For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தட்சிணாமூர்த்தி காத்தையா: நாளை தூக்கிலிடப்பட இருந்த மலேசிய தமிழருக்கு தற்காலிக நிவாரணம்

By BBC News தமிழ்
|
தட்சிணாமூர்த்தி காத்தையா
Getty Images
தட்சிணாமூர்த்தி காத்தையா

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு மலேசிய இளைஞர் சிங்கப்பூரில் நாளை தூக்கிலிடப்பட திட்டமிட்டிருந்த நிலையில், தற்காலிக நிவாரணமாக அவரது தண்டனை மே 20ஆம் தேதிவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற அந்த 36 வயது நபரை, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வெள்ளிக்கிழமை தூக்கிலிட திட்டமிடப்பட்டது. சிங்கப்பூரில் இவரைப் போலவே வேறொரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மலேசிய தமிழர் சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்பட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சர்வதேச அளவில் எதிர்ப்பைத் தூண்டியது.

இந்த நிலையில், தட்சிணாமூர்த்தி தொடர்பான வழக்கில் அவரது சார்பில் முன்பு ஆஜராகி வந்த வழக்கறிஞர் எம்.ரவி, மே 20ஆம் தேதி தமது கட்சிக்காரரின் மேல்முறையீட்டு வழக்கு மே 20ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளதால், அவருக்கு வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் 13 கைதிகள் தொடர்பான ஒரு சிவில் வழக்கின் அங்கமாக தட்சிணாமூர்த்தியின் வழக்கும் உள்ளது. அந்த கைதிகள் தங்களுடைய பார்வைக்கு காட்டப்படாமல் தண்டனை நிறைவேற்றம் தொடர்பான கடிதப் பரிவர்த்தனையை அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்களுக்கான வழக்கு விசாரணைக்காக சிறைக்கு வெளியே மனித உரிமைகள் ஆர்வலர் கிர்ஸ்டன் ஹான் குரல் கொடுத்து வருகிறார்.

அரசாங்கத்தின் பழிவாங்கலுக்கு பயந்து எந்த வழக்கறிஞரும் வழக்கை எடுக்க விரும்பாததால், தட்சிணாமூர்த்தி வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகியதாக ரவியும் ஹானும் தெரிவித்தனர்.

தட்சிணாமூர்த்திக்காக ஏன் தற்போது ஆஜராகவில்லை என்று கேட்டதற்கு, "மரண தண்டனை கைதிகள் தொடர்பான வழக்குகளை கடைசி கட்டத்தில் கையில் எடுக்கும் வழக்கறிஞர்கள், அந்த வழக்கில் தோற்றால் நீதிமன்ற நடைமுறைகளை தவறாகப் பேசும் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு அடிக்கடி ஆளாவதுண்டு. அத்தகைய வழக்கறிஞர்கள் அட்டர்னி ஜெனரல் கோரும் வழக்குச் செலவினத்தொகையை கட்டவும் நேரிடும்," என்று வழக்கறிஞர் ரவியும் கிர்ஸ்டன் ஹானும் தெரிவித்தனர்.

2011ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குள் சுமார் 45 கிராம் (1.6 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தியதாக தட்சிணாமூர்த்தி குற்றம்சாட்டப்பட்டார். சக மலேசியரான நாகேந்திரன் கே. தர்மலிங்கம் புதன்கிழமை தூக்கிலிடப்படுவதற்கு முன்பு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மரண தண்டனை கைதியாக சிறையில் இருந்தார். போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்பது சம்பந்தப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழையும்போதே தெளிவுபடுத்தப்படும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் கூறுகிறது.

யார் இந்த தட்சிணாமூர்த்தி, இவருக்கு முன்பு தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் யார்?

மலேசிய தமிழர் சிங்கப்பூர் தூக்கு
Reuters
மலேசிய தமிழர் சிங்கப்பூர் தூக்கு

மலேசியாவைச் சேர்ந்த, அறிவுசார் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த 36 வயதான நாகேந்திரன் தர்மலிங்கம் ஏப்ரல் 27 (புதன்கிழமை) தூக்கிலிடப்பட்ட நிலையில், மேலும் ஒரு மலேசியர் மரண தண்டனையை எதிர்நோக்கி இருப்பது மலேசியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் மலேசியரான தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற அந்த மலேசியர் இறுதிக்கட்ட முயற்சியாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணையில் தட்சிணாமூர்த்தி சார்பில் வாதாட வழக்கறிஞர்கள் யாரும் முன்வரவில்லை. அதனால் தமக்குத் தாமே அவர் வாதாடினார்.

காணொளி வசதி மூலம் நடைபெற உள்ள இந்த விசாரணையில், சிறையில் இருந்தபடியே பங்கேற்றார் தட்சிணாமூர்த்தி.

தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்துள்ள மற்றொரு மனு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில், அந்த விசாரணை முடியும் முன்பு தம்மை தூக்கிலிடுவது சட்டப்படித் தவறு என்பதே அவரது வாதம்.

45 கிராம் எடையுள்ள டயாமார்ஃபைன் என்ற போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்தார் என்று தட்சிணாமூர்த்தி மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி மலேசியா, சிங்கப்பூர் எல்லையில் உள்ள உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தட்சிணாமூர்த்தியும் சிங்கப்பூரைச் சேர்ந்த கிறிஸ்டின் ஜெயமணி என்ற பெண்மணியும் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் 44.96 கிராம் டயாமார்ஃபைன் போதைப்பொருளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரும் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டனர். விசாரணையின்போது, தமது குழந்தைகளையும் குடும்பத்தையும் ஆதரிக்க தமக்கு பணம் தேவைப்பட்டதாகவும், ஒரு சிலரால் தாம் தட்சிணாமூர்த்திக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கிறிஸ்டின் ஜெயமணி தெரிவித்தார்.

கம்பி
Getty Images
கம்பி

"தட்சிணாமூர்த்தி என்னிடம் ஒரு பையைக் கொடுப்பார். அதில் சில பாக்கெட்டுகள் இருக்கும். அவற்றைக் குறிப்பிட்ட சிலரிடம் ஒப்படைக்கச் சொல்வார். அந்த பாக்கெட்டுகள் செய்தித்தாள்களாலும் கனமான டேப்புகளாலும் சுற்றப்பட்டிருக்கும். மேலும் கனமாகவும் இருக்கும்.

"எனவே, அவற்றில் விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும் எனக் கருதினேன். வேலை முடிந்ததும் அவர் எனக்கு 200 சிங்கப்பூர் டாலர்கள் (630 மலேசிய ரிங்கிட்) தருவார். தட்சிணாமூர்த்தி அளித்த பாக்கெட்டுகளில் போதைப்பொருள் இருப்பதோ, அவை எந்த ரகத்தைச் சேர்ந்தவை என்பதோ எனக்குத் தெரியாது," என்று கிறிஸ்டின் ஜெயமணி கூறியிருந்தார்.

இதேபோல் தட்சிணாமூர்த்தி அளித்த வாக்குமூலத்தில், தாம் போதைப் பொருள் கடத்துவது தமக்கு அறவே தெரியாது என்றும், சீன மருத்துவத்துக்கான மருந்துகளை சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதாகவே தாம் கருதியதாகவும் குறிப்பிட்டார்.

"மலேசிய, சிங்கப்பூர் எல்லையில் அமைந்துள்ள ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. தாம் சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற சீன மருந்துகளை ராஜா என்பவர் தம்மிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார்.

"ஒருமுறை ஆர்வத்தின் பெயரில், நான் கொண்டு செல்வது என்ன என்று ராஜாவிடம் கேட்டேன். அதற்கு, அபாயகரமான மருந்துகள் ஏதுமில்லை என்று அவர் கூறினார். அதன் பின்னர், உள்ளே என்ன இருக்கிறது என்பது வெளியே தெரியும்படி, என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பாக்கெட்டில் பிரவுன் (brown) நிறத்தில் ஏதோ இருப்பது தெரிந்தது. எனவே, அது சீன மருந்தாகத்தான் இருக்கும் என்று கருதினேன்.

"சந்தேகம் ஏதும் எழாததால், நான் மேலதிக விவரங்கள் எதையும் கேட்கவில்லை. ராஜாவுக்கும் கிறிஸ்டினுக்கும் இடையே தகவல் தொடர்பாளராகவும் நான் மாறிப்போனேன்," என்று தட்சிணாமூர்த்தி கைது செய்யப்பட்ட பின் வாக்குமூலம் அளித்திருந்தார்.

சிங்கப்பூர் சட்டத்தின்படி, போதைப்பொருள் கடத்தலில் தபால் சேவையைப் போல் (courier) செயல்படக்கூடியவர்களுக்கு, கடத்தலில் குறைந்தபட்ச பொறுப்பு கொண்டிருப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்படுகிறது. இல்லையெனில், போதைப்பொருள் கடத்தலுக்கு உலக அளவில் மிகக் கடுமையான தண்டனையைத் தரும் சிங்கப்பூர் சட்டங்களில் இருந்து தப்பிக்க இயலாது.

கடந்த 2015ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட தட்சிணாமூர்த்தியும் கிறிஸ்டினும் குற்றவாளிகள் என சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், கிறிஸ்டின் வெறும் தபால் சேவையைப் போல் செயல்பட்டதால் மரண தண்டனையில் இருந்து தப்பித்தார்.

அவருக்கு பிரம்படி அல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் அவருக்கு பலனளிக்கவில்லை. அவர் சிங்கப்பூர் அதிபருக்கு அனுப்பிய கருணை மனுவும் தள்ளுபடியானது.

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தட்சிணாமூர்த்தி தூக்கிலிடப்பட இருந்தார். எனினும், அதை ஒத்திவைக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவின் காரணமாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஏப்ரல் 29ஆம் தேதி அவர் தூக்கிலிடப்படுவதாக அவரது குடும்பத்தாருக்கு சிங்கப்பூர் அரசாங்கம் தகவல் அனுப்பியது.

சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்துள்ள ஒரு மனு மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவ்வாறு இருக்கையில் அவரை எவ்வாறு தூக்கிலிட முடியும் என்றும் மலேசியாவைச் சேர்ந்த Lawyers for Liberty (LFL) என்ற அமைப்பின் ஆலோசகர் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் மே 20ஆம் தேதி, தட்சிணாமூர்த்தி மனு மீதான விசாரணை நிறைவேற உள்ளதாகவும், அவருக்கு சட்ட ரீதியிலான வாய்ப்புகள் இன்னும் இருப்பதாகவும் சுரேந்திரன் சுட்டிக்காட்டி உள்ளார்.

தட்சிணாமூர்த்தியால் தமக்காக வாதாட வழக்கறிஞர்கள் யாரையும் நியமிக்க முடியவில்லை. அவருக்குப் போதுமான வசதியில்லாத நிலையில், சிங்கப்பூரில் உள்ள வழக்கறிஞர்களும் அவருக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாக விரும்பவில்லை என்கிறார் லாயர்ஸ் ஃபார் லிபெர்டியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஸைட் மாலெக்.

"போதைப்பொருள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்காடினால், சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரல், நீதிமன்றங்களால் பழிவாங்கப்படுவோம் என்று சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் அஞ்சுகின்றனர். இதனால்தான் தட்சிணாமூர்த்தி இன்று தமக்குத்தாமே வாதாட வேண்டிய நிலையில் உள்ளார்," என்று ஸைட் மாலெக் கூறியுள்ளார்.

நேற்று போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மலேசிய இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்.

இவர் அறிவுசார் குறைப்பாடு உள்ள மாற்றுத்திறனாளி என்றும் இவரின் மரண தண்டைனை நிறுத்தப்பட வேண்டும் என்றும் செயற்பாட்டாளர்கள் பலர் கோரிக்கை வைத்திருந்த நிலையிலும் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=8Ds8r9HyYLQ

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
death penalty malaysian tamil boy thatchinamoorthi kaathaiya temporary relief
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X