பிரேசிலில் சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!
போர்ட்டாலிசா: பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அம்மாநாட்டுக்கு வருகை தந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு வர்த்தகம், எல்லை விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாடு பிரேசிலில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இம்மாநாட்டுக்கு வருகை தந்த சீனா அதிபர் ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இருவரும் சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்பேச்சுவார்த்தைகளின் போது எல்லையில் சீனா மேற்கொள்ளும் ஊடுருவல்கள் குறித்த கவலையை பிரதமர் மோடி தெரிவித்தார். அதன் பின்னர் கைலாஸ்- மானசரோவர் யாத்திரைக்கான மாற்றுவழி குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும் இருதரப்பு வர்த்தகம் தொடர்பாகவும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் சீனா அதிபர் ஜின்பிங்கை நரேந்திர மோடி சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.