For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“தமிழ்நாடே இலக்கு”: பாஜக, ஆம் ஆத்மியின் வெற்றி தென் மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

By BBC News தமிழ்
|

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகியவற்றின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் கூற்றுப்படியே இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, தேர்தலை எதிர்கொண்ட நான்கு ஆளும் மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து தென் மாநிலங்களே எங்களின் அடுத்த இலக்கு என்று இந்த இரு கட்சிகளும் அறிவித்துள்ளன. இது சாத்தியமா?

பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம், மற்ற நான்கு மாநிலங்களில் அந்த கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி, மத்தியில் ஆளும் நரேந்திர மோதி தலைமையிலான திட்டங்களுக்கும் ஆளுகைக்கும் மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்.

டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை மாலையில் நடைபெற்ற தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றுப் பேசுகையில், "உத்தராகண்டில் முதல்முறையாக ஒரே கட்சி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. 2019ஆம் ஆண்டில் மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, 2017ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் கிடைத்த வெற்றியே நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு காரணம் என சில வல்லுநர்கள் கூறினர். அதே வல்லுநர்கள், 2022 சட்டமன்ற தேர்தல் முடிவுகள், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் என கூறுவார்கள் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.

https://twitter.com/BJP4India/status/1501919187593469958

உத்தர பிரதேசத்தில் கடந்த 37 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. இதேபோல், உத்தராகண்டிலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்கள் பாரதிய ஜனதா கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

மணிப்பூரில் தனிப் பெரும்பான்மையுடன் முதல்முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கிறது. கோவாவில் மூன்றாவது முறையாக அந்த கட்சி தலைமையில் ஆட்சி அமைக்கப்படுகிறது.

இந்த தேர்தல் வெற்றி குறித்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, "2024இல் நடக்கும் தேர்தலிலும் அதைத்தொடர்ந்து நடைபெறும் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் கணக்கைத் தொடங்கும்," என்று கூறினார்.

"அடுத்த இலக்கு தென் மாநிலங்கள்"

இது வெறும் தேர்தல் வெற்றிக் களிப்பில் வெளியிடப்படும் வரிகளா என்று அவரிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"இது நிச்சயமாக சாத்தியமாகக் கூடிய வரிகள்" என்று கூறிய அண்ணாமலை, "தமிழ்நாடு மட்டுமல்ல, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம் என தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தமது கணக்கை தொடங்கும். ஏற்கெனவே தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதன் பலத்தை நிரூபித்துள்ளது. எங்களுக்கு மக்களின் அங்கீகாரம் உள்ளது. அவர்கள் துணையுடன் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் வாரிசு அரசியலை ஒழிப்பதை இலக்காகக் கொண்டு செயல்படுவோம்," என்றார்.

https://twitter.com/BJP4TamilNadu/status/1501897675326722048

பிபிசி தமிழிடம் பேசும் முன்பாக சென்னையில் ஊடகங்களுக்கும் அண்ணாமலை பேட்டி கொடுத்தார். அப்போது அவர், நான்கு மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது போல ஒரு நாள் தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் ஏட்டிக்குப் போட்டியாக ஆளும் திமுக செயல்பட்டு வருவது மக்கள் நலன்களுக்கு உகந்ததல்ல என்று கூறினார்.

இந்த இரண்டு மாநில தேர்தல்களை வைத்து தென் மாநிலத்திலும் ஆட்சியை பிடிப்போம் என கூறுவது எந்த அளவுக்கு சாத்தியம் என நாம் கேட்டதற்கு விரிவாகவே பதிலளித்தார் அண்ணாமலை.

"இந்த வெற்றியை நான்கு மாநில தேர்தல் வெற்றியாக மட்டும் நாங்கள் பார்க்கவில்லை. பாஜக போட்டியிட்ட இடங்களில் எங்களுடைய வாக்கு வங்கி சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் ஜாதி ரீதியிலான கட்சிகள் பக்கம் சார்ந்திருந்த பட்டியலினத்தவர்களின் வாக்குகள் கூட 50க்கும் அதிகமான இடங்களில் பாஜகவுக்கு வந்துள்ளன. பஞ்சாபில் நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டாலும் அங்கும் எங்களுடைய கணக்கை தொடங்கியுள்ளோம். இவை அந்தந்த மாநிலங்களுக்காக பாஜக வகுத்த உத்திகள் மற்றும் பாஜக ஆளும் மத்திய அரசின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறோம்," என்றார்.

பாஜக கருத்துடன் காங்கிரஸ் எம்.பி

Will BJP and AAP victory make an impact in Tamilnadu?
Getty Images
Will BJP and AAP victory make an impact in Tamilnadu?

ஆனால், பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த விருதுநகர் தொகுதி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறுகிறார்.

ராகுல் காந்திக்கு நெருக்கமானவரான மாணிக்கம் தாகூர், "ராகுல் கூறியதைப் போல, ஒவ்வொரு தேர்தல் முடிவுகளில் இருந்தும் எங்களுடைய கட்சி பாடம் கற்று வருகிறது. அந்த பாடத்தை உணர்ந்து சுய ஒழுங்கை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு," என்றார்.

தமிழ்நாடு, தெலங்கானாவில் வலுவாக தடம் பதிக்கும் பாஜகவின் திட்டம் குறித்து கேட்டதற்கு, "நேர்மை அரசியல் நடத்தி ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் வழக்கம் பாஜகவுக்கு இருந்ததில்லை. அந்த கட்சி எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கிறதோ ஒரு கட்டத்தில் அந்த கூட்டணிக் கட்சியின் காலைவாரி விட்டு ஆட்சியைப் பிடிப்பதுதான் அதன் உத்தி. ஜனதா தளம், லோக் ஜன சக்தி போன்ற பல கட்சிகளுடன் அப்படித்தான் பாஜக செயல்பட்டது. குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் என பல மாநிலங்களிலும் அதைத்தான் செய்தது. இப்போது தென்மாநிலங்களிலும் அதைத்தான் செய்யும்," என்றார் மாணிக்கம் தாகூர்.

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட மாடல் என்ற நோக்கத்தை முன்வைத்து ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. இரு கட்சிகளின் தலைவர்களிடமும் சிறந்த புரிந்துணர்வு உள்ளது. அதில் குழப்பம் விளைவிக்க பாஜகவால் முடியாது. அந்தக் கட்சி உத்தர பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா போன்ற மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கலாம். அது தமிழ்நாட்டில் எடுபடாது. குறைந்தபட்சம் 2024வரை பாஜகவின் எண்ணம் நிறைவேறாது," என்கிறார் மாணிக்கம் தாகூர்.

காங்கிரஸுக்கு கவனம் அவசியம்

ஆனால், இந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வி அதற்கு மிகப்பெரிய எச்சரிக்கை என்று கூறுகிறார் பத்திரிகையாளர் லட்சுமணன்.

காங்கிரஸ்
BBC
காங்கிரஸ்

"மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் காங்கிரஸ் கட்சி, அதன் வசம் இருந்த மாநிலங்களின் ஆளுகையை பறிகொடுத்து வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோதி அரசு, அதன் கெளரவத்தை விட்டுக் கொடுத்து விட்டு தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் குறிப்பாக பஞ்சாப் விவசாயிகளின் வாக்கு வங்கியை கவனத்தில் கொண்டே வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. அதில் அரசியல் உள்நோக்கம் இருந்தாலும், தமது தவறை ஆளும் பாஜக திருத்திக் கொண்டது. அத்தகைய படிப்பினையை காங்கிரஸ் கட்சி செய்யவில்லை," என்கிறார் லட்சுமணன்.

"பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் பதவி விலகிய பிறகு, நவ்ஜோத் சித்து தலைமையை கட்சித் தலைமை அங்கீகரித்தது. ஆனால், அதன் பிறகு முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியுடன் சித்து முரண்பட்டு செயல்பட்டார். இருவரின் மோதலை தீர்ப்பதிலேயே நேரத்தை செலவிட்ட காங்கிரஸ் மேலிடம், மக்கள் நலன்களை பாதித்த விஷயங்களிலும், விவசாயிகளின் பிரச்னைகளிலும் வாக்காளர்களை ஈர்க்கவும் மத்திய அரசுக்கு எதிராக வலுவான குரலை எழுப்பவும் தவறி விட்டது," என்று லட்சுமணன் குறிப்பிட்டார்.

ஆனால், உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி படிப்படியாக தமிழ்நாட்டுக்கும் விரிவடையும் இலக்கை பாஜக கொண்டுள்ளதே என அவரிடம் கேட்டோம்.

"தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சியினர் இருந்த மேடையில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழியும் வகையில் பேசியிருக்கிறார். அத்தகைய சூழலில் ராகுலுக்கு எதிராக திமுக இப்போதைக்கு திரும்பாது என்றே தோன்றுகிறது," என்றார் லட்சுமணன்.

"ராகுல் வழிநடத்தும் காங்கிரஸை திமுக ஆதரிப்பதால் அந்தக் கட்சியின் தவறுகளை திருத்திக் கொள்ள அறிவுறுத்தும் தார்மீக கடமை ஸ்டாலினுக்கு உள்ளது. ஆம் ஆத்மி என்ற மாநில அளவிலான கட்சி வேறொரு மாநிலத்தில் ஆட்சி அமைப்பது வரவேற்புக்குரியதுதான். ஆனால், அந்த எண்ணத்தில் பாஜகவோ ஆம் ஆத்மியோ தமிழ்நாட்டிலும் அதே பாணியில் தடம் பதிக்கலாம் என்பது இப்போதைககு சாத்தியமில்லாத ஒன்று," என்கிறார் லட்சுமணன்.

ஆனால், லட்சுமணனின் வாதத்தை ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு பிரிவு தலைவர் வசீகரன் ஏற்கவில்லை.

'டெல்லி மாடல்' ஆட்சியை விரிவுபடுத்துமா ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சி
BBC
ஆம் ஆத்மி கட்சி

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''ஜாதி அரசியலையும் மத அரசியலையும் முன்வைக்காமல், மக்களின் தேவை, வளர்ச்சித் திட்டங்களை முன் வைத்ததால் மட்டுமே ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்தது. தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை, மக்கள் நலத்திட்டங்களாக நிறைவேற்றியது.

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாடல் ஆட்சியை பஞ்சாப் மக்கள் அங்கீகரித்துள்ளனர். அந்த வெற்றி இனி வரும் காலங்களில் அடுத்தடுத்த மாநிலங்களிலும் தொடரும்.

பஞ்சாபைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்திலும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். தமிழ்நாட்டிலும் 2026இல் ஆம் ஆத்மி ஆட்சி அமையும்,' என்கிறார் வசீகரன்.

என்ன சொல்கிறது அதிமுக?

தமிழ்நாட்டில் நாடாளுமன்றம், சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து தேர்தல் களம் கண்டது. அதில் சில இடங்களிலும் அந்தக் கட்சி வெற்றி பெற்றது. இந்தக் கூட்டணி வரும் காலங்களிலும் தொடருமா? பாஜகவின் ஆட்சி அமைக்கும் கனவுக்கு, அதிமுகவுடனான அதன் கூட்டணி பாதிப்பாக இருக்காதா என்று அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் எம்.பியுமான டாக்டர் பி. வேணுகோபாலிடம் கேட்டோம்.

அதிமுக பாஜக
BBC
அதிமுக பாஜக

"எல்லா கட்சிகளுக்கும் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் கனவு இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாநிலத்தை ஆளும் தகுதியும் மக்கள் அங்கீகாரமும் திராவிட கட்சிகளான அதிமுக, திமுகவுக்கு மட்டுமே உள்ளது," என்கிறார் அவர்.

"பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் விவகாரத்தில் மேல் மட்டத்தில் உள்ள தலைவர்கள் மத்தியில் ஒரு கருத்தும் கடைநிலை கட்சித்தொண்டர்கள் மனதில் ஒரு கருத்தும் உள்ளது. எங்களுக்கு என அரசியல் கொள்கைகள், கூட்டணிக் கொள்கைகள் உள்ளன. அவற்றுக்கு என வரம்புக்கோடு உள்ளது. அது மீறப்படும்போது எங்களுடைய சுய உரிமையை விட்டுக் கொடுத்து குறிப்பிட்ட ஒரு கட்சியுடன் உறவை பேண மாட்டோம்," என்கிறார் வேணுகோபால்.

இதேகருத்தை கிட்டத்தட்ட ஒத்துப்போவது போல எதிரொலித்தார் மற்றொரு பத்திரிகையாளரான குபேந்திரன்.

அவரது கூற்றுப்படி, வெளி மாநிலத்தில் இருந்து வந்து பஞ்சாபில் தடம் பதித்துள்ள ஆம் ஆத்மி, கட்சி தொடங்கிய பத்து வருடங்களிலேயே டெல்லி பாணியில் ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு முன்னேற அந்தந்த மாநிலங்களில் நிலவிய அரசியல் நிலைமை மற்றும் அதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகள் மீதான மக்களின் வெறுப்புணர்வுமே காரணம் என்றார்.

பாஜகவின் அண்ணாமலை சுட்டிக்காட்டும் 'வாரிசு அரசியல்' தென் மாநிலங்களில் அதிகமாக காணப்படுகிறதே. அதை ஒழிக்கும் இலக்கை பாஜக கொண்டிருப்பது ஆரோக்கியமான அரசியல் இல்லையா என்று குபேந்திரனிடம் கேட்டோம்.

காங்கிரஸ் திமுக
BBC
காங்கிரஸ் திமுக

"வாரிசு அரசியல் என்பது ஜவாஹர்லால் நேரு இருக்கும்வரை இந்தியாவில் இருக்கவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தி நிர்பந்தம் காரணமாக அரசியலுக்கு வந்தார். அவரால்தான் சஞ்சய் காந்தி அரசியலுக்குள் நுழைந்தார். சஞ்சய் காந்திக்குப் பிறகு ராகுல் காந்தி அரசியலுக்கு வந்தார். ஆனால், ராஜீவ் காந்தி இருக்கும்வரை அவரது பிள்ளைகள் அரசியலுக்கு வரவில்லை. ராஜீவ் மறைவுக்குப் பிறகே சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர் ஆக்கப்பட்டார். பிறகு ராகுலும் பிரியங்கா காந்தியும் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நிர்பந்தம் காரணமாக அரசியலுக்கு வந்தவர்கள். தமிழ்நாட்டில் கருணாநிதி வழியில் ஸ்டாலின் வந்தாலும், அவர் முறைப்படி கட்சியின் கீழ்நிலையில் பணியாற்றி அனுபவம் அடிப்படையில் பொறுப்புகளுக்கு வந்தவர். அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசியல் பாதையை தேர்ந்தெடுக்க விரும்பினால், எதிர்கட்சிக்கா போய் சேருவார்கள்? இங்கே வாரிசு அரசியல் என்ற முழக்கத்தை முன்வைத்து தன்னை வளர்த்துக் கொள்ள பாஜக முயல்கிறது. ஆனால், நடைமுறையில் இந்த வாதங்கள் எல்லாம் எடுபடாது. அவை பாஜகவுக்கு தன்னை வளர்த்துக் கொள்ள பயன்படலாமே தவிர, ஆட்சியைப்பிடிக்க உதவாது," என்கிறார் குபேந்திரன்.

ஆனாலும் தமிழ்நாடு, தெலங்கானா போன்ற மாநிலங்களில் தீவிரமாக காணப்படும் ஜாதி அரசியல் மற்றும் வாரிசு அரசியலை ஒழிப்பதை முழக்கமாகக் கொண்டு செயல்படுவோம் என்று மீண்டும் நம்மிடையை உறுதிபடக் கூறுகிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

இந்த விஷயத்தில் பாஜக, ஆம் ஆத்மி கட்சியின் தென் மாநில பிரவேசம் அல்லது அரசியல் தாக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவாவிடம் கேட்டோம். "தேர்தல் வெற்றி குறித்து கருத்து சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. அவை தமிழ்நாட்டுடன் தொடர்பானவை அல்ல," என்று கூறினார்.

மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழியிடம் கேட்டபோது, "பாஜக, ஆம் ஆத்மியின் வெற்றி பற்றி திமுக கருத்து சொல்ல ஏதுமில்லை. தேவை எழுந்தால் மட்டுமே அது பற்றி திமுக மேலிடம் பேசும்," என்றார் கனிமொழி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Will BJP and AAP victory make an impact in Tamilnadu?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X