என்ஜினில் தீ: நியூஜெர்சிக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானம்- 313 பயணிகள் உயிர் தப்பினர்
நியூஜெர்சி: அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் இருந்து மும்பை கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்தது. இதையடுத்து விமானம் மீண்டும் நியூஜெர்சிக்கே திரும்பிச் சென்று பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் இருந்து 313 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமை கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் என்ஜினின் இடப்பக்கத்தில் இருந்து தீப்பிடித்து புகை வருவதை விமானி பார்த்தார். இதையடுத்து விமானம் நியூஜெர்சிக்கு திரும்பிச் சென்று அங்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் வேறு விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் பயணிகள் காயம் இன்றி தப்பித்தனர். முதலில் விமானத்தில் பறவை மோதியதால் தான் என்ஜினில் தீப்பிடித்தது என்று கூறப்பட்டது. ஆனால் விசாரணையில் பறவை மோதியது காரணம் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
என்ஜின் தீப்பிடித்த விமானம் போயிங் 777 ரகத்தை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.