For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்தம்பித்தது அமெரிக்க அரசு: பட்ஜெட் ஒதுக்கீடு இல்லாததால் அரசு வேலைகள் நிறுத்தம்,தற்காலிக ஆட்குறைப்பு

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன் (யு.எஸ்).: குடியரசுக் கட்சியின் தொடர் பிடிவாதம காரணமாக பட்ஜெட் ஒதுக்கீடு நடக்காததால் அமெரிக்க அரசே ஸ்தம்பித்துள்ளது. அரசு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்திய அரசியல்வாதிகளுக்கு எந்த வகையிலும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பது போல், அமெரிக்க எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களின் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். இதனால் இங்கு நாடாளுமன்றம் முடங்கியது போல, அமெரிக்க அரசாங்கமும் முடங்கிப் போயுள்ளது.

சுமார் 3.3 மில்லியன் அரசு ஊழியர்கள் தற்காலிகமாக வேலை இழந்துள்ளார்கள். மீண்டும் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும் வரை இவர்களுக்கு சம்பளம் கிடையாது. கட்டாய விடுப்பில் இருக்க வேண்டும். ராணுவத்தினர் உட்பட அத்தியாவசிய பணியிலிருக்கும் ஊழியர்களுக்கு, பட்ஜெட் ஒதுக்கீட்டுக்கு பிறகுதான் சம்பளம் கிடைக்கும்.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

ஒரளவு மீண்டு வந்து கொண்டிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவாக இந்த முடக்கம் இருக்கும். முன்னதாக நேற்று பங்கு சந்தையிலும் இதன் தாக்கம் தெரிந்தது. பங்குகள் விலை சரிந்தன. இன்று உலக அளவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடையும் எனவும் கருதப்படுகிறது.

பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திய ஒபாமா

பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திய ஒபாமா

ஈராக், ஆப்கானிஸ்தான் போரைத் தொடர்ந்து படு பாதாளத்தை நோக்கி போய் கொண்டிருந்த அமெரிக்க பொருளாதாரத்தை, அடுத்து பதவியேற்ற அதிபர் ஒபாமா வீழ்ச்சியை தடுத்தி நிறுத்தி மீண்டும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு வந்தார். வாகன தொழில் துறையை நிலை நிறுத்திய பிறகு, மற்ற முக்கிய தொழில்களிலும் கவனம் செலுத்தினார். அமெரிக்க வீழ்ச்சியின் அடையாளமாகக் கருதப்பட்ட கட்டுமானம் தொடர்பான தொழில்களும் எழுச்சி பெற்றன.

முன்பு சில ஆயிரம் டாலர்களுக்கு வீடுகள் கிடைத்தது போய், தற்போது வீடுகள் விலை விண்ணைத் தொடும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. டெக்சாஸ் உள்ளிட்ட லத்தீன் இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களிலேயே கூட கட்டுமான தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

என்னதான் பிரச்சனையப்பா?

என்னதான் பிரச்சனையப்பா?

பொருளாதாரம்தான் மீண்டு கொண்டு இருக்கிறதே பின்னர் என்னதான் பிரச்சனை? முதன் முதலாக கறுப்பினத்தை சார்ந்த ஒருவர் அதிபர் ஆனது தான் முதல் பிரச்சனை. அதிபர் ஒபாமாவின் முதல் பதவிக் காலம் முழுவதும் ‘ஒன் டைம் ஒபாமா' என்ற வெளிப்படையான முழக்கத்துடன் குடியரசுக் கட்சியினர், அவரது அனைத்து முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போட்டு வந்தனர். அதையும் மீறி பொருளாதாரத்தை சீர்படுத்தி மீண்டும் வெற்றி பெற்றார். அவரது முக்கிய தொலை நோக்கு நடவடிக்கைகளில் ஒன்று ‘ மருத்துவ காப்பீடு சீர்திருத்தம்'. அதற்கு ஒபாமாகேர் என்ற பட்டப்பெயரிட்டு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதிபர் தேர்தலிலும் இதை குறிப்பிட்டு பிரச்சாரம் செய்தனர். ஆனால் மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை.

அது என்ன ஒபாமா கேர்?

அது என்ன ஒபாமா கேர்?

மிகப் பெரிய வல்லரசான அமெரிக்காவில், மருத்துவ காப்பீடு இல்லாத குடிமக்கள் பாதிக்கும் அதிகமானவர்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஏழை எளியவர்களால் செலுத்த முடியாத அளவுக்கு மருத்துவ காப்பீட்டு கட்டணம் மிகவும் அதிகம். முக்கியமாக, ஏதாவது மருத்துவ பிரச்சனைகள் இருக்கிறது என்றால் புதிதாக காப்பீடு கொடுப்பதற்கு எந்த நிறுவனமும் முன்வருவதில்லை. அதனால் நோயாளிகள் காப்பீடும் இல்லாமல், மருத்துவமனைக்கு செலுத்த பணமும் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வேண்டும், நோயாளிகளை காப்பீடு நிறுவன்ங்கள் நிராகரிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட மாற்றங்களை உள்ளடக்கியது தான் ஒபாமா கேர் என்றழைக்கப்படும் மருத்தவ காப்பீடு சீர்திருத்த திட்டம்.

எதிர்க்கட்சிகளின் பயம்

எதிர்க்கட்சிகளின் பயம்

ஏற்கனவே ஏழை எளியவர்கள் மற்றும் லத்தீன் இன மக்கள் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு பெரும் ஆதரவு அளித்து வருகிறார்கள். இப்படி ஏழைகளின் வசதிக்காக திட்டம் தீட்டி வெற்றி பெற்று விட்டால், தாங்கள் ஆட்சிக்கு வரவே முடியாது என்பது குடியரசுக் கட்சியினரின் அச்சம். மேலும் ஒரு கறுப்பின அதிபர், வரலாற்று மிக்க சாதனைகளை செய்வதையும் அவர்கள் விரும்பவில்லை.

எதைச் செய்தாலும் குற்றம்

எதைச் செய்தாலும் குற்றம்

குடியரசுக் கட்சியின் அவைத் தலைவர் வெளிப்படையாகவே தொலைக்காட்சியில், அரசை முடங்கச்செய்வதுதான் தங்கள் நோக்கம் என்று பேசியுள்ளார். தற்போது அரசு நிர்வாகத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யவேண்டிய நிலையில், ஒபாமா கேர் திட்டத்தை நிறுத்தினால்தான் பட்ஜெட்டை அனுமதிப்போம் என்று போர்க் கொடி தூக்கியுள்ளார்கள். காங்கிரஸ் சபையில் குடியரசுக் கட்சியினர் இயற்றிய மசோதாவை, செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினர் (மெஜாரிட்டி) நிறுத்தி விட்டனர். ஏட்டிக்கு போட்டியாக பட்ஜெட் மசோதாவை குடியரசுக் கட்சியினர் ஆதரிக்க முடியாது என கை விரித்து விட்டனர்.

இப்படி இரு கட்சியினரும் செய்த அக்கப்போரில், அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் புதிய பட்ஜெட் இல்லாத்தால், அரசு அலுவலர்கள் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பில் க்ளிண்டன் ஆட்சியிலும் முடக்கம்

பில் க்ளிண்டன் ஆட்சியிலும் முடக்கம்

இப்படியொரு நிலையைச் சந்திப்பது அமெரிக்காவுக்கு புதிதில்லை. முன்னதாக பில் க்ளிண்டன் ஆட்சியில் எதிர்க் கட்சியினர் இதைப்போல் அரசை முடக்கி விட்டனர். எதற்கும் அசராத க்ளிண்டன், எதிர்க்நகட்சியினரின் நடவடிக்கையை கண்டு பின் வாங்கவில்லை. 21 நாட்களுக்கு பிறகு பில் க்ளிண்டனிடம், எதிர்க்கட்சிகள் பணிந்தன.

அதைத் தொடர்ந்து வந்த இடைத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களை க்ளிண்டன் சார்பில் ஜனநாயகக் கட்சியினர் வென்றனர். தற்போதைய நடவடிக்கைகளால் மீண்டும் குடியரசுக்கட்சியினர் மீது பொதுமக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு வரும் இடைத்தேர்தலில் ஒபாமா ஆதரவாளர்கள் பெரும் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.

ராம்னி எதிர்ப்பு

ராம்னி எதிர்ப்பு

ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட மிட் ராம்னி, தனது கட்சிக்காரர்களின் நடவடிக்கை முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளார். மக்களிடமிருந்து கட்சி விலகிச் செல்லும் என்றும் எச்சரித்துள்ளார். அவரைப் போல் சில நடு நிலை குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் சமரசத்திட்ட மசோதா ஒன்றை நிறைவேற்ற முயற்சி செய்தனர் . ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்ததால், வாஷிங்டன் நேரப்படி செப்டம்பர் 30ம் தேதி, நள்ளிரவு 12.01 மணி முதல் அமெரிக்க அரசாங்கம் முடங்கிப் போனது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

17 ஆண்டுகளில் இதுபோன்ற மோசமான சூழலை மீண்டும் சந்தித்துள்ளது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The U.S. government began a partial shutdown on Tuesday for the first time in 17 years, potentially putting up to 1 million workers on unpaid leave, closing national parks and stalling medical research projects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X