அமெரிக்க பேமென்ட் சிஸ்டத்திற்கு செக்.. காமன்வெல்த் நாடுகள் மூலம் காய் நகர்த்தும் ரஷ்யா
மாஸ்கோ: பிரிக்ஸ் அமைப்பில் இல்லாத நாடுகளுக்கும் பாதுகாப்பான பண பரிவர்த்தனை முறைமைகளை அணுகும் வாய்ப்பு வழங்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்திருக்கிறது.
அமெரிக்கா தனது கரன்சியான டாலரை முன்னிலைப்படுத்தி சர்வதேச வர்த்தகத்தில் காய் நகர்த்தி வரும் நிலையில், சொந்த கரன்சியில் வர்த்தகம் என்கிற யோசனையை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது.

சர்வதேச அளவில் தற்போது பொருளாதார யுத்தம் வெடித்திருக்கிறது. தனது எதிரி நாடுகளுக்கு அமெரிக்கா கண்டபடி வரியை போட்டு தள்ளியிருக்கிறது. பதிலுக்கு மற்ற நாடுகளும் அமெரிக்கா மீது பதில் வரியை போட்டிருக்கிறது. இப்படியாக பொருளாதார யுத்தம் வெடித்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக பிரிக்ஸ் அமைப்பு, தனது இருப்பை உறுதி செய்ய முயன்று வருகிறது. குறிப்பாக சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்ய பிரிக்ஸ் தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கெனவே பிரிக்ஸ் நாடுகள் மத்தியில் அவரவர் சொந்த கரன்சியில் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. உதாரணமாக சீனா-ரஷ்யா இடையேயும், சில சமயம் இந்தியா-ரஷ்யா இடையேயும் சொந்த கரன்சியில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இவை எல்லாம் பிரிக்ஸ் அமைப்பில் இருக்கும் நாடுகள். எனவே தற்போது பிரிக்ஸ் அமைப்பில் இல்லாத நாடுகளையும் சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்ய ரஷ்யா தூண்டி வருகிறது.
குறிப்பாக காமன்வெல்த் அமைப்பில் இருக்கும் நாடுகள் சொந்த கரன்சியில் வர்த்தகம் மேற்கொள்ள ரஷ்யா ஊக்குவித்து வருகிறது. சமீபத்தில் கஸக்ஸ்தானின் அல்மாட்டி நகரில் காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவு செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் பங்கேற்றிருந்தார். அங்கு உரையாற்றிய அவர்,
"ரஷ்யாவுக்கும், காமன்வெல்த் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 85% அளவுக்கு சொந்த நாணயத்தில் வளர்ந்திருக்கிறது. இனி வரும் நாட்களில் பிரிக்ஸ் அமைப்பில் இல்லாத நாடுகளுக்கும் பாதுகாப்பான பண பரிவர்த்தனை முறைமைகளை அணுகும் வாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் மேலை நாடுகளின் பண பரிவர்த்தனை முறையை பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். இது தேவையற்ற கட்டணங்களை குறைக்கும்" என்று கூறியுள்ளார்.
ஸ்விப்ட் (SWIFT) என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்தும் பண பரிவர்த்தனை முறையாகும். இதில் இந்த நாடுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே இதற்கு மாற்றாக மாற்று பண பரிவர்த்தனை முறையை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. இதில் கட்டணம் குறைவு. இதை அனைத்து பிரிக்ஸ் நாடுகளுக்கும் பரப்ப ரஷ்யா முடிவெடுத்திருக்கிறது. இந்நிலையில்தான் பிரிக்ஸ் நாடுகள் மட்டுமல்லாது, மற்ற நாடுகளும் அதை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று லாவ்ரோவ் தெரிவித்திருக்கிறார்.
இது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications