இந்தோனேசியா சிறையில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து.. தூங்கிக் கொண்டிருந்த 41 கைதிகள் உடல் கருகி பலி!
ஜகார்தா: இந்தோனேசியா நாட்டின் பாண்டன் மாகாணத்தில் அமைந்துள்ள சிறையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 41 பேர் பலியாகியுள்ளனர், அதேபோல பலர் காயமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தோனேசியா ஏற்கனவே பல சிக்கல்களை எதிர்கொண்டு இருந்தது. இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனாவால் இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாகவே மருத்துவமனைகள் நிரம்பின.
இந்தச் சூழலில் இப்போது அங்கு மற்றொரு மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 41 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சிறையில் தீ விபத்து
இந்தோனேசியாவின் பான்டென் மாகாணத்தில் உள்ளது தங்கெராங்க சிறைச்சாலை. போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட மோசமான குற்றங்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்கள் இந்த சிறையில் தான் அடைக்கப்படுவார்கள் இந்த சிறையில் இந்தோனேசிய நேரப்படி அதிகாலை 2 முதல் 3 மணிக்குப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

41 பேர் பலி
இந்த தீ விபத்தில் குறைந்தபட்சம் 41 கைதிகள் உயிரிழந்தனர். அதேபோல எட்டு கைதிகளுக்கு மோசமான தீக்காயமும் 72 கைதிகளுக்கு லேசான தீக்காயமும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து என்பதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 பேருக்கு மோசமான தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்திற்கு என்ன காரணம்
தீ விபத்து ஏற்பட்ட அந்த குறிப்பிட்ட பகுதியில் 40 கைதிகளை மட்டுமே அடைத்திருக்க வேண்டும். ஆனால் இடப்பற்றாக்குறை காரணமாக சுமார் 120 பேர், அதாவது மூன்று மடங்கு அதிகமாகக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த போலீசார், விசாரணை தொடர்ந்து நடத்தப்படும் என்றும் கூறினர். அதிகபட்சமாக 600 பேரை மட்டுமே அடைக்கும் வகையில் இந்த சிறை வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தீ விபத்து ஏற்படுவதற்கு முன் இதில் 2000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம்
அதேபோல ஒட்டுமொத்த சிறைக்கு வெறும் 15 அதிகாரிகள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் தீ விபத்து ஏற்பட்டதும் சரியான நேரத்தில் கைதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தோனேசியா நிலைமை
இந்தோனேசிய சிறைகளில் இடப்பற்றாக்குறையும் மோசமான சுகாதார சூழலும் நிலவுவதாக நீண்ட காலமாகப் புகார்கள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் கைதிகள் அடைக்கப்படுவதால், சிறையில் இருந்து தப்பிக்கும் நிகழ்வுகளும் அடிக்கடி நடைபெறுகிறது. அக்து கடந்த 2019ஆம் ஆண்டு சுமத்ராவின் ரியாவ் மாகாணத்தில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரம் மற்றும் தீ விபத்து காரணமாகக் குறைந்தது 100 கைதிகள் தப்பிச் சென்றனர். அதேபோல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு இடப்பற்றாக்குறை காரணமாக 29000 பேரை அந்நாட்டு அரசே விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications