For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூயஸ் கால்வாய் குறுக்கே சிக்கிய பிரம்மாண்ட கப்பல்.. உலக வர்த்தகம் பாதிக்கும் அபாயம்!

Google Oneindia Tamil News

கெய்ரோ: உலகின் பிரம்மாண்ட கப்பல்களில் ஒன்றான எவர் கிரீன்(Ever green) என்னும் கப்பல் சூயஸ் கால்வாயின் நடுவே சிக்கிக் கொண்டது.

இந்த கால்வாய் வழியாக செல்ல இருந்த பல நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் போக வழியின்றி ஆங்காங்கே நிற்பதால் கடலில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.

இதனால் உலக வர்த்தக, பொருளாதார சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம் நிலவுகிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வர்த்தகத்துக்கு உதவும் சூயஸ் கால்வாய்

வர்த்தகத்துக்கு உதவும் சூயஸ் கால்வாய்

எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதையில் ஒன்றாகும். மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கால்வாய் 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்டது. குறிப்பாக ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக விளங்கி வருகிறது சூயஸ் கால்வாய். இந்த கால்வாய் மட்டும் இல்லை என்றால் ஆசியாவில் இருந்து ஆப்பிரிக்கா வழியே ஐரோப்பாவுக்கு செல்ல சுமார் 34 நாட்கள் பயணம் செய்ய வேண்டியதிருக்கும்.

கால்வாய் நடுவே சிக்கிய பிரமாண்ட கப்பல்

கால்வாய் நடுவே சிக்கிய பிரமாண்ட கப்பல்

ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 15,000 கப்பல்கள் இந்த சூயஸ் கால்வாயை கடந்து செல்கின்றன. இப்படி எந்த நேரமும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் சூயஸ் கால்வாயில் தற்போது சாலைகளில் ஏற்படுவதுபோல் டிராபிக் ஜாம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுதான் இப்போது பேசும் பொருளாக உள்ளது. உலகின் பிரம்மாண்ட கப்பல்களில் ஒன்றான எவர் கிரீன்(Ever Green) என்னும் கப்பல் கால்வாயின் நடுவே சிக்கிக் கொண்டதுதான் இப்போது எழுந்திருக்கும் பிரச்சினைக்கு மூல காரணம்.

எமனாக வந்த சூறாவளி காற்று

எமனாக வந்த சூறாவளி காற்று

சுமார் 400 மீட்டர் நீளத்துடன், 59 மீட்டர் அகலத்துடன் குட்டி நகரத்தைப்போல் பிரம்மாண்டமாக காணப்படும் எவர் கிரீன், சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான கன்டெய்னர்களுடன் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நோக்கி புறப்பட்டது. மலேசியா வழியாக வந்த எவர் கிரீன் 22-ம் தேதி எகிப்திலுள்ள சூயஸ் கால்வாயை வந்தடைந்தது. மார்ச் 23-ம் தேதி அங்கு இருந்து புறப்பட்டு இலக்கை நோக்கி சமத்தாக சென்று கொண்டிருந்த எவர் கிரீன் கப்பலுக்கு எமனாக வந்து சேர்ந்தது திடீரென ஆவேசத்துடன் வீசிய சூறாவளி காற்று.

கால்வாய் இருபுறம் சிக்கியது

கால்வாய் இருபுறம் சிக்கியது

இந்த பேய் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாத எவர் கிரீன் கடைசியில் காற்றிடம் சரணடைந்தது. கட்டுப்பாட்டை இழந்த கப்பல் கால்வாயின் கால்வாயின் குறுக்கே நகர முடியாமல் சிக்கிக் கொண்டது. அதாவது கப்பலின் முன்பகுதி கரையின் ஒரு புறத்திலும், கப்பலின் பின் பகுதி கரையின் மறுபுறமும் தொட்டு சாலையின் நடுவே குறுக்காக நிற்கும் லாரியைபோல் கால்வாயின் குறுக்கே சிக்கிக் கொண்டது எவர் கிரீன்கப்பல்.

வர்த்தகம் பாதிக்கும் அபாயம்

வர்த்தகம் பாதிக்கும் அபாயம்

இதனால் கப்பலின் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கப்பலில் இருந்து எண்ணெய் கசிவும் ஏற்படவில்லை. ஆனால் இந்த கால்வாய் வழியாக செல்ல இருந்த பல நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் போக வழியின்றி ஆங்காங்கே நிற்பதால் கடலில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு மில்லியன் பீப்பாய் எண்ணெய் இந்த கால்வாய் வழியே எடுத்துச் செல்லப்படும் நிலையில் போக்குவரத்து முடங்கி உள்ளதால் உலக வர்த்தக, பொருளாதார சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம் நிலவுகிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயமும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

செயற்கைக்கோள் படம்

செயற்கைக்கோள் படம்

கால்வாயின் நடுவே சிக்கியுள்ள கப்பலை திருப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பல இழுவைப் படகுகள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி கோப்பர்நிக்கஸ் சென்டினல் -2 செயற்கைக்கோள் படம் கப்பல் கால்வாயின் குறுக்கே சிக்கியுள்ளதை தெளிவாக காட்டுகிறது.உலகின் பொருளாதாரம் முடங்கும் வகையில் சிக்கியுள்ள இந்த கப்பல் எப்போது மீட்கப்படும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

English summary
One of the world's largest ships, the Evergreen, is stranded in the middle of the Suez Canal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X