இருள் சூழும் பாகிஸ்தான்.. கோதுமைக்காக சாக்கடையில் உருண்டு சண்டை போடும் மக்கள்.. பதற வைக்கும் வீடியோ
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உணவுப் பஞ்சம் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியதன் சமிக்ஞையாக, அந்நாட்டு மக்கள் கோதுமையை வாங்குவதற்காக சாக்கடையில் விழுந்து புரண்டு சண்டை போடும் பரிதாப வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பாகிஸ்தானில் அடுத்த ஒரு மாதத்திற்குள் உணவு தானியங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உணவுப்பஞ்சம் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதற்கும், இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கும் கோடிக்கணக்கில் பணம் செலவிட்டதற்கு பதிலாக, தங்கள் நாட்டு மக்கள் நலனுக்கு செலவிட்டிருந்தால் பாகிஸ்தானுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தலைவிரித்தாடும் பஞ்சம்
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரலாறு காணாத மழையும், அதைத்தொடர்ந்து கட்டுங்கடங்காத வெள்ளமும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் கோடிக்கணக்கிலான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்தன. பயிர்சாகுபடி சுமார் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு அந்நாட்டில் பற்றாக் குறை ஏற்பட்டது. இதனால் வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து பற்றாக்குறையை பாகிஸ்தான் அரசு ஈடு செய்து வந்தது.

திவாலாகும் நிலையில் பாகிஸ்தான்
பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பின் மூலம் 2 வாரங்கள் மட்டுமே அந்நாட்டால் உணவு தானியங்களையும் கச்சா எண்ணெய்யையும் இறக்குமதி செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது. இதனால் வெகுசீக்கிரத்தில் பாகிஸ்தான் திவாலாகிவிடும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பொருளாதார நெருக்கடியால் அங்கு உணவுப்பொருட்கள், மண்ணெண்ணெய், காய்கறிகள் ஆகியவற்றின் விலை சாமானிய மக்களால் வாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

பகல் கனவாகும் 2 வேளை உணவு
பாகிஸ்தான் மக்களின் முக்கிய உணவான கோதுமைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. 20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.3,200-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ சர்க்கரை ரூ.175, ஒரு கிலோ வெங்காயம் ரூ.300, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தினமும் 2 வேளை உணவு என்பதே பகல் கனவாக மாறி வருகிறது.

சாக்கடையில் விழுந்து சண்டை
இந்நிலையில், பாகிஸ்தான் கடுமையான உணவுப்பஞ்சத்தை நோக்கி நகர்ந்து வருவதை உணர்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்குள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நகரில் அரங்கேறிய சம்பவங்கள்தான் இவை. அந்த வீடியோவில் கோதுமையை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். பின்னர் கடைகளில் கோதுமை தீர்ந்து போவது தெரிந்ததால், மக்கள் முண்டியடித்துக் கொண்டு கோதுமை மூட்டைகளை வாங்க முயற்சிக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்படுகிறது. ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொள்ளும் அவர்கள், பின்னர் கோதுமை மூட்டைகளை எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள். மற்றொரு பகுதியில் கோதுமை மூட்டைகள் வாங்கும் சண்டை ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சாக்கடையில் புரண்டு சண்டையிடுகிறார்கள். இந்த வீடியோக்கள் இணையத்தில் பரவி காண்பவர்களின் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.












Click it and Unblock the Notifications