அசைக்கப்படும் அஸ்திவாரம்! ரஷ்ய "அலிகார்க்ஸுக்கு" ஆப்பு வைக்கும் அமெரிக்கா.. பிடன் பரபரப்பு அறிவிப்பு
மாஸ்கோ: ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன, ரஷ்யா மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டிற்கு உள்ளே கடந்த ஒரு வாரமாக ரஷ்யா போர் நடத்தி வருகிறது. அந்நாட்டு தலைநகர் கீவை பிடிக்க ரஷ்யா போராடிக்கொண்டு இருக்கிறது. போர் இன்று 6வது நாளை எட்டி உள்ளது.
உக்ரைன் நாடு நேட்டோ படையில் இணையும் அறிகுறிகள் தெரிந்த்தாலும், ஐரோப்பாவுடன் நெருக்கமாக இருந்ததாலும் கோபம் அடைந்த ரஷ்யா இந்த படையெடுப்பை தொடங்கி உள்ளது.

பிடன் பேச்சு
இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று அதிபர் பிடன் நிகழ்த்திய உரையில், ரஷ்யாவின் சர்வாதிகாரி ஒரு சுதந்திர நாட்டிற்கு உள்ளே சென்று தாக்குதல் நடத்த நினைக்கிறார், அவருக்கு இது பெரிய அளவில் இழப்புகளை ஏற்படுத்தும். உலகம் ஜனநாயகத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் அவர் சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறார். உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க பார்க்கிறார். உலகம் அமைதியின் பக்கமும், பாதுகாப்பின் பக்கமும்தான் நிற்கும்.

புடின்
சுதந்திரம் எப்போதும் சர்வாதிகாரத்தை வீழ்த்தும். 6 நாட்களுக்கு முன் ரஷ்யா அதிபர் புடின் சுதந்திர உலகின் அஸ்திவாரத்தை அசைக்கும் அளவிற்கு உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார். ஆனால் அவர் தவறு செய்துவிட்டார். இந்த சகாப்தத்தின் வரலாற்றை எழுதும் போது, உக்ரைன் மீதான புடின் போர் ரஷ்யாவை பலவீனமாகவும், மற்ற நாடுகளை வலுவாகவும் ஆக்கியிருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

ரஷ்யா அத்துமீறல்
புடின் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யா மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. ரஷ்யா தொழில்நுட்ப ரீதியாக பெரிய அடியை வாங்கிக்கொண்டு இருக்கிறது. உலக நாடுகள் இணைந்து ரஷ்யாவை தனிமைப்படுத்தி வருகின்றன.

உக்ரைன் ராணுவம்
உக்ரைனுக்கு ராணுவம், பொருளாதாரம் போன்ற உதவிகளை வழங்கி, நட்பு நாடுகளுடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். பொருளாதார ரீதியாக ரஷ்யா அந்த வலியை உணர வேண்டும். ரஷ்யாவின் எண்ணெயை நம்பி நாம் இல்லை. புடினின் உத்தரவுகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இப்போது கவனத்துடன் இருக்கிறோம். கவலை அடைய எதுவும் இல்லை.

அணு ஆயுதம்
ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என்று மக்கள் அஞ்ச வேண்டாம். அந்த கவலை வேண்டாம். ரஷ்யா உள்ளே சென்று அமெரிக்கா தாக்காது. உக்ரைன் போரில் அமெரிக்கா ஈடுபடாது. ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் இணைந்து அமெரிக்காவில் உள்ள ரஷ்ய செல்வந்தர்களான அலிகார்க்ஸின் சொத்துக்களை முடக்குவோம். அவரின் மாட மாளிகைகள், சொத்துக்கள், தனியார் விமானங்கள் ஆகியவற்றை கைப்பற்றுவோம், என்று பிடன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

அலிகார்க்ஸ்
அலிகார்க்ஸ் என்பவர்கள் ரஷ்யாவில் இருக்கும் பணக்கார குடும்பங்கள் ஆவர். சோவியத் யூனியன் காலத்தில் இருந்தே இந்த பணக்கார குடும்பங்கள் ரஷ்ய அரசின் முடிவுகளில் தலையிட்டு வருகின்றன. இவரின் சம்பந்தம் இன்றி ரஷ்யாவில் அரசு பெரிய முடிவுகளை எடுக்க முடியாது. இந்த போருக்கும் கூட இவர்களின் சம்பந்தம் வேண்டும். இந்த நிலையில்தான் ரஷ்யாவின் அஸ்திவாரமாக கருதப்படும் அலிகார்க்ஸ் சொத்துக்களை முடக்குவதாக பிடன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications