எம்.ஹெச்.370-ல் சகோதரர்,எம்.ஹெச்.17-ல் வளர்ப்பு மகள்: பறிகொடுத்த பெண்ணின் சோகம்
கோலாலம்பூர்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மாயமான எம்.ஹெச்.370-ல் தனது சகோதரரை இழந்த சோகம் மறைவதற்குள் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்.ஹெச்.17 விமானத்தில் தனது வளர்ப்பு மகளை பறிகொடுத்துள்ளார்.
இந்த துயரச்சம்பவம் அந்தப் பெண்ணின் உறவினர்களிடையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கைலேன் மன் என்பவரின் சகோதரரும், அவரது மனைவியும் கடந்த மார்ச் மாதம் நடுவானில் காணாமல் போன மலேசிய விமானம் எம்.ஹெச்.370-ல் பயணம் செய்துள்ளனர். அவர்களின் கதி என்ன ஆயிற்று என்று அறியமுடியவில்லை. சகோதரரை இழந்துவிட்ட அதிர்ச்சியில் இருந்து முழுமையாக மீள்வதற்குள், உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதலுக்கு எம்.ஹெச்.17 விமானம் உள்ளானது என்ற தகவல் மீளாத் துயரத்தைத் தந்துள்ளது.
உக்ரைனில் நொறுங்கி விழுந்த அந்த மலேசிய விமானத்தில்தான் கைலேன் மன்னின் வளர்ப்பு மகள் மாரே ரிஸ்க் பயணித்திருக்கிறார். அந்த விமானத்தில் உயிரிழந்த 298 பேரில் அவரும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.
மன்னின் வளர்ப்பு மகள் ரிஸ்க்கும், அவரது கணவர் அல்பர்டும் தங்களது நான்கு வாரச் சுற்றுலாவை முடித்துவிட்டு ஐரோப்பாவிலிருந்து அந்த விமானத்தில் சொந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த மிகப் பெரிய சோகம் ஏற்பட்டது.
"தங்களது குடும்பம் துரதிஷ்டவசமாக எப்படி இரு கொடூரமான சம்பவங்களில் சிக்கியது என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறோம்" என்று மன்னின் மற்றொரு சகோதரரான க்ரேக் புர்ரோஸ் வருத்தத்துடன் பேசினார்.
"நாங்கள் மீண்டும் எங்கள் தைரியத்தை இழந்திருக்கிறோம்" என்றார் அவர். "சமீபத்தில்தான் எங்களுடைய சகோதரரை இழந்தோம். இப்போது என் சகோதரியின் வளர்ப்பு மகள்..." என்று கண்ணீர் மல்க கூறினார்.
இதுகுறித்து, அவர்களின் குடும்ப நண்பர் ஃப்ல் லித்கோவ் கூறுகையில், "அவர்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களைப் பற்றி ஒரு அவதூறு வார்த்தையைக்கூட கேட்க முடியாது" என்று கூறியுள்ளார்.
சகோதரரையும், வளர்ப்பு மகளையும் அடுத்தடுத்து இழந்த அந்த ஆஸ்திரேலிய பெண்ணின் துயரத்தை எப்படி துடைப்பது என்று அறியாமல் தவிக்கின்றனர் உறவினர்கள்.