விக்ரம்-வேதா பாணியில் தொடரும் ராகுல் காந்தி கேள்விகள்.. மோடிக்கு கிடுக்கிப்பிடி
குஜராத் அரசு கல்விக்கு செலவிடும் தொகையில் 26வது இடத்தில் இருக்கிறது. அப்படியானால் மறைமுகமாக பாஜக கல்வி வணிகமயமாவதை அரசு விரும்புகறதா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: குஜராத்தில் ஏன் கல்வி வணிகமயமாகிறது என்றும், இப்படி இருந்தால் இளைஞர்கள் எப்படி முன்னேற முடியும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவை தோல்வியடையச் செய்வதற்கான உத்தியாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தினம் ஒரு கேள்வியை பிரதமர் நரேந்தி மோடிக்கு கேட்டு வருகிறார். அந்த வகையில் இன்று ராகுல் காந்தி தனது 4வது கேள்வியை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் கல்விக்கு மாநில அரசு செலவிடும் தொகையில் குஜராத் ஏன் 26வது இடத்தில் இருக்கிறது? இளைஞர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி கேள்வி அம்புகளை வீசயுள்ளார்.

கல்வி வணிகமயமாகிறது
அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கவனம் செலுத்தாமல் பாஜக தலைமையில் செயல்படும் குஜராத் அரசு கல்வி வணிகமாவதைத் தான் விரும்புகிறதா. அரசின் இந்த செயலால் அதிகரித்து வரும் கல்விக் கட்டணங்கள் குஜராத் மாணவர்களை கவலையடைச் செய்துள்ளது.

புதிய இந்தியா எப்படி பிறக்கும்?
இளைஞர்களை நம்பி தான் நாளைய இந்தியா இருக்கிறது. ஆனால் கல்வியை எட்டாக்கனியாக்கும் இந்த கட்டண உயர்வு எப்படி இளைஞர்களின் கனவை நிறைவேற்றும், பிறகெப்படி புதிய இந்தியா பிறக்கும் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுலுக்கான முதல் பரிட்சை
குஜராத்தில் 22 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவிற்கு டிசம்பர் 9 மற்றும் 14ல் நடைபெற உள்ள தேர்தலில் தோல்வியை சந்திக்கச் செய்ய முனைப்புடன் இருக்கிறார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க இருக்கும் அவருக்கு வைக்கப்படும் முதல் பரிட்சையாகக் கூட இது பார்க்கப்படுகிறது.

தினம் ஒரு கேள்வி
அது மட்டுமின்றி குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுமார் 12 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார். எனவே குஜராத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் உதவும் என்று ராகுல் கருதுகிறார். இதனால் குஜராத்தில் அரசு செய்யத்தவறிய விஷயங்களை நாள்தோறும் ஒரு கேள்வியாக ராகுல் காந்தி பாஜகவிற்கு கேட்டு வருகிறார். இதற்காக குஜராத் கோரும் விடைகள்( #Gujarat_Maange_Jawab) என்ற ஹேஷ்டேகையும் அவர் பயன்படுத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications