
ரோஜர் - டிராவிட் - வெங்கடேஷ்.. பிசிசிஐயில் உச்சம் தொட்ட கர்நாடக ராஜ்ஜியம்! அப்போது அவர்தான் கேப்டனா?
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அமைப்பில் முக்கியமான பொறுப்புகளை எல்லாம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெற்று வருகின்றனர்.
பிசிசிஐ அமைப்பின் தலைவராக இருந்த சவுரவ் கங்குலி சமீபத்தில் ராஜினாமா செய்தார். இவரின் ராஜினாமாவை தொடர்ந்து பிசிசிஐ அமைப்பிற்கு புதிய தலைவராக ரோஜர் பின்னி நியமனம் செய்யப்பட்டர்.
பலரின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் ரோஜர் பின்னி பிசிசிஐ அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
3 நீக்கம்.. 5 வார்னிங்.. பறந்து வந்த எச்சரிக்கை மணி.. இந்திய அணி செய்ய வேண்டிய முக்கியமான மாற்றங்கள்

நீக்கம்
ஆசிய கோப்பை, டி 20 உலகக் கோப்பை தொடர்களில் அடுத்தடுத்து தோல்வி அடைந்த காரணத்தால் இந்திய அணியின் தேர்வாளர் குழுவான சேட்டன் சர்மா தலைமையிலான குழு அப்படியே நீக்கப்பட்டது. இந்த குழு மீது கடுமையான புகார்கள் வைக்கப்பட்டன. கே எல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தது, வருடம் முழுக்க பல்வேறு சோதனை முயற்சிகளை செய்துவிட்டு, வருட கடைசியில் அதே பழைய ணியை 2022 டி 20 உலகக் கோப்பை அணிக்கு அனுப்பியது, அணியில் மாற்று வீரர்களை சரியாக தேர்வு செய்யாதது என்று கடுமையான புகார்கள் வைக்கப்பட்டன. அதோடு சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் புகார் வைக்கப்பட்டது.

புகார்
இதையடுத்தே தேர்வுக்குழு மொத்தமாக நீக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய தேர்வுக்குழுவிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளன. நயன் மோங்கியா, மணிந்தார் சிங், சிவ சுந்தர் தாஸ், அஜய் ரத்ரா ஆகியோர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஹேமங் பதானி இந்த பொறுப்பிற்கு விண்ணப்பித்ததாக கூறப்பட்டது. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பவுலர் வெங்கடேஷ் பிரசாத்தும் இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளார். இவர்தான் இந்த போட்டியில் முன்னிலையில் இருக்கிறார்.

போட்டி
வெங்கடேஷ் பிரசாத்துக்கு இந்த பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகின்றன. இவரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இதனால் பிசிசிஐ அமைப்பில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களின் ராஜ்ஜியம் அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது . இவர் தேர்வாகும் பட்சத்தில் அது conflict of interest என்று மாறும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கிறார். ராகுல் டிராவிட் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். அதனால் அவர் பயிற்சியாளராக இருப்பதும் கேள்விக்கு உள்ளாகி உள்ளது.

ராகுல்
ஏற்கனவே அணியில் சரியாக ஆடாத கே. எல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதாக புகார் உள்ளது. அவர் ஐபிஎல் போட்டிகளில் சரியாக கேப்டன்சி செய்தது இல்லை. உள்ளூர் போட்டிகளிலும் கேப்டன்சி செய்தது இல்லை. ஆனாலும் அவருக்கு தொடர்ந்து அணியிலும் வாய்ப்பு வழங்கி வருகிறார்கள். இடைக்கால கேப்டனாகவும் அவரை பயன்படுத்துகிறார்கள். இது கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. அவர் கன்னடர் என்பதால் அவருக்கு அதிகம் வாய்ப்பு வழங்கப்படுவதாக புகார் வைக்கப்பட்டு வருகிறது.

தேர்வுக்குழு
இந்த நிலையில்தான் தேர்வுக்குழு தலைவராகவும் வெங்கடேஷ் பிரசாத் நியமிக்கப்பட்டால் அது பெரிய சர்ச்சையாகும் வாய்ப்புகள் உள்ளன. இப்போதே நெட்டிசன்கள் பலர் இதை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். பிசிசிஐ முழுக்க ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் இருப்பது அணி தேர்வில் பாதிப்பை ஏற்படுத்தும். ராகுல் நன்றாக ஆடி அவரை அணியில் எடுத்தால் கூட அது விமர்சனத்திற்கு உள்ளாகும். இதனால் வெங்கடேஷ் பிரசாத் தேர்வுக்குழு தலைவராக கூடாது என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.