For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை நெருக்கடி: பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை; அத்தியாவசிய சேவைக்கு விலக்கு

By BBC News தமிழ்
|
இலங்கை எரிபொருள்
Getty Images
இலங்கை எரிபொருள்

இலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க அரசாங்கம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, போக்குவரத்து, சுகாதாரம், விமான சேவைகள், ரயில், துறைமுகம், முப்படையினர் ஆகிய அடையாளம் காணப்பட்ட சில பிரிவினர் மாத்திரம், அத்தியாவசிய சேவையில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் தரப்பினர் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், எரிபொருள் இறக்குமதி தடைப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்றிரவு கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எட்டியதாக, அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்த்த ஏனைய தரப்பினர், தமது வீடுகளில் இருந்தவாறு தமது பணிகளை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள அசௌரியமான சூழ்நிலையில், எரிபொருள் பயன்பாட்டை முறையாக பயன்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அவ்வாறு இல்லையென்றால், பெட்ரோலிய கூட்டுதாபனம் வசம் காணப்படுகின்ற, குறிப்பிட்டளவு எரிபொருளை அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பிலான தீர்மானத்தை, அந்தந்த பாடசாலைகளின் பிரதானிகள் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளருக்கு எடுக்க முடியும் என கல்வி அமைச்சர் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுகின்றார்.

பாரியளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்தாத, கிராமிய மட்டத்திலுள்ள பாடசாலைகளை நடத்தி செல்ல முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதைதவிர, பிரதான நகரங்களிலுள்ள ஏனைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை, எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் தேதிக்கு பின்னர் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் தேதிக்கு பின்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றை முறையாக விநியோகிக்கும் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

குறுகிய தூர பயணங்களை மேற்கொள்வதற்கான பொது போக்குவரத்து சேவைகளை, அரச பேருந்துகளை பயன்படுத்தி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையை பெரும்பாலும் இடைநிறுத்துவதற்கு ஏற்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதி துறை ஆகியவற்றை, கையிருப்பில் காணப்படுகின்ற எரிபொருளை கொண்டு, முன்னெடுத்து செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டு மக்கள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கை எரிபொருள்
Getty Images
இலங்கை எரிபொருள்

அவசர நோய் நிலைமைகளின் போது என்ன செய்வது?

இலங்கையில் தனிநபர்களுக்கு எரிபொருள் விநியோகம் எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமது வீடுகளிலுள்ளவர்கள் அல்லது அயலவர்களுக்கு ஏதேனும் அவசர நோய் நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், அவர்களின் உயிரை காப்பாற்றும் வகையில் செயற்பட முடியாத நிலைமையை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

அவசர நோய் நிலைமையை எதிர்கொள்ளும் நோயாளி ஒருவரை, விரைவில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதில் தற்போது பாரிய சவால் எதிர்நோக்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமையினால், பிறந்து இரண்டு நாளேயான சிசுவொன்று பதுளை மாவட்டத்தில் உயிரிழந்திருந்தது.

அதேபோன்று, நிகவரெட்டிய பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, கர்ப்பிணித் தாய் ஒருவர், தனது சிசுவை, வீட்டிலேயே ஈன்றெடுத்த சம்பவமொன்றும் பதிவாகியிருந்தது.

கடந்த காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் இவ்வாறான பாதிப்புக்களை எதிர்நோக்கி மக்கள், இன்று முழுமையாகவே எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவசர தேவைகளின் போது என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் சுகாதார அமைச்சிடம், பிபிசி தமிழ் வினவியது.

இலங்கை எரிபொருள்
BBC
இலங்கை எரிபொருள்

நாடு முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள, இந்திய உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அவசர ஆம்புலன்ஸ் சேவையை, அவசர நிலைமைகளின் போது பயன்படுத்த முடியும் என சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகமும், ஊடகப் பேச்சாளருமான ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

இந்த ஆம்புலன்ஸ் சேவையானது, நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையினால், மக்கள் தமக்கான போலீஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியை அடையாளம் கண்டு, அதற்கான முன் ஆயத்த திட்டங்களை செய்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், அவசர நோய் நிலைமைகள் ஏற்படும் போது, உதவிகளை வழங்கும் வகையில், தமது பிரதேசங்களில் அவசர தேவைக்கு மாத்திரம் பயன்படுத்தும் வகையில், வாகனமொன்றை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு, சுகாதார தரப்பினர், பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

அவசர நோய் நிலைமைகளின் போது, 1990 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார துறையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

போலீஸ் நிலையமொன்றில் ஒரு ஆம்புலன்ஸ் மாத்திரமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையினால், அவசர தேவைகளின் போது, போலீஸார் தமது வாகனங்களில் உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றார்களா என, பிபிசி தமிழ், போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவிடம் வினவியது.

இலங்கை எரிபொருள்
Getty Images
இலங்கை எரிபொருள்

''போலீஸ் அதிகாரிகள், மக்கள் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே எரிபொருளை பெற்றுக்கொள்கின்றனர். போலீஸாருக்கும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான தேவை தற்போது காணப்படுகின்றது. எனினும், பொதுமக்களுக்காக செய்ய இயலுமான அனைத்து விதமான சேவைகளையும் அர்ப்பணிப்புடன் செய்ய நாம் தயாராகவுள்ளோம்" என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களை நடத்திச் செல்வதில் சிரமம்

போக்குவரத்து, சுகாதாரம், விமான சேவைகள், ரயில், துறைமுகம், முப்படை ஆகியன எரிபொருள் விநியோகிப்பதற்கான அத்தியாவசிய சேவைகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊடகத்துறையை இதில் சேர்க்கவில்லை.

இதனால், இலங்கையில் ஊடகத்துறையை நடத்திச் செல்வதில் தற்போது பாரிய சிரமங்கள் காணப்படுகின்றன.

ஊடக நிறுவனங்களிலுள்ள மின்பிறப்பாக்கிகளுக்கு தேவையான டீசலை விநியோகிப்பது தொடர்பில் மாத்திரம் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் ஆகியவற்றுடன், ஊடகத்துறை அமைச்சு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு தேவையான பெட்ரோலை விநியோகிக் முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை எரிபொருள்
Getty Images
இலங்கை எரிபொருள்

பொதுப் போக்குவரத்து இயங்கும்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் ரயில்கள் இன்று சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

எனினும், தனியார் பஸ்களின் போக்குவரத்து இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன், மக்கள் அவசர தேவைகளுக்காக பயன்படுத்தும் முச்சக்கரவண்டி போக்குவரத்து தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் வழங்கப்படுகின்றமையினால், மக்கள் இன்று பல்வேறு விதமான துன்பங்ளை அனுபவித்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=T1qjwtY3DZQ

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Sri Lanka turns to India for help and Non-essential petrol sales halted for two weeks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X