• search

கொரியப் போர்: 67 ஆண்டுக்குப் பின் மகனைக் காண வடகொரியா சென்ற 92 வயது தாய்

By Bbc Tamil
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  கொரிய போரில் (1950-1953) பிரிந்த உறவுகளை காண தென் கொரியாவில் இருந்து ஒரு வயதானவர்களை கொண்ட குழு ஒன்று வடகொரியா சென்றது .

  கொரிய தீபகற்பத்தில் நடந்த போர் மக்களை பிரித்தது. வட கொரியாவில் உள்ள மக்கள் வெளியேறவே முடியாமல் அவதிப்பட்டனர்.

  1953-க்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையில் முறைப்படியாக போர் முடிவுக்கு வரவில்லை. இதற்கு முன்பும் இரண்டு நாடுகளும் பிரிந்தவர்கள் சந்திக்கும் நிகழ்வை நடத்தி வந்தன. ஆனால் கடந்த மூன்று வருடங்களில் இப்போதுதான் இச்சந்திப்பு முதல்முறையாக நடந்துள்ளது.

  இந்நிகழ்வில் பங்கேற்க குலுக்கல் முறையில் தென் கொரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஒருவரின் வயது 101.

  இந்த சந்திப்பு மிகவும் சுருக்கமானது. தங்கள் உறவுகளை இரு நாட்டில் இருப்பவர்களும் மீண்டும் பார்ப்பார்களா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

  இந்த சந்திப்பில் கலந்து கொள்பவர்கள் யார்?

  வடகொரியாவில் இருந்து 83 பேரும், தென் கொரியாவில் இருந்து 89 பேரும் இதில் பங்கெடுக்கின்றனர்.

  இரண்டு நாடுகளில் இருந்தும் தலா நூறு பேர் முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால், அதில் சிலர் தங்களது உறவுகள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என நம்பியதால் நிகழ்வில் கலந்து கொள்ளப்போவதில்லை என முடிவு செய்தனர்.

  முன்னதாக தென் கொரியாவில் இருந்து கிளம்பும் முன், 92 வயது மூதாட்டி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கொரிய போர் முடிந்த காலகட்டத்தில் இருந்து, அதாவது 67 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகனை பார்க்கப்போவதாக கூறினார்.

  லீ கியும் சியோம் தனது மகனை அவனது நான்கு வயதில் பிரிந்தார். '' இந்த நாள் வரும் என நான் கனவிலும் நினைத்ததில்லை. என் மகன் உயிருடன் இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது'' என ஏ எஃப் பி செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியுள்ளார். பிறகு அவர் தமது மகனை திங்கள்கிழமை சந்தித்த படங்கள் வெளியாகின.

  ''எனக்கு 90 வயதுக்கு மேலாகிவிட்டது. எப்போது நான் இறப்பேன் என்பது எனக்குத் தெரியாது'' என ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் கூறிய மூன் ஹியுன்-சூக், தனது தங்கைகளைப் பார்க்க வடகொரியாவுக்கு பயணம் சென்றுள்ளார்.

  ''இம்முறை நான் தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தற்போது நான் காற்றில் மிதக்கிறேன்'' என்கிறார் அவர்.

  ஏன் இந்தச் சந்திப்புகள் முக்கியமானவை?

  பல வருடங்களாக, இரு தரப்பு மத்தியில் ஓரளவு அமைதியான நிலை நீடித்துவந்தபோது, இரு கொரிய நாடுகளும் தங்கள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களை அவர்களது உறவுகளை சந்திக்க ஏற்பாடு செய்துதந்தன. கடந்த 18 வருடங்களில் இதுவரை 20 சந்திப்புகள் நடந்துள்ளன.

  உறவுகளோடு மீண்டும் இணையும் நிகழ்வுகளில் கடந்த காலத்தில் அண்ணன், தங்கை மற்றும் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் சந்தித்துக்கொண்டனர். அப்போதெல்லாம் இரு தரப்பும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தார்கள்.

  ஆனால் போர் முடிந்து நெடுங்காலம் ஆகிவிட்டதால், இச்சந்திப்புகளில் மிக நெருங்கிய குடும்ப உறவுகள் சந்தித்துக்கொள்ள முடியவில்லை. இம்முறை பெற்றோர் - குழந்தை போன்ற அதிநெருங்கிய குடும்ப உறவுகளில் ஏழு பங்கேற்பாளர்கள்தான் உள்ளனர். மற்றவர்கள் உறவினர்களை சந்திக்கவே வடகொரியா செல்கிறார்கள்.

  எப்படி நடக்கும் இச்சந்திப்பு?

  தென் கொரியர்கள் பேருந்து மூலமாக, ஆபத்தான எல்லை வழியாக மவுன்ட் கும்கங் சுற்றுலா ரிசார்டுக்குச் சென்றனர்.

  அவர்கள் வடகொரியாவில் மூன்று நாள்கள் செலவிடுவார்கள். ஆனால் தங்களது உறவினர்களை தினமும் சில மணி நேரங்கள் மட்டுமே சந்திக்க முடியும். மொத்தமாக 11 மணிநேரங்கள் மட்டுமே அவர்கள் சந்திப்பு நடக்கும். அவர்களது பெரும்பாலான சந்திப்புகள் மிகக்கடுமையாக கண்காணிக்கப்படும்.

  தென்கொரியாவில் இருந்து செல்பவர்கள் துணிகள் முதலான பரிசுப் பொருள்கள், மருந்துகள் மற்றும் தங்களது உறவினர்களுக்கு உணவுகள் போன்றவற்றை வடகொரியா எடுத்துச்சென்றுள்ளனர்.

  தனது அண்ணனை பார்க்கச் சென்றுள்ள 76 வயது லீ சூ-நம் முன்னதாக தென்கொரியாவில் இருந்து கிளம்பும்போது '' செரிமான மருந்துகள், தலைவலி மாத்திரைகள், ஊட்டச்சத்து மருந்துகள் உள்ளிட்ட வீட்டில் இருக்கவேண்டிய மருந்துகள் மற்றும் தினசரி தேவைகள் போன்றவற்றை அவருக்காக எடுத்துச் செல்லவுள்ளேன்'' என ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

  வயதானவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள செல்வதால் அவசர மருத்துவ மையத்தை அமைப்பதற்காக பல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் இக்குழுவுடன் வடகொரியா சென்றுள்ளனர்.

  தென் கொரிய முதியவர்
  EPA
  தென் கொரிய முதியவர்

  சந்திப்பில் கலந்து கொள்ளாதவர்கள்?

  கொரிய போரை பொறுத்தவரையில் மில்லியன் கணக்கிலான மக்கள் பிரிந்துள்ளனர். லட்சக்கணக்காண மக்கள் தென் கொரியாவில் இன்னமும் உயிரோடு உள்ளனர். அவர்கள் இந்த சந்திப்புகளில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் தங்களது உறவினர்களை தொடர்புகொள்ள அவர்களுக்கு வேறு வழிகள் உள்ளன.

  கொரிய நாடுகளுக்கு இடையேயான பிரிந்த குடும்பங்கள் சங்கம் மற்றும் கொரிய செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் மெய்நிகர் மறு இணைவு நிகழ்ச்சி அல்லது முகத்துக்கு முகம் பார்த்து சந்திக்க முன்பு ஏற்பாடு செய்துள்ளன.

  பிரிந்த குடும்பங்கள் கடிதங்களை பரிமாறிக்கொள்ள முடியும்; நேரலையாக காணொளி மூலம் சந்திக்கமுடியும் அல்லது கொரியாவுக்கு வெளியே வசிப்பவர்களை மூன்றாவது நாட்டில் வைத்து குடும்ப சந்திப்புகளை வைத்துக்கொள்ளமுடியும். இது போன்ற சமயங்களில் தென்கொரிய அரசு பயணம் மற்றும் தங்குதல் செலவுகளை ஏற்றுக்கொள்ளும்.

  தென் கொரிய முதியவர்
  EPA
  தென் கொரிய முதியவர்

  சில பிரிந்த குடும்பங்கள் சீன தரகர்கள் வழியாக வடகொரியாவில் உள்ள தங்களது குடும்பத்தினரை தொடர்புகொள்ள தனி வழியை பயன்படுத்திவருகின்றனர்.

  அதிகாரபூர்வமற்ற சந்திப்புகளுக்கு சுமார் 1500 டாலர்கள் செலவாகும், ஆனால் இந்த முறை வேகமானதாகவும், இரு கொரிய நாடுகளுக்கு இடையேயான அரசியல் நிலவரத்தை குறைவாக சார்ந்திருக்க வேண்டியதாகவும் இருக்கும்.

  தற்போதைய சந்திப்பு எப்படி நடக்கிறது?

  செஞ்சிலுவை சங்கம் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தென் கொரிய அதிபர் முன் ஜே-இன் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் இடையே நடந்த வரலாற்று சந்திப்பின் விளைவாக இச்சந்திப்பு நடக்கிறது.

  இரு நாட்டுத்தலைவர்களும் கடந்த மே மாதம் இரண்டாவது முறையாக சந்தித்துக் கொண்டனர். அதில் குடும்பங்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒப்புக்கொண்டனர். வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்ததில் தென் கொரியா முக்கியப் பங்கு வகித்தது.

  கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்தபோது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக்க நடவடிக்கைகள் எடுப்பதாக வடகொரியா வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.


  BBC Tamil
  English summary
  Lee Keum-seom and her son became separated during the Korean war in the 1950s. He was only four years old at the time.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற