அச்சுறுத்தும் டெல்டா கொரோனா.. ஆஸ்திரேலியா முதல் ஆப்பிரிக்கா வரை.. விரைவில் 3ஆம் அலை? புதிய வார்னிங்
சிட்னி: கொரோனா வைரசை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதாகக் கருதப்படும் ஆஸ்திரேலியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும்கூட டெல்டா வகை கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால், மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரசுடன் போராடுவதும், வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பதுமே உலக நாடுகளுக்கு பெரும் போராட்டமாக உள்ளது. வளர்ந்த நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை கொரோனா பாதிப்பை தற்போது கட்டுக்குள் வைத்திருப்பதே அனைத்து நாடுகளுக்கும் முக்கிய சவாலாக உள்ளது.
கடந்த ஆண்டு முதலில் கொரோனா பரவ தொடங்கிய போது, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளும்கூட வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த திணறின.

சர்வதேச நாடுகள்
அதேநேரம் ஆஸ்திரேலியா, இஸ்ரேல், தென் கொரியா போன்ற சில நாடுகள் மிகச் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தின. இருப்பினும், இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா தற்போது மற்ற நாடுகளுக்கும் தலைவலியை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தியதாகக் கருதிய பல நாடுகளும் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊரடங்கு
கொரோனா பரவலைத் தொடக்கம் முதலே சிறப்பாகக் கையாண்ட நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஆஸ்திரேலியா. தற்போது அங்கும் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு பரவ தொடங்கியுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா தனது நாட்டின் எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது, ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமான சிட்னியில் ஐந்து பேருக்கு டெல்டா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் மீண்டும் கட்டுப்பாடுகள்
மிகச் சிறந்த தடுப்பூசி பணிகள் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது இஸ்ரேல். அங்கு வைரஸ் முழுமையாகக் கட்டுக்குள் வந்ததால், பொது இடங்களில் மாஸ்க் அணிவது கூட கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கடந்த 4 நாட்களாக அங்கு திடீரென தினசரி வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்தது. டெல்டா வகை கொரோனாவாலேயே நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அந்நாட்டின் கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் தலைவர் நாச்மேன் ஆஷ், மாஸ்க் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார்.

Array
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு பிஜி. அங்கும் கடந்த சில நாட்களாக வைரஸ் பாதிப்பு 300 என அதிகரித்துள்ளது. அங்கு வைரஸ் இரட்டிப்பாகும் நாட்களும் 9 ஆக உள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை பிஜியும் மீண்டும் அதிகப்படுத்தியுள்ளது. இதேபோல ரஷ்யாவிலும் தினசரி வைரஸ் 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் அதிபர் புதினும் தீவிர கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி ஆலோசித்து வருகிறார்.

ஆப்ரிகிக்க நாடுகள்
கொரோனா முதலில் பரவ தொடங்கிய போது, பலரும் அஞ்சியது ஆப்பிரிக்க நாடுகளைப் பற்றித் தான். பொருளாதார ரீதியில் பல ஆண்டுகளாகச் சுரண்டப்பட்டு வரும் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் தேவையான சுகாதார ஊட்கட்டமைப்பு இல்லை. இருப்பினும், இத்தனை காலமாக கொரோனா பாதிப்பு ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமானதாக மாறவில்லை. ஆனால், தற்போது அங்குள்ள 12 நாடுகளில் வைரஸ் பரவல் மூன்று வாரமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

டெல்டா கொரோனா
வேகமாகப் பரவும் டெல்டா வகை கொரோனா 14 ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் டெல்டா வகை கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது. வேக்சின் பணிகளை விரைவு படுத்துவது மட்டுமே வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் ஒரே வழி. இதனால் அனைத்து நாடுகளும் அதிலேயே தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications