For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்நாடு தேர்தல் 2021: அதிர்ச்சி கொடுத்த கொங்கு மண்டல சர்வே முடிவுகள்: வியூகங்களை ஆராயும் அதிமுக

By BBC News தமிழ்
|

2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் ஆட்சியமைப்பதற்கு கொங்கு மண்டலமே பிரதான காரணமாக இருந்தது. ஆனால், தற்போதைய களநிலவரம் கலவர நிலவரமாகவே இருப்பதாக அதிமுகவினரே ஆடிப்போயிருக்கிறார்கள்.

Click here to see the BBC interactive

ஏன்?

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு பரப்புரையிலும் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் மக்களின் குறைகளைத் தீர்ப்போம்' என ஸ்டாலின் தெரிவித்தார். அதற்கேற்ப, தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறார்.

100 முதல் 1100 வரை!

தி.மு.க தலைவரின் இந்த முயற்சிக்குத் திருப்பூர் பிரசாரத்தில் பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கி பெட்டிக்குள் போட்டுவிட்டு 100 நாட்களில் இவர் தீர்ப்பாராம். எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை இது. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ஏன் மக்களின் குறைகளைத் தீர்க்கவில்லை? ஆட்சியில் இருந்தபோது இதனைச் செய்யாமல் தற்போது ஏமாற்றி வருகிறார்' என கொதித்தார்.

தி.மு.கவின் இந்த முயற்சியை ஆளும் அ.தி.மு.க தரப்பு எதிர்த்தாலும், தமிழக அரசின் உதவியை மக்கள் பெறுவதற்காக '1100' என்ற சேவை மையத்தை சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளனர். மக்களிடம் இருந்து எந்த உதவி கேட்டு வந்தாலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதனை உடனே நிவர்த்தி செய்வார்கள்' எனவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதற்கு விருத்தாசலத்தில் பதில் அளித்த ஸ்டாலின், விவசாயக் கடன் ரத்து உள்பட நான் கூறுவதைத்தான் முதல்வர் செயல்படுத்தி வருகிறார்' என்றார்.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆகியவற்றுக்கு இடையேயான மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், 2016 சட்டமன்றத் தேர்தலைப் போல இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு கொங்கு மண்டலம் கை கொடுக்குமா?' என்பதை சர்வே மூலமாக தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் பழனிசாமி. இந்த சர்வே முடிவுகள் சொல்லும் பல தகவல்கள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

என்ன நடக்கிறது கொங்கு மண்டலத்தில்?

கொங்கு மண்டல அமைச்சர்கள் பலரும், தங்களுக்கென தனித்தனியாக ஆட்களை வைத்து தொகுதியை ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களில் பலரும், இந்தத் தேர்தல் எளிதாக இருக்கப் போவதில்லை. ஆட்சியை இழந்தாலும் அதிகப்படியான தொகுதிகளைக் கைப்பற்றினால் கட்சித் தலைமையையும் தக்கவைத்துக் கொள்ள முடியும்' எனப் பேசி வருகின்றனர்" என பிபிசி தமிழிடம் விவரித்தார் கொங்கு மண்டல அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் மேலும் சில தகவல்களை தெரிவித்தார்.

எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரில் தங்கமணிக்கு மட்டும் குமாரபாளையம் தொகுதிக்குள் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. தொண்டாமுத்தூர் தொகுதியில் தி.மு.க சார்பாக கார்த்திகேய சிவசேனாபதி நிறுத்தப்படலாம் என்ற தகவல் வலம் வருகிறது. இந்தமுறை தோல்வியடைந்துவிட்டால் அவ்வளவுதான்' என்ற அச்சமும் அமைச்சர்கள் மத்தியில் உள்ளது. இதையடுத்து, ஒவ்வோர் அமைச்சரும் மூன்று விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

மூன்று வியூகங்கள்!

அதில், ஒன்று இல்லம்தோறும் அம்மா அரசு' என்ற திட்டம். இதனை இரண்டு வகையாகச் செயல்படுத்துகின்றனர். ஒன்று, நேரடியாக வீட்டுக்கே சென்று மனுக்களைப் பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி உடனடியாக தீர்ப்பது, இரண்டாவது, வாகனம் மூலம் ஒவ்வோர் ஊர்களுக்கும் இச்சேவையைக் கொண்டு செல்வது. அங்கு இந்த வாகனம் இருக்கும் இடத்துக்கு பொதுமக்கள் வந்து உடனடியாகத் தீர்வு பெறலாம். இந்தத் திட்டத்துக்காக மனுக்களை பெறும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.

அடுத்ததாக, தொகுதிக்குள் இலவச வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவது. இதன் மூலம் தொகுதிக்குள் பத்தாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது முக்கிய நோக்கமாக இருக்கும். இதற்காக கரூரில் 27 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டமிட்டார். இதையறிந்த செந்தில் பாலாஜி, 21 ஆம் தேதியே வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக அறிவித்துவிட்டார். அங்கு எப்போது மோதல் வலுக்கும் எனத் தெரியவில்லை" என்கிறார்.

மூன்றாவதாக, ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் நேரடிக் கவனம் செலுத்தாமல் வாட்ஸ்அப் மூலமாக தொகுதி வாக்காளர்களின் செல்போன் எண்களை மையமாக வைத்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தொகுதிக்குள் தங்களின் தனிப்பட்ட சாதனைகளை ரிப்போர்ட் கார்டாக அச்சடித்து விநியோகிக்கவும் முடிவு செய்துள்ளனர். பின்னர், வீட்டுக்கு வீடு நேரடியாகச் சென்று பிரசாரம் செய்ய உள்ளனர். இதன் ஒரு பகுதியாக கொங்கு மண்டலத்தில் சர்வே ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.

சர்வே கொடுத்த அதிர்ச்சி!

அமைச்சர்கள் எடுத்த சர்வேயில் 26 கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், பா.ஜ.க கூட்டணி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?', அரசின் எந்தத் திட்டங்கள் அதிகப்படியான மக்களைச் சென்றடைந்தது?', விவசாயக் கடன் ரத்து குறித்து உங்கள் பதில் என்ன?', முதல்வரின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?', இந்த ஆட்சி சிறப்பாகச் செயல்படுவதாக உணர்கிறீர்களா?', சசிகலா வருகையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்றெல்லாம் கேட்கப்பட்டன" என பிபிசி தமிழிடம் விவரித்தார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

தொடர்ந்து அவர் பேசுகையில், சசிகலா தொடர்பான கேள்விக்கு 10 பேரில் 2 பேர் மட்டுமே அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றபடி, கொங்கு மண்டலத்தில் சசிகலா வருகை பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதிலும், கட்சியை அவரிடம் கொடுத்துவிடாதீர்கள்' என்றுதான் பலரும் தெரிவித்துள்ளனர். முதல்வரின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, பரவலாக பாசிட்டிவ்வான பதில்களே வந்துள்ளன. அதேநேரம், விவசாயக் கடனால் அ.தி.மு.கவினர் மட்டுமே பலன் பெற்றுள்ளதாகவும் தலித் சமூக மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் பயிர்க்கடன் வாங்கிய பலரும் அ.தி.மு.கவினர்தான் எனவும் இதனால் இடைநிலை சமூகங்கள் மட்டுமே பயன் அடைந்துள்ளதாகவும் சர்வே எடுக்க வந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர்."

சசிகலா
Getty Images
சசிகலா

எந்தெந்த தொகுதிகளில் சிக்கல்?

"இந்தப் பதிலால் அதிர்ச்சியடைந்த அமைச்சர்கள், விவசாயக் கடன் அறிவிப்பு பரவலாகச் சென்று சேர்ந்ததா?' என்பதை அறிய முகாம் ஒன்றையும் விரைவில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதேநேரம், தொகுதி என்று பார்த்தால் கோவை தெற்கு, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட தொகுதிகள் அ.தி.மு.கவுக்கு சாதகமாக இல்லை. தொண்டாமுத்தூரிலும் சிக்கலான சூழலே நிலவுகிறது. சேலம் நகரத்தில் வளர்ச்சிப் பணிகள் அதிகளவில் நடந்திருந்தாலும் எடப்பாடி, சங்ககிரி தொகுதிகளில் சற்று எதிர்ப்பை கவனிக்க முடிகிறது. குறிப்பாக, சேலம் புறநகர்ப் பகுதிகளில் உள்ள மக்கள் பலரும், கொரோனா காலத்தில் எங்கள் துன்பங்களை அரசு கண்டுகொள்ளவில்லை' எனத் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல்களை அடிப்படையாக வைத்து பிரசார வியூகங்களை அமைச்சர்கள் கட்டமைத்து வருகின்றனர்" என்கிறார்.

அதிலும், அமைச்சர்கள் மேற்கொண்ட சர்வே முடிவில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் 2011, 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க சந்தித்த எதிர்ப்புகளோ 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எழுந்த எதிர்ப்புகளோ தற்போது இல்லை என்பதுதான். அதேநேரம், பத்து ஆண்டுகளாக தி.மு.க ஆட்சியில் இல்லை, ஸ்டாலின் வரட்டும்' என மக்கள் பேசுவதையும் அமைச்சர்களின் கவனத்துக்குக் கொண்டு சேர்த்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் சம்பவம், கட்சிக்காரர்களின் தனி ஆவர்த்தனங்கள் உள்ளிட்டவை பெரும் சரிவை ஏற்படுத்தலாம் எனவும் சர்வே விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க கூட்டணியால் சரிவா?

மேலும், பா.ஜ.கவோடு கூட்டணி வைப்பது கொங்கு மண்டலத்தில் சரிவை ஏற்படுத்தும். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்பட பா.ஜ.க அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் தொழில்துறையினர் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்' எனவும் ஆளும் தரப்பிடம் அறிக்கையாகக் கொடுத்துள்ளனர். இதையடுத்து தங்களின் சொந்த தொகுதியிலும் கட்டுப்பாட்டில் உள்ள இதர தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பு கிடைக்கக் கூடியவற்றில் மட்டும் அமைச்சர்கள் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு தொகுதி மக்களைக் குளிர்விக்கும் நடவடிக்கைகளும் வேகமெடுக்கலாம்" என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர்.

கொங்கு மண்டலம் இந்தமுறை கை கொடுக்குமா?" என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். கொங்கு மண் எப்போதுமே அண்ணா தி.மு.கவின் கோட்டைதான். தி.மு.க ஆட்சியில் மக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்துவிட்டார்கள். யாரையும் தொழில் செய்யவிடாமல் இருந்தது, நில அபகரிப்பு உள்பட ஏராளமான குற்றச்சாட்டுகள் அணிவகுத்தன. மக்கள் தங்களின் சொத்துகளை நிம்மதியாக வைத்துக் கொள்ள முடியவில்லை" என்கிறார்.

அறுதிப் பெரும்பான்மை கிடைக்குமா?

தொடர்ந்து பேசுகையில், தி.மு.கவால் தடையற்ற மின்சாரத்தைக் கொடுக்க முடியவில்லை. கோவையைப் பொறுத்தவரையில் மில்கள் அதிகம். இங்கு மின் தடையால் பல மில்கள் மூடப்பட்டன. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற அங்கீகாரத்தையே இழந்தோம். ஒரு காலத்தில் மில் வேலைகளுக்குப் போகிறவர்களுக்குப் பெண் கொடுப்பார்கள். இப்படிப்பட்ட நிலையே தி.மு.க ஆட்சியில் மாறிவிட்டது. இதனால் தி.மு.க மீதான மக்களின் வெறுப்பு இன்னமும் அகலவில்லை. அதேநேரம், பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சியால் மக்கள் அயற்சியில் இல்லை. சொல்லப் போனால், கடந்த நான்காண்டுகளாக முதல்வரின் ஆட்சியை மக்கள் கொண்டாடுகிறார்கள். புதிய முதல்வர் கிடைத்துவிட்டதாகத்தான் பார்க்கிறார்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தது, 11 மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றுக் கொடுத்தது என சாதனைகளுக்குப் பஞ்சமில்லை. 5 வருட திமுக ஆட்சியில் வெறும் 300 மருத்துவ இடங்கள்தான் கிடைத்தன. தற்போது 3,500 இடங்களாகவும் அடுத்து 3,650 இடங்களாகவும் அதிகரிக்க உள்ளன. விவசாயக் கடன் என்பது வெறும் அறிவிப்பாக இல்லாமல் உடனே அரசாணையும் நிறைவேற்றிவிட்டார். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முதல்வரின் அரசு மிகச் சிறப்பாகக் கையாண்டது. நகரும் நியாய விலைக் கடைகள், மினி கிளினிக்குகள் கொண்டு வந்தது என சொல்லிக் கொண்டே போகலாம். அ.தி.மு.க அரசு, மத்திய அரசின் அடிமை என்றெல்லாம் சொல்கிறார்கள். அது உண்மையில்லை. மின்சார திருத்த மசோதாவை நாங்கள் ஏற்கவில்லை. வேளாண் சட்டங்களில் உள்ள நியாயத்தை முதல்வர் பேசினார். மத்திய அரசுக்குப் பயந்தோ பணிந்தோ இந்த அரசு செயல்படவில்லை" என்றவரிடம்,

பயிர்க்கடனால் அ.தி.மு.கவினரே அதிகப் பயன் அடைந்ததாகச் சொல்லப்படுகிறதே?" என்றோம்.

அது தவறான தகவல். விவசாயப் பெருமக்களின் நன்மைக்காக அறிவிக்கப்பட்ட திட்டம் இது. இது ஓட்டுக்காக அறிவிக்கப்படவில்லை. இந்தத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையாக வெற்றி பெறுவோம். கடந்த முறை ஒரே ஒரு தொகுதியை இழந்தோம். இந்தமுறை ஒரு தொகுதியில்கூட தி.மு.க வெல்லப் போவது இல்லை" என்கிறார்.

முன்னேறுகிறதா தி.மு.க?

சிகாமணி
BBC
சிகாமணி

கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க வெற்றி சாத்தியமா?" என மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் கேட்டோம். கொங்கு மண்டலத்தின் கோட்டையாக வெகு காலம் அ.தி.மு.க இருந்து வந்துள்ளது. தற்போதுள்ள நிலைமை வேறு. ஒரு தேர்தலில் இருந்த நிலை மற்றொரு தேர்தலில் மாறும். 2019 மக்களவை தேர்தலில் கொங்கு மண்டலம் அ.தி.மு.க பக்கம் இல்லை. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் ஒருவர்கூட வெற்றி பெற முடியவில்லை. பொதுவாக மக்கள் இரண்டுவிதமாக எடை போடுவார்கள். ஒன்று ஆட்சியின் சாதனை, மற்றொன்று தங்கள் ஊர்களில் உள்ள கட்சிக்காரர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது. அப்படிப் பார்த்தால் ஆட்சியில் இருந்தவர்களின் செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், 2019 ட்ரெண்ட் தொடர்ந்தால் அ.தி.மு.கவுக்குப் பாதகமாக இந்தத் தேர்தல் அமையும். 2014 மக்களவைத் தேர்தலில் சில இடங்களில் மூன்றாவது இடத்துக்கு தி.மு.க தள்ளப்பட்டது. அந்த நிலையில் இருந்து தற்போது தி.மு.க முன்னேறி வந்துள்ளது. ஆட்சிக்கு எதிரான மனநிலை என்பது 5 ஆண்டுகளிலேயே வரும்போது, பத்தாண்டுகால ஆட்சியால் வருவதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே, இதுபோன்ற சூழல்களால் வெற்றியை எட்டக் கூடிய நிலைக்கு அ.தி.மு.க போகுமா என்பதெல்லாம் தேர்தல் முடிவில் தெரியவரும்" என்கிறார்.

மார்ச் மாதத்தில் மீண்டும் ஒரு சர்வேயை எடுக்க அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன் முடிவுகளைப் பொறுத்து பிரசார வியூகங்கள் மாறலாம் என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர்.

BBC Indian sports woman of the year
BBC
BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
There is a shocking survey to AIADMK in Kongu belt in upcoming election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X