1984ல் சீக்கியர் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது..: முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங் செயலர் தகவல்
டெல்லி: 1984ஆம் ஆண்டு சீக்கியர்கள் படுகொலையை காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு நடத்தியது என்று முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங்கின் செயலர் தர்லோசன் சிங் தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், 1984ஆம் ஆண்டு சீக்கியர் படுகொலையை தடுக்க ராஜிவ் அரசு முயற்சித்தது என்று கூறியிருந்தது.
இதை அப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங்கின் செயலராக இருந்த தர்லோசன் சிங் மறுத்துள்ளார். 1984ஆம் ஆண்டு இந்திரா படுகொலை செய்யப்பட்ட நாளில் என்ன நடந்தது என்பதையும் விவரித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்திரா காந்தி காலையில் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது மாலையில்தான் தொடங்கியது.
கொல்கத்தாவில் இருந்து ராஜிவ் டெல்லி வருவதற்கு முன்பாக காங்கிரஸ் தலைவர்களான ஹெச்.கே.எல். பகத், அருண் நேரு, ஜெகதீஷ் டைட்லர் ஆகியோர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வன்முறையைத் தூண்டுவது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஜெயில்சிங்குக்கு தகவல் கிடைத்தது.
அந்த திட்டமிடலின்படிதான் ஐஎன்ஏ மார்க்கெட் அருகே முதலில் வன்முறை வெடித்தது. இந்திரா படுகொலைக்காக தன்னிச்சையாக வன்முறை வெடித்தது எனில் அது காலையில் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் மாலையில் ராஜிவ் காந்தி பிரதமராக பதவி ஏற்ற உடனேயே இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டது.
அப்போது பிரதமர் ராஜிவிடம் பேசுவதற்கு ஜனாதிபதி ஜெயில்சிங் எவ்வளவோ முயன்றார். ஆனால் முடியவில்லை. உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவோ, இந்திரா இறுதி சடங்கில் பிஸியாக இருக்கிறோம் என்று கூறிவிட்டார். அத்துடன் துணை நிலை ஆளுநரும் டெல்லி போலீசாரும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மறுநாளும் கூட பிரதமராக இருந்த ராஜிவும் சரி உள்துறை அமைச்சர் நரசிம்மராவும் சரி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர எந்த ஒரு முயற்சியுமே மேற்கொள்ளவில்லை.. பாதிக்கப்பட்டோருக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications