நாடு கடத்தல்: 116 இந்தியர்களுடன் பஞ்சாப் வந்த அமெரிக்கா போர் விமானம்! மேலும் 157 பேர் இன்று வருகை!
டெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கைது செய்யப்பட்ட 116 இந்தியர்கள், அந்நாட்டின் போர் விமானத்தின் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். அமெரிக்காவில் இருந்து 3-வது கட்டமாக மேலும் 157 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். 157 பேருடன் அமெரிக்கா போர் விமானம் இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைகிறது.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக பதவியேற்ற நாள் முதலே சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்நாட்டில் இருந்து வெளியேற்றி வருகிறார். இதில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களும் சிக்கி உள்ளனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதால் கைது செய்யப்பட்ட இந்தியர்களில் 104 பேர், கை கால்களில் விலங்குகள் மாட்டப்பட்ட நிலையில் அமெரிக்காவின் போர் விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த போர் விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்திறங்கியது.
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள், கை கால்களில் விலங்குகள் போடப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய அரசும் விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில் பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார்.அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியர்கள் நாடு கடத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்பட்டது.
ஆனால் பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும் போதே அந்நாட்டில் இருந்து 2-வது கட்டமாக 116 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவின் போர் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 116 இந்தியர்களும் சனிக்கிழமை நள்ளிரவு- ஞாயிறு அதிகாலை நேரத்தில் பஞ்சாப்ம் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
இவர்களில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் மிக அதிகம். பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் 67. இதற்கு அடுத்ததாக ஹரியானாவை சேர்ந்தவர்கள் 33 பேர்; குஜராத்தை சேர்ந்தவர்கள் 8 பேர்.
இதனைத் தொடர்ந்து மேலும் 157 இந்தியர்களும் 3-வது கட்டமாக அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். 157 இந்தியர்களுடனான அமெரிக்காவின் போர் விமானம் இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை வந்தடையும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications