For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தர பிரதேச தேர்தல்: மாயாவதி போட்டியிடாத தேர்தல் களத்தில் பகுஜன் சமாஜ் கட்சி - என்ன பின்னணி?

By BBC News தமிழ்
|
சதீஷ் சந்திர மிஸ்ரா
Hindustan Times
சதீஷ் சந்திர மிஸ்ரா

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், மாநிலத்தில் அடுத்த ஆட்சி தங்களுடையது என்று நம்பிக்கையுடன் கூறுகிறது பகுஜன் சமாஜ் கட்சி.

உத்தர பிரதேசத்தில் 2007ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி அமைத்தது. அந்தத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் 206 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் பிஎஸ்பியின் வெற்றிக்குப் பின்னணியில் சமூக அளவில் நடந்த மாற்றம் முக்கியமானதாக கருதப்பட்டது. காரணம், தலித் சமகத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியில் பிராமண வாக்காளர்களை தமது பக்கம் ஈர்ப்பதில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றது.

உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சியில் இல்லாத நிலையில், எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில் மீண்டும் பிராமண வாக்குகளை தங்கள் பக்கம் ஈர்ப்பதை இலக்காகக் கொண்டிருக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி.

கடந்த 10 ஆண்டுகளில் சமாஜ்வாதி கட்சியிலும், பாரதிய ஜனதா கட்சியிலும் பிராமணர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு எதிரான தவறான நடத்தை காரணமாகவும் இந்த முறை அந்த சமூகத்தின் வாக்குகளை தங்களால் ஈர்க்க முடியும் என்று பகுஜன் சமாஜ் கட்சி நம்புகிறது.

லக்னெளவில் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவரும் தேசிய பொதுச் செயலாளருமான சதீஷ் சந்திர மிஸ்ராவுடன் இது குறித்து பிபிசி பேசியது.

மாநிலத்தில் கொழுந்து விட்டு எரியும் வகையில் பல பிரச்சனைகள் இருந்தும், உங்களுடைய கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை வெறும் சமூக மாற்றத்தால் மட்டுமே நடக்கும் என எப்படி நம்புகிறீர்கள் என அவரிடம் கேட்டோம்.

அதற்கு சதீஷ் சந்திர மிஸ்ரா, "சமூக பொறியியல் என்பது மிகவும் அடிப்படையான விஷயம், அது அவசியமும் கூட. எங்கள் கட்சியின் முழக்கம் சர்வஜன் ஹிதாய் சர்வஜன் சுகாய். எனவே சர்வஜனை வளர்த்தெடுக்க, ஒருவர் சமூகமாக இருக்க வேண்டும்," என்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிராமணர்களை ஈர்க்கும் வகையில் மாநிலத்தில் அறிவொளி மாநாடுகளை நடத்துவதைக் காண முடிந்தது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பிராமணர்களின் ஆதரவைப் பெற முடியும் என்று உங்கள் கட்சி நினைக்கிறதா?

பிராமண சமுதாயம் எல்லாவற்றையும் திறந்த கண்களால் பார்க்கிறது. கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு பேசுவதை நம்புங்கள் என அவர்களிடம் சொல்ல முடியாது. அந்த சமூகத்தினர் எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள். முன்பு பகுஜன் சமாஜ் அரசாங்கத்தில் அவர்களின் நிலை எப்படி இருந்தது, அவர்கள் எவ்வாறு வழிநடத்தப்பட்டார்கள் என அவர்கள் சிந்திக்கிறார்கள். பகுஜன் சமாஜ் ஆட்சிக்குப் பிறகு சமாஜ்வாதி ஆட்சியிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலும் தங்களுடைய நிலை எப்படி உள்ளது என்பதை அவர்கள் பார்த்து வருகிறார்கள். அவர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி அவர்களை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துள்ளது.

தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லிம் சமூகம் ஏற்கெனவே தங்கள் பக்கம் இருப்பதாக மிஸ்ரா கூறுகிறார்.

அது குறித்து விளக்கிய அவர், "மற்ற கட்சிகள் பிராமண சமுதாயத்தை தவறாக வழிநடத்த முயற்சி செய்தன. அதன் காரணமாக பிராமண சமூகம் ஆதரவற்ற நிலையை எட்டியிருக்கிறது. அவர்களின் மரியாதையை அதிகரிக்கவும், சமூகத்தின் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவரவும் நாங்கள் முயற்சி செய்து வெற்றி பெற்றோம். நாங்கள் ஒரு நல்ல உத்தியை கடைப்பிடித்தோம். அதனாலேயே 14 வருடங்களுக்கு முன்பு எங்களால் ஆட்சிக்கு வர முடிந்தது. ஒரு சமூகத்தை வளப்படுத்த வேண்டுமானால், ஆட்சி அதிகாரம் தேவை," என்கிறார் மிஸ்ரா.

"சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக பிராமணர்கள், முன்பு வந்தது போல் எங்களுடன் ஒன்றிணைந்தால், நாங்கள் மீண்டும் அதே வகையான அரசாங்கத்தை உருவாக்குவோம், மீண்டும் எல்லா சமூகமும் முக்கியத்துவத்தைப் பெறும்," என்று அவர் கூறினார்.

தேர்தல் களத்தில் மாயாவதி இல்லாததற்கு என்ன காரணம்?

கடந்த சில வாரங்களாக நடந்து வரும் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும் முழு பலத்தை வாரி இறைத்துள்ளன. பிரதமர் நரேந்திர மோதி உத்தர பிரதேசத்தில் பல பேரணிகளை நடத்தினார். அகிலேஷ் யாதவ் மாநிலம் முழுவதும் விஜய் ரத யாத்திரை என்ற பெயரில் பிரசாரம் செய்தார். இத்தனைக்கும் மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ளாதது ஏன்?

தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு முதலில் கட்சிக்காரர்கள் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கூட்டங்கள் நடத்துவதும், மாயாவதி ஒவ்வொரு மாவட்டமாகச் செல்வதும்தான் தனது கட்சியின் செயல்பாட்டு பாணி என்கிறார் சதீஷ் சந்திர மிஸ்ரா.

இதை விவரித்த அவர், "இது ஒன்றும் புதிதல்ல, எல்லா பழைய தேர்தலையும் பாருங்கள், தேர்தல் அறிவிப்புக்கு முன், மாயாவதி பெரிய கூட்டம் நடத்துவார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு, மாவட்டந்தோறும் பிரசாரம் செய்வார். இம்முறையும் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தார். அக்டோபர் 9இல் அது பொதுக்கூட்டமாக நடந்தது. அதில் சுமார் ஐந்து லட்சம் பேர் கலந்து கொண்டனர்,' என்றார்.

கொரோனா பரவல் காரணமாக, தேர்தல் ஆணையம் ஜனவரி 15 வரை தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த தடை நீக்கப்பட்டால், மாயாவதி பிரசார களத்தில் இறங்கினால், அது உத்தர பிரதேச தேர்தல் களத்தில் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாயாவதி
Hindustan Times
மாயாவதி

இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி என்ன பிரச்னைகளை முன்வைக்கிறது?

"கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் அராஜகம், கொலை, கொள்ளை, ஊழல், கலவரங்கள் மற்றும் பாலியல் வல்லுறவு அல்லது அத்துமீறல் செயல்களை அதிகமாகவே மக்கள் பார்த்திருக்கிறார்கள். யோகி அரசில் நிறுத்திச் சுடு என்ற கொள்கையின் கீழ், 500க்கும் மேற்பட்ட பிராமணர்கள் கொல்லப்பட்டனர், 100 பிராமணர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தலித்துகள் பல கொடுமைகளை அனுபவித்துள்ளனர். விவசாயிகள் வாழ்வாதாரமின்றி புலம்புகிறார்கள். தங்களுடைய நிலத்தை கையகப்படுத்த முயற்சி நடப்பதற்கு எதிராக கிளர்ச்சி எழுந்தபோது, ஒரு விவசாயி வாகனம் ஏற்றப்பட்டு உடல் நசுங்கி இறந்தார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தது பாஜக. இப்போது தேர்தல் வரும்போதுதான் கரும்பு விலை ரூ.25 உயர்த்தப்பட்டது. இந்த சமூகத்தினர் அனைவருக்கும் மாயாவதி ஆட்சியில் பாதுகாப்பு இருந்தது. பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். இரவு 12 மணிக்கு கூட அவர்கள் வீட்டை விட்டு அச்சமின்றி வெளியே சென்று திரும்பும் நிலை இருந்தது. இதை எல்லாம் கூறி வாக்கு சேகரிப்போம்" என்கிறார் சதீஷ் சந்திர மிஸ்ரா.

மாயாவதி
Getty Images
மாயாவதி

யோகி மற்றும் அகிலேஷ் ஆட்சி மீதான உங்களின் பார்வை என்ன?

"2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். எட்டாவா மாவட்டத்தின் சைபாயில் சமாஜ்வாதி தலைவர்கள் 2014இல் எப்படி எல்லாம் பொது இடத்தில் ஆடல், பாடலில் ஈடுபட்டார்கள், முசாஃபர்நகரில் எப்படி எல்லாம் ஊழல் நடந்தது? எத்தனை கலவரங்கள் நடந்தன? என்பதை மக்கள் மறக்கவில்லை. யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதையும் மக்கள் பார்த்து வருகிறார்கள். நிறுத்திச் சுடும் விஷயங்கள் இங்கே நடக்கின்றன. ஒரு முதல்வராக இருப்பவர் இப்படி பேசுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை."

"யோகி அரசில் எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யப்படவில்லை. எந்த வேலை செய்தாலும் அதை செய்தித்தாள்கள், டி.வி.களில் விளம்பரம் செய்து விடுவார்கள். இந்த இரு கட்சிகளும் மக்களை குழப்பும் வகையில் அவற்றின் ஆட்சியில் குறைந்தது 500 கோடி ரூபாய் செலவு செய்து விளம்பரம் செய்தன. பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் இருந்தபோது அப்படி எல்லாம் பொய் விளம்பரம் செய்யவில்லை. அந்த கட்சிகளின் விளம்பரங்களால் நாங்கள் கவலைப்படவில்லை. இன்றும் அடிமட்ட அளவில் நாங்கள் உறுதியாக இணைக்கப்பட்டுள்ளோம்," என்கிறார் சதீஷ் சந்திர மிஸ்ரா.

பிஎஸ்பியின் சொந்த பிரச்சனைகள்

2017ஆம் ஆண்டில் நடந்த உத்தர பிரதேச தேர்தலுக்கு பிறகு, பகுஜன் சமாஜ் கட்சிக்குள்ளும் சொந்த பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்தன. கட்சியின் பல எம்எல்ஏக்கள் அக்கட்சியை விட்டு வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர். 2017இல் அந்த கட்சி 19 இடங்களில் மட்டுமே வென்றது. இப்போது அதற்கு உத்தர பிரதேச சட்டமன்றத்தில் மூன்று எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

இது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை பாதிக்காதா என கேட்டதற்கு, "நீங்கள் குறிப்பிடுபவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரம் தொடங்கும் முன்பே கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்," என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "வெளியே போனவர்கள் கட்சியில் இருந்து கொண்டு ஏமாற்றும் வேலையைச் செய்தார்கள். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள். வெளியேற்றப்பட்ட பிறகு எங்கே போனார்கள் என தெரியவில்லை. பிஎஸ்பியின் வரலாறு இதுதான். பூஜ்ஜியத்தில் இருந்து ஒரு தலைவரை உருவாக்கி, தலைவரான பின், அவர்கள் கட்சிக்கு துரோகம் செய்தால், தனித்து விடப்படுவார்கள். எந்த கட்சிக்காரனும், ஆதரவாளனும், வாக்காளனும் அத்தகைய நபர்களுடன் அணி சேருவதில்லை. அதனால் தான், அடுத்த தேர்தல் வந்தால் வீழ்ந்து விடுகின்றனர்," என்கிறார் சதீஷ் சந்திர மிஸ்ரா.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர குற்றச்சாட்டுகள்

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடந்தால் பாஜக தோற்கடிக்கப்படும் என்று மாயாவதி சமீபத்தில் கூட கூறினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் பேசினார்.

பாரதிய ஜனதா கட்சியின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னணியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக அவர் கூறியது, தோல்விக்குப் பிறகு கூறப்படும் சாக்கு, போக்காக இல்லையா என சதீஷ் சந்திர மிஸ்ராவிடம் கேட்டோம்.

"தேர்தல் ஆணையம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த அனுமதித்தாலோ அல்லது அரசு தன்னிச்சையாக செயல்பட அனுமதித்தாலோ பிரச்னை வரும். எங்களின் வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது என்று மட்டும் சொன்னோம். எந்த கட்சி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்தாலும் சரி. நியாயமாக எவராலும் வெற்றி பெற முடியாது. ஆட்சியில் இருக்கும் போது, ​​அதை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டுகிறோம். தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பிற்கு முந்தைய நாளில் முதல்வர் மிக முக்கிய திட்டத்தை அறிவிக்கிறார். இது எல்லாம் தவறான நடவடிக்கை இல்லையா?" என்று கேட்கிறார் சதீஷ் சந்திர மிஸ்ரா.

தேர்தலில் மாயாவதி போட்டியிடுவாரா?இந்தக் கேள்விக்கு பதிலளித்த சதீஷ் சந்திர மிஸ்ரா, "மாயாவதி தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது குறித்து கட்சியில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. போட்டியிடுவதா இல்லையா என்பதை அவர்தான் தீர்மானிப்பார்," என்றார்.

குடும்பவாதம் பற்றிய குற்றச்சாட்டு

சதீஷ் சந்திர மிஸ்ராவின் மனைவி கல்பனா மிஸ்ரா, அவரது மகன் கபில் மிஸ்ரா ஆகியோரும் அரசியலில் தீவிர பங்கு வகிக்கின்றனர். இருவரும் பகுஜன் சமாஜ் கட்சியின் அறிவொளி மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்தியாவில் குடும்ப அரசியல் பற்றி பெரிய விவாதம் அடிக்கடி நடப்பதால், அவரது மனைவியும் மகனும் அரசியலுக்கு வருவது குடும்பவாதமா இல்லையா என்று அவரிடம் கேட்டோம்.

இதற்குப் பதிலளித்த மிஸ்ரா, "குடும்பவாதம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. குடும்பம் என்பது எங்கள் மனைவியையும் மகனையும் தேர்தலில் போட்டியிட வைப்பது என்று நினைக்கிறேன். இருவரிடமும் இப்படி நடந்து கொள்ளுங்கள் என நான் சொல்லவில்லை. அவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை, கட்சிப் பதவி எதுவும் வகிக்கவில்லை. கட்சியை பலப்படுத்தவும், வெற்றி பெறவும் மட்டுமே அவர்கள் களத்தில் இருக்கிறார்கள்," என்கிறார்.

தொடர்புடைய பிற காணொளி- உத்தர பிரதேச தேர்தல் பிரசாரத்தில் பரவலாக பேசப்படும் தெரு மாடுகள் பிரச்னை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Bahujan samaj chief Mayawati not to contest in Uttar Pradesh election. All things to know about Uttar Pradesh election 2022
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X