உயிர் பிழைக்க ஒவ்வொரு நொடியும் போராட்டம்.. கப்பலில் சிக்கி தவிக்கும் 13 இந்தியர்கள்.. மாலுமிகள் பீதி!
கீவ்: ஒரு பக்கம் வளைகுடாவில் நிலைமை மோசமாகி வரும் நிலையில், இன்னொரு பக்கம் உக்ரைன்- ரஷ்யா மோதலும் இப்போது முடிவுக்கு வருவது போல தெரியவில்லை. இதற்கிடையே அங்கு தீவிரமடைந்துள்ள தாக்குதல் காரணமாக 13 இந்தியர்கள் உட்பட 15 மாலுமிகள் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு மத்தியில் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகிலேயே அதிக மாலுமிகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இந்தியர்கள் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கப்பல்களிலும் பணியாற்றி வருகிறார்கள். இப்போது சர்வதேச பதற்றம் காரணமாக டிரோன் தாக்குதல்கள் அதிகரித்திருக்கும் சூழலில், கப்பலில் பணியாற்றும் இந்தியர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் அடிக்கடி ஏற்படுகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

13 இந்தியர்கள்
உக்ரைனின் கருங்கடல் பகுதியில் உள்ள சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பலில் சிக்கித் தவிக்கும் 13 இந்தியர்கள் உள்பட 15 மாலுமிகள் இப்போது அச்சத்தில் இருக்கிறார்கள். ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக என்ன ஆகுமோ என்ற அச்சத்திலேயே இவர்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் கழிக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பதாக இந்திய மாலுமிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள M.V. AMIR1 என்ற சரக்கு கப்பலில் மொத்தம் 15 மாலுமிகள் உள்ளனர். அவர்களில் 13 பேர் இந்தியர்கள் ஆவர். ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதனால் கப்பலில் உள்ளவர்கள் அச்சத்தில் உள்ளதாக மாலுமிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாலுமிகள் சங்கம்
இது குறித்து மாலுமிகள் சங்கம் மேலும் கூறுகையில், "M.V. AMIR1 கப்பலில் உள்ள 15 பேர், குறிப்பாக 13 இந்திய மாலுமிகள், உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கியுள்ளனர். கப்பலுக்கு அருகே தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. எந்த நேரத்திலும் தங்கள் கப்பல் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் அவர்கள் வாழ்கின்றனர்.
மத்திய அரசு, கப்பல் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் உடனடியாக தலையிட்டு, இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்களை பாதுகாப்பாக தாயகம் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும். போர் பகுதிகளில் இந்திய மாலுமிகளை இப்படி விட்டுவிடக் கூடாது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
Urgent Appeal | M.V. AMIR1
— FSUI (@FSUIINDIA) July 28, 2026
M.V. AMIR1, currently at Ukrainian port Chornomorsk with 15 crew on board, including 13 Indian seafarers, is trapped in a terrible and life-threatening situation.
Repeated drone and missile attacks are being attempted in the immediate vicinity of the… pic.twitter.com/tIIwuC9Mdk
பகீர்
மேலும், கப்பலில் இருந்தே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் மாலுமிகள் சங்கம் பகிர்ந்துள்ளது. அதில், கப்பலை சுற்றியுள்ள பகுதியில் புகை மேகங்கள் சூழ்ந்து இருப்பது தெளிவாக தெரிகிறது. இது அப்பகுதியில் எவ்வளவு தீவிரமாக தாக்குதல் நடந்து வருகிறது என்பதையே காட்டுவதாக உள்ளது. 13 இந்தியர்கள் சிக்கியிருப்பது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமோ, சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனமோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் வெளியிடவில்லை.
செங்கடல்
சர்வதேச அளவில் முக்கியமான வர்த்தக ரூட்களில் ஒன்றாக கருங்கடல் இருந்து வருகிறது. ஆனால், இந்த பகுதியில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம் சரக்கு கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications
