For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா வைரஸ்:ஒமிக்ரான் திரிபு குறித்து அச்சப்படக்கூடாது,எதிர்கொள்ள தயாராகுங்கள்- உலக சுகாதார அமைப்பு

By BBC News தமிழ்
|
செளம்யா சுவாமிநாதன்
Reuters
செளம்யா சுவாமிநாதன்

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் குறித்து உலகம் அச்சப்படக் கூடாது, மாறாக அதை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

ஓராண்டு காலத்துக்கு முன்பு இருந்ததை விட, தற்போதைய சூழல் மாறிவிட்டது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் வெள்ளிக்கிழமை (நவம்பர் 3ஆம் தேதி) ஒரு கூட்டத்தில் பேசியபோது கூறினார்.

ஒமிக்ரான் திரிபு கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அதிக பிறழ்வுகளைக் கொண்ட கொரோனா திரிபு அதிவேகமாகப் பரவக் கூடியதா அல்லது கொரோனா தடுப்பூசிகள் கொடுக்கும் பாதுகாப்பு அம்சங்களைக் கடக்கக் கூடியதா என இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஒமிக்ரான் திரிபு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் வழங்கியுள்ள தரவுகளின்படி, புதிய ஒமிக்ரான் திரிபு, கொரோனா நோயெதிர்ப்பைக் கடந்து மனிதர்களை பாதிக்கலாம்; இருப்பினும் இந்த பகுப்பாய்வுகள் இறுதியானதல்ல என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து வெளியான தரவுகளை மேற்கோள் காட்டி, ஒமிக்ரான் திரிபு அதிவேகமாக பரவக் கூடியது, இத்திரிபு உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தும் திரிபாக மாறலாம் எனவும் ராய்டர்ஸ் செய்தி முகமையின் நெக்ஸ்ட் மாநாட்டில் கூறினார் உலக சுகாதார அமைப்பின் முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவரான செளமியா சுவாமிநாதன். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 99 சதவீதத்தினர் டெல்டா திரிபால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"நாம் எச்சரிக்கையாகவும், தயாராகவும் இருக்க வேண்டும், அச்சப்படக் கூடாது. காரணம் ஓராண்டு காலத்துக்கு முன்பிருந்த சூழலை விட, தற்போது நாம் மாறுபட்ட சூழலில் இருக்கிறோம்' என்றார் அவர்.

கொரோனா வைரஸ் கோப்புப் படம்
Getty Images
கொரோனா வைரஸ் கோப்புப் படம்

தற்போது உலகில் கொரோனாவுக்கு எதிராக அதிக செயல்திறன் கொண்ட தடுப்பூசிகள் இருக்கின்றன. அதை உலகம் முழுக்க பரவலாக கொண்டு சேர்ப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவின் இயக்குநர் மைக் ரயன் கூறினார்.

மேலும் கொரோனா தடுப்பூசிகளை ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக மாற்றியமைப்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை எனவும் கூறினார்.

ஒமிக்ரான் அச்சத்தால் பல்வேறு நாடுகளும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு எதிராக பயணத் தடைகளை விதித்துள்ளன.

வெளிநாட்டு பயணிகள் அமெரிக்காவுக்கு பயணிப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன், கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.

இந்தியாவில் கூட இருவருக்கு கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு பரவியுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் 66 வயது தென்னாப்பிரிக்கர். இவர் தமது சொந்த நாட்டுக்கே திரும்பி விட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னொருவர் பெங்களூரூவைச் சேர்ந்த மருத்துவர்.

ஒமிக்ரான் திரிபு, நேற்றைய தினம் முதல் தடவையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜெர்மனி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பல பொது இடங்களில் அனுமதி மறுத்துள்ளது. அந்நாட்டில் வரும் பிப்ரவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்படலாம் எனவும் அந்நாட்டின் ஆட்சித் தலைவர் ஏங்கலா மெர்க்கல் கூறியுள்ளார்.

ஆஸ்ட்ரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது பிப்ரவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகள் புதிய கடுமையான கொரோனா விதிமுறைகளை விதித்துள்ளன. பிரிட்டன் அரசு தன் நாட்டு மக்களுக்கு பூஸ்டர் டோஸ் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
WHO about travel restrictions to prevent Coronavirus. omicron Coronavirus latest updates in Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X