத்தாளர் தஸ்லிமா நஸரீன், கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்த சிறுமியின் வைரலான வீடியோவை பயங்கரமான தீவிரவாத அமைப்பான இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவுடன் ஒப்பிட்டுள்ளார். "அல்லாஹு அக்பரின் குரல் ஐஎஸ்ஐஎஸ் தலை துண்டிக்கும் காணொளியை எனக்கு நினைவூட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரு நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

இந்த நிலையில், ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கும் அரசாணையின் காரணமாக, கல்லூரிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று கூறி, கர்நாடகாவைச் சேர்ந்த சில முஸ்லிம் மாணவிகள் தாக்கல் செய்த மனுக்களை பெரிய அமர்வு விசாரிக்க பரிந்துரைத்திருக்கிறது அந்த மாநில உயர் நீதிமன்றம்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித், "இந்த விஷயத்தை பெரிய அமர்வு விசாரணைக்கு பரிசீலிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மற்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகளும் இதில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும், " என்று தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து, மனுதாரர்களில் ஒருவருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, இந்த விவகாரம் பெரிய அமர்வுக்கு மாற்றப்படும் வேளையில், சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் உத்தரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது அவர், "மாணவிகளுக்கு இன்னும் இரண்டு மாதங்களே (கல்வி ஆண்டு) எஞ்சியுள்ளன. பெரிய அமர்வு விசாரிக்கும்வரை அவர்களை விலக்கி வைக்க வேண்டாம். எந்த ஒரு பெண் குழந்தையும் கல்வியை இழக்காத வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இன்று மிகவும் முக்கியமானது அமைதி திரும்புவதும் அரசியலமைப்பு உரிமை கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான்," என்று கூறினார்.கல்லூரி வளர்ச்சிக் குழுவிற்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சாஜன் பூவய்யா, ரிட் மனுக்களில் எழுப்பப்பட்ட கேள்விகள் நீதியரசர் தீட்சித்தின் வரம்புக்குள் வரக்கூடியவையே என்று வாதிட்டார்.

இந்த விவகாரத்தில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இடைக்கால உத்தரவுக்கு அரசு எதிர்ப்பு

இதே வேளை, அரசின் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவத்கி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஆட்சேபம் தெரிவித்தார். "மனுதாரர்கள் தரப்பு அதன் வாதத்தை முன்வைத்து விட்டது. அரசு தரப்பு அதன் நிலையை தெரிவிக்கிறது. இதன் பிறகே முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. இந்த மனுக்கள் தவறான புரிதலுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசின் ஆணையை மனுதாரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கல்வி நிறுவனங்களில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தன்னாட்சி உரிமை உள்ளது. அவற்றின் முடிவுகளில் அரசு தலையிடாது," என்று அரசின் தலைமை வழக்கறிஞர் கூறினார். இருந்தபோதும், அரசியலமைப்பு உரிமை, மத உரிமை தொடர்பான இந்த விவகாரத்தை தாம் விசாரிப்பதை விடபெரிய அமர்வு விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று கூறினார் நீதிபதி கிருஷ்ணா எஸ். தீட்சித்.

முன்னதாக, நேற்றைய விசாரணையின் போது, ​​மனுதாரர் ஒருவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத ஒழுக்கத்தின் அடையாளம் என்று வாதிட்டார்.அரசயலமைப்பின் 19(1)(a) பிரிவு ஹிஜாப் அணியும் மாணவிகளின் உரிமையை பாதுகாக்கிறது மற்றும் பிரிவு 19(6) அடிப்படையில் மட்டுமே அதை கட்டுப்படுத்த முடியும் என்று காமத் கூறினார். உச்ச நீதிமன்றம் விசாரித்த புட்டாசாமி தீர்ப்பின் 21வது பிரிவின் ஒரு பகுதியாக ஹிஜாப் அணிவது என்பது அங்கீகரிக்கப்பட்ட தனியுரிமைக்கான அம்சமாகும் என்றும் அவர் மேற்கோள்காட்டினார்.

ஹிஜாப் வன்முறை
BBC
ஹிஜாப் வன்முறை

அரசாங்க உத்தரவு கர்நாடகா கல்வி விதிகளின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும் அப்படியொரு அரசாணையை வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் வாதிட்டார். தேர்வுகள் நெருங்கி வருவதையும், மனுதாரர்கள் ஹிஜாப் அணியும் உரிமையை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்ததை கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் காமத் கேட்டுக் கொண்டார்.அதைத்தொடர்ந்து அரசு உத்தரவுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடாமல் மாணவர் சமூகம் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அமைதியைப் பேணுமாறு நீதிபதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தொடரும் வன்முறை

ஷிவமோகா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோதும், தேசிய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் புதன்கிழமை காலையில் அங்குள்ள பல்கலைக்கழக முன் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்தனர்.

அவர்கள் புதன்கிழமை காலையில் 'பகவத்வஜ்' அல்லது காவி கொடியை இறக்கி மூவர்ணக் கொடியை ஏற்றினர்.

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கூட்டத்தைக் கலைத்தனர். இரண்டு கொடிகளையும் போலீஸார் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.கடந்த செவ்வாய்க்கிழமை ஷிவோகா கல்லூரியில் காலியாக உள்ள கொடி கம்பத்தில் மட்டுமே மாணவர்கள் குழு காவி கொடியை ஏற்றியதாக போலீஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

அவர்கள் தேசிய மூவர்ணக் கொடியை அகற்றி விட்டு காவி நிற கொடியை ஏற்றியதாக கூறப்படும் தகவலை அதிகாரிகள் மறுத்தனர்.

இதற்கிடையில், வன்முறையைக் கண்டித்து சில இந்து அமைப்புகள் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பனஹட்டி நகரில் கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்திருந்தனற்.

அங்கு கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 15 பேரை காவல் துறை கைது செய்தனர்.

ஹிஜாப் போராட்டம்
Getty Images
ஹிஜாப் போராட்டம்

இந்த நிலையில், மாநிலத்தில் நிலவும் அமைதியின்மை குறித்து மாநில அமைச்சரவையை கூட்டி முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, மாநிலத்தில் ஹிஜாப் சர்ச்சையை ஊக்குவிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் எச்சரித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு சில மாணவர்கள் மட்டுமே ஹிஜாப் அணிய உரிமை கோருகிறார்கள், அவர்கள் தங்கள் சொந்த சமூகத் தலைவர்களைக் கூட கேட்காமல் இப்படி செய்கிறார்கள். ஹிஜாப் தொடர்பான எதிர்ப்புகள் இருந்தும், பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகை குறையவில்லை என்று தெரிவித்தார்.இதேவேளை, ஹிசாப் உரிமை வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவது குறித்து அரசின் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவடாவுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் கல்வி நிலையங்களின் நிலைமை குறித்து முதல்வரிடம் கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ். மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மற்றும் காவல்துறை (ஐஜி) தலைவர் பிரவீன் சூத், பெங்களூரு காவல்துறை ஆணையர் கமல் பந்த் ஆகியோர் விளக்கினர்.

கர்நாடக உள்துறையின் தகவலின்படி, மாநிலத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள 7 கல்லூரிகளில் மோதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. கர்நாடகாவில் 19 மாவட்டங்களில் உள்ள 55 கல்லூரிகளில் ஹிஜாப் தொடர்பான போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. வன்முறை தொடர்பாக ஹரிஹரா போலீசார் நான்கு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

ஆசிரியர் மஞ்சுநாத் நாயக் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து அமைப்புகள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. அவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Pakistan supports Mandya girl who channted Allah Hu Akbar in her college.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X