For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்கள் பற்றி என் கணவரின் பேச்சு முறையற்றது!- மனம் திறந்தார் ட்ரம்ப் மனைவி!

By Shankar
Google Oneindia Tamil News

நியூயார்க் (யு.எஸ்): அதிபர் தேர்தலை புரட்டிப் போட்ட சர்ச்சை வீடியோவில் பெண்கள் பற்றிய ட்ரம்பின் வார்த்தைகள் முறையற்றவை என்று அவரது மனைவி மெலனியா தெரிவித்துள்ளார்.

சிஎன்என் தொலைக்காட்சியின் ஆண்டர்சன் கூப்பருக்கு அளித்த பேட்டியில், "அந்த பஸ்ஸில் நிகழ்ச்சித் தொகுப்பாளருடன் எண் கணவர் பேசியது முற்றிலும் ஆண்கள் பேச்சு. நான் அறிந்த என் கணவர் அப்படிப்பட்ட செயல்கள் செய்யக்கூடியவர் அல்ல.. பெண்கள் பற்றி அவர் அத்தகைய எண்ணங்கள் கொண்டவரில்லை. பெண்கள் பற்றி ஆண்களின் அதீத கற்பனைகளுடன் கூடிய கனவுப் பேச்சு போன்றது.

Trump's wife defends her husband

அந்த பஸ்ஸில் காமிரா ஏதும் இல்லை. காலர் மைக் மட்டும் தான் இருந்தது. அது பதிவு செய்து கொண்டிருக்கிறதா என்று கூட அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. உடன் பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளர் தான் கணவரிடம் அசிங்கமான பேச்சை ஆரம்பித்து, அவருடைய வாயைக் கிளறியிருக்கிறார். ஆண்பிள்ளைகள் பெண்களைப் பற்றி அந்தரங்கமாக பேசிக்கொள்வது போல் பேசியிருக்கிறார்கள். ஆனாலும் அவர் கூறிய வார்த்தைகள் ஏற்புடையதல்ல. நான் அதிர்ச்சி அடைந்தேன் என்றும் கூறியுள்ளார்.

எதிர்க் கட்சியினரின் சதி

பாலியல் ரீதியாக தங்கள் உடன்பாடு இல்லாமல் அணுகினார் என்று உங்கள் கணவர் மீது பெண்கள் புகார் கூறியுள்ளார்களே என்ற கேட்கப்பட்டது. அது எதிர்க் கட்சியினரின் சதி. புகார் கூறிய பெண்களின் பின்னணி பற்றி யாராவது விசாரித்தார்களா?. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை.

பெண்கள் அவரிடம் அணுக முயன்றபோது, விலகி வந்ததை நான் அறிவேன். போன் நம்பர்களைக் கொடுத்து, வேலை செய்ய விரும்புவதாக தேவையில்லாமல் மிக அருகாமையில் வந்து பெண்கள் பேசும் போதெல்லாம் உடனடியாக விலகி வந்து விடுவார். நான் நேரடியாகவே பார்த்து இருக்கிறேன். அவர் திருமண்மானவர் என்பது தெரிந்தே அந்த பெண்கள் அணுகினர்.

என் கணவர் மீது பெண்கள் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அரசியல் ரீதியாக பழிவாங்குகிறார்கள்

அதிபர் தேர்தல் களவாடப்பட்டுள்ளது

ஊடகங்கள் நேர்மையாக நடக்காமல், ஒரு தலைப் பட்சமாக எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். என் கணவர் கூறுவதைப் போல் இந்த அதிபர் தேர்தலை எதிர்க் கட்சியினர் கபளீகரம் செய்து விட்டனர்.

அமெரிக்க எல்லைகளை அத்து மீறி கடந்து வருபவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும். அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படவேண்டும். வேலை வாய்ப்புகளை திரும்பவும் அமெரிக்காவுக்குள் கொண்டு வரவேண்டும். என் கணவர் இவற்றைச் செய்து முடிப்பார். அவருக்கு பொருளாதாரம் தெரியும், அவர் ஒரு போராளி. எதையும் எளிதில் விட்டுவிட மாட்டார். கடைசி வரை போராடி வெற்றி பெறுவார். அமெரிக்க மக்களுக்காக இறுதி வரையிலும் போராடுவார்.

என்னைப் பற்றி யாருக்கும் தெரியாது. நான் மன உறுதி படைத்தவள், அய்யோ பாவம்

மெலனியா என்றெல்லாம் சிலர் பேசுகிறார்கள் , எனக்காக வருத்தப்படத் தேவையில்லை. அனைத்தையும் நான் தைரியமாக எதிர்கொள்வேன்," என்று பஞ்ச் டயலாக் போல் முத்தாய்ப்பாக கூறினார்.

மிஷல் ஒபாமாவின் பேச்சு பெண்களிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ள நிலையில், தான் அதற்கு மறுப்பு பேசினால் சரியாக இருக்காது என்று, மனைவியைக் கொண்டே அதை சமாளிக்கும் வித்தையை ட்ரம்ப் கையாள்கிறார்.

ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாக இருக்கிறது என்று குற்றம் சாட்டிவருகிறார் ட்ரம்ப். அவருடைய மனைவியை மிகப்பெரிய ஊடகமான சி.என்.என் தொலைக்காட்சிதான் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் மனைவி மெலனியாவின் பேச்சு யதார்தமாகவும், ட்ரம்பின் வார்த்தைகளுக்கு வக்காலத்து வாங்காமல் இருப்பதாலும், அவர் மீது இரக்கம் ஏற்பட்டு கொஞ்சம் பெண்களையாவது ட்ரம்ப் பக்கம் இழுக்கக் கூடும்.

-இர தினகர்

English summary
Trump's wife Melania has defended her husband's speech about women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X