ரஷ்ய ராணுவத்தை விட மாட்டோம்! கீவ்வை கைப்பற்ற நினைக்கும் கனவு பலிக்காது.. உக்ரைன் மக்கள் ஆவேசம்
கீவ்: ‛‛தலைநகர் கீவ்வை கைப்பற்ற நினைக்கும் ரஷ்யாவின் கனவு பலிக்காது. இங்கு வரும் ரஷ்ய ராணுவத்தினர் கொல்லப்படுவார்கள்'' என உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் வசிக்கும் மக்கள் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா போர் துவங்கியது முதல் அதன் ராணுவ நடவடிக்கைகளை உக்ரைனும் திறமையாக சமாளித்து வருகிறது. ரஷ்ய ராணுவத்தை ஒப்பிடும்போது உக்ரைனின் ராணுவம் மிகவும் சிறியது. ஆயுத பலமும், ரஷ்யாவை விட குறைவாகவே உள்ளது.
இதனால் தாய்நாட்டை காக்க உக்ரைன் பொதுமக்களும் கையில் ஆயுதங்கள் ஏந்தி ரஷ்ய படைகளை எதிர்த்து வருகின்றனர்.

திட்டம் பலிக்கவில்லை
தலைநகர் கீவ் நகரை கைப்பற்றி உக்ரைனை தங்களது கட்டுப்பாட்டில் எடுக்க ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் திட்டமிட்டு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் எதிர்பார்த்ததை விட புதினுக்கு இது கடினமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதாவது போர் தொடுத்த 3 நாளுக்குள் கீவ் நகரை கைப்பற்ற ரஷ்யா தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த திட்டம் பலிக்கவில்லை. இன்று 4வது நாள் ஆனபோதிலும் கீவ் நகரை ரஷ்யா கைப்பற்றவில்லை.

தடைகள்
இதற்கு முக்கிய காரணமாக உக்ரைன் ராணுவம், மக்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு என்று கூறப்படுகிறது. தொடர்ச்சியாக அவர்கள் ரஷ்யா படைகள் முன்னேறுவதை தடுத்து வருகின்றனர். மேலும் ரோட்டில் ஆங்காங்கே தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். இது ரஷ்ய ராணுவத்தின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக உள்ளன. இதனால் ரஷ்யாவின் திட்டமிட்ட செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் படிப்படியாக கீவ் நகரை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

ஆக்ரோஷத்துடன் சண்டை
இந்நிலையில் கீவ் புறநகரில் பொதுமக்களுக்கு ஆயுதம் வழங்கும் ராணுவ மையத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. ஆயுதத்தை பெற்று கொண்ட ஐடி நிறுவன ஊழியர் ரோமானோவ் கூறுகையில், ‛‛ரஷ்ய படை இங்கு வந்தால் கொல்லப்படுவார்கள். இங்குள்ள மக்கள் அனைவரும் ஆயுதங்கள் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும் கோபத்தின் உச்சத்தில் உள்ளோம். ஆக்ரோஷத்துடன் சண்டைக்கு தயாராக உள்ளனர். எங்களை தாண்டி அவர்கள் கீவ் நகரை கைப்பற்ற வாய்ப்பு இல்லை. உக்ரைனுக்கே வெற்றி'' என்றார்.

சிம்ம சொப்பனம்
மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றும் அலெக்ஸ் கூறுகையில், ‛‛ரஷ்ய ராணுவத்தினர் இன்று இரவு கீவ் நகரை அடையலாம். அவர்கள் கீவ் நகரை ஆக்கிரமிக்க முயன்றால் அனைத்து தெருக்களிலும் போராடுவோம். அது அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறிவிடும். கீவ் நகரை கைப்பற்ற நினைக்கும் அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது‛‛ என்றார். இருப்பினும் ரஷ்ய ராணுவம் இன்று இரவு, இல்லாவிட்டால் நாளைக்குள் கீவ் நகருக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications