"மிஷன் பீகார்.." நேரடியாக அரசியல் களத்தில் குதிக்கும் பிரசாந்த் கிஷோர்.. கட்சி தொடங்குகிறார்
பாட்னா: பீகாரில் ஜான் சுராஜ் என்ற அமைப்பைப் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நடத்தி வருகிறார். பீகாரில் அடுத்தாண்டு தேர்தல் நடக்கும் நிலையில், அவர் தனது ஜான் சுராஜ் அமைப்பை அரசியல் கட்சியாக மாற்ற இருப்பதாக அறிவித்துள்ளார். அடுத்தாண்டு நடக்கும் பீகார் தேர்தலில் பி.கே. கட்சி முக்கியமானதாக உருவெடுக்க வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.
நாட்டில் முக்கிய தேர்தல் ஆலோசகராக இருப்பவர் பிரசாந்த் கிஷோர். கடந்த 2014இல் மோடி முதல்முறையாகத் தேர்தலில் வென்ற போது பிரசாந்த் கிஷோர் தான் அவருக்குத் தேர்தல் ஆலோசகராக பணிபுரிந்து இருந்தார்.

அதன் பிறகு தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார். ஓரிரு தேர்தல்களைத் தவிர மற்றவற்றில் அவர் இணைந்து பணியாற்றிய கட்சியே வெற்றி பெற்றுள்ளது.
பீகார் அரசியல்: கடந்த 2021ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் அவர் தேர்தல் ஆலோசகராக பணிபுரிந்திருந்தார். அதன் பிறகு நேரடியாக யாருக்கும் அவர் தேர்தல் ஆலோசகராக பணியாற்றவில்லை. இடையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாகப் பல கட்டமாகப் பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடந்தது. இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே சில விஷயங்களில் உடன்பாடு ஏற்படாததால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை.
இதையடுத்து அவர் பீகாரில் ஜான் சுராஜ் என்ற ஒரு அமைப்பைத் தொடங்கினார் மேலும், அவர் அங்குத் தொடர்ச்சியாக பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறார். அதேநேரம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தேசிய அரசியல் குறித்து கருத்துச் சொல்லவும் அவர் தவறுவதில்லை. சமீபத்தில் அவர் லோக்சபா தேர்தலில் பாஜக 300+ இடங்களில் வெல்லும் எனக் கூறியதும் ரிசல்ட் வந்த பிறகு பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
ஜான் சுராஜ்: இதற்கிடையே அவர் தனது ஜான் சுராஜ் அமைப்பை அரசியல் கட்சியாக மாற்ற உள்ளார். பிரசாந்த் கிஷோரின் சொந்த மாநிலம் பீகார். அங்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் நிலையில், அதை மனதில் வைத்தே பிரசாந்த் கிஷோர் தனது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவார் எனத் தெரிகிறது.
என்ன சொன்னார்: இது தொடர்பாகச் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "பீகார் மக்களில் சுமார் 50% மேலானவர்கள் மாற்றத்தை எதிர் நோக்கி உள்ளனர். அவர்களுக்கு ஆர்ஜேடி, ஜேடியு, பாஜக என எந்த கட்சியும் தேவையில்லை. அவர்கள் புதிய கட்சியை விரும்புகிறார்கள். ஏனென்றால் கடந்த 30 ஆண்டுகளாக இந்த 3 கட்சிகளால் மக்களுக்கு எந்த மாற்றம் அல்லது முன்னேற்றமும் இல்லை. பீகார் மக்கள் துயரத்தில் தான் இருக்கிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு ஒரு கட்சியை எப்படி ஒருங்கிணைக்க வேண்டும்.. எப்படித் தேர்தல் காலங்களில் வழிநடத்தி வெற்றி பெற வைக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினோம். 10 வருடமாக மற்ற கட்சிகள் மற்றும் தலைவர்களுக்குச் செய்ததை நாங்கள் இப்போது பீகார் மக்களுக்காகச் செய்யப் போகிறோம்.
நான் தந்த அட்வைஸ்களை கேட்டு நடந்த பல தலைவர்கள் வென்றனர். தலைவர்களின் வாரிசுகளும் கூட வென்றனர். நான் நிச்சயம் சொல்கிறேன்.. எனது ஆலோசனையால் இப்போது பீகார் மக்களும் நிச்சயம் வெல்வார்கள். பீகார் வாழ்க்கை மேம்படும் என நான் நம்புகிறேன்" என்று அவர் கூறியிருந்தார்.
பீகார் தேர்தல்: பீகாரில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அதை மனதில் வைத்தே அவர் அரசியல் கட்சியைத் தொடங்க இருக்கிறார். அவர் எப்போது தனது ஜான் சுராஜ் அமைப்பைக் கட்சியாக மாற்றப்போகிறார் என்பதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று அவர் அரசியல் கட்சியைத் தொடங்குவார் என்றே கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆர்ஜேடி 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், அவர்களால் பெரும்பான்மைக்குத் தேவையான 122 சீட்களில் வெல்ல முடியவில்லை. இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியாக வந்த பாஜக (75 சீட்), ஜேடியு (43) இணைந்து ஆட்சியை அமைத்தன. மேலும் சில சிறு கட்சிகள் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications